Published:Updated:

`50 லட்ச ரூபாய் கணக்குக்கு போலி நகைகள்!' -ஐஓபி அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகொடுத்த கடலாடி ஊழியர்

நகை மோசடி நடந்த வங்கி
நகை மோசடி நடந்த வங்கி

விசாரணையின்போது அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்த சண்முகபாண்டி, திடீரென தான் வைத்திருந்த எலி மருந்தை உண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் ஒருவர், அதிகாரிகள்முன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலாடி ஐஓபி வங்கி
கடலாடி ஐஓபி வங்கி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் இந்த வங்கியின் கிளையில், முதுகுளத்தூரைச் சேர்ந்த சண்முகபாண்டி என்பவர் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த ஐஓபி வங்கியின் அதிகாரிகள் குழு, கடந்த 2 நாள்களாக கடலாடி ஐஓபி வங்கியில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

முதல்நாள் ஆய்வின்போது, வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளில் சில போலியானவை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். நேற்றும் ஆய்வைத் தொடர்ந்த அதிகாரிகளுக்கு, மேலும் அதிர்ச்சி தரும் வகையில் சுமார் 180 பவுன் நகைகளுக்கு மேல் போலி நகைகளாக இருப்பது தெரியவந்தது.

வங்கியில் நகை மோசடி செய்த சண்முகபாண்டி
வங்கியில் நகை மோசடி செய்த சண்முகபாண்டி

இதையடுத்து, வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வரும் சண்முகபாண்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்த சண்முகபாண்டி, திடீரெனத் தான் வைத்திருந்த எலி மருந்தை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த அதிகாரிகள், சண்முகபாண்டியை கடலாடி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வங்கி அதிகாரிகள் கடலாடி காவல் நிலையத்தில் நகை மோசடியில் ஈடுபட்ட சண்முகபாண்டி மீது புகார் அளித்துள்ளனர். வங்கியில் நடந்த ஆய்வுப்பணி நேற்று இரவு வரை நீடித்துள்ளது. இந்நிலையில், மோசடி செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சத்தைத் தாண்டும் எனவும், 5-க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் நடந்துள்ள இந்த மோசடியில்தான் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்த சண்முகபாண்டி, நேற்று காலை வங்கிக்கு வரும்போதே எலி மருந்தை எடுத்துவந்ததும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பெயரில் நடந்துள்ள இந்த மோசடியில், தான் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்தே நேற்று காலை வங்கிக்கு வரும்போது எலி மருந்தை எடுத்து வந்துள்ளார்.
போலீஸார்

இதையடுத்து, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளும் காவல் துறையினரும் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நகை மதிப்பீட்டாளர் சண்முகபாண்டியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலாடி வங்கியில் நடந்த இந்த நகை மோசடியில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு