Published:Updated:

``கமிஷனர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருப்பேன்!'' - ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவி போர்க்கொடி!

ஐ.பி.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த அருணா
ஐ.பி.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த அருணா

ஐ.பி.எஸ் அதிகாரி ஆனந்த் மீது அவரின் மனைவி அருணா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அருணா கூறியுள்ளார்.

வரதட்சணை புகாரில் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் அருணா. இவருடைய கணவர் ஆனந்த், ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு தற்போது ஹைதராபாத்தில் பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில், ஆனந்த் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார் அருணா.

அதில், ``யு.பி.எஸ்.சி தேர்வு பயிற்சி மையத்தில் ஆனந்த் என்பவர் அறிமுகமானார். 2016-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார். ஆனந்துக்கும் எனக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 500 பவுன் நகைகள் மற்றும் ரூ. 4 கோடி வரை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது.

திருமணத்தின்போது ஆனந்த், அருணா
திருமணத்தின்போது ஆனந்த், அருணா

மேலும், அதிக வரதட்சணை வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் சாலையில் என் பெற்றோருக்குச் சொந்தமான ஹோட்டலை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டுமென்று ஆனந்த்தும், அவரின் தாயார் மலர்க்கொடியும் என்னைக் கொடுமைப்படுத்தினர். இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஒரு வார காலத்துக்குள் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரியான ஆனந்துக்கு ஆதரவாகப் போலீஸார் செயல்படுகின்றனர்’’ என்று கூறியிருந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கு பதிவு செய்வதைத் தடுப்பதாக அருணா ஊடகங்களின் முன்பாக பகிரங்க குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.

சட்டத்தைக் காக்க வேண்டிய ஐ.பி.எஸ் அதிகாரி மீது வரதட்சணைப் புகார் எழுந்ததால் உண்மை விபரங்களை அறிய களம் இறங்கினோம். முதலில், அருணாவிடம் பேசினோம். ``எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சவங்க வழியாகத்தான் ஆனந்த் எனக்கு பழக்கமானார். எங்க வீட்டுலயும் பிடிச்சதால இருவரும் கல்யாணம் செய்துகொண்டோம். திருமணத்துக்குப் பிறகு, யு.பி.எஸ்.சி தேர்வு எழுதக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். ஆனால், நான் என்னோட லட்சியத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அவருடைய வீட்டில் கேட்ட அத்தனை வசதியையும் என்னுடைய அப்பா அம்மா செஞ்சு கொடுத்தாங்க. 500 பவுன் நகைகள், ரூ. 4 கோடி அளவுக்கு வரதட்சணை, விலை உயர்ந்த பீடில் ஃபோக்ஸ்வேகன் கார் வாங்கிக் கொடுத்தாங்க. இந்த காரோட விலை மட்டும் ரூ.35 லட்சம். ஒன்றரை வருஷம்தான் அவரோட வாழ்ந்தேன்.

அருணா
அருணா

கண்ணூர்ல இருந்தப்போ, எனக்குத் தெரியாம எங்க வீட்டுல வந்து வரதட்சணை கேட்டுருக்காங்க. மேலும் ஒரு கோடி ரூபாய் வரதட்சணை தர வேண்டும். எங்களுக்கு சொந்தமான ஆனந்தா ஹோட்டலை அவர் பெயருக்கு மாற்றி எழுதித்தரணும்னு தொந்தரவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் ஆனந்தா ஹோட்டலில் ஒரு மாடியில் இருந்து வரும் வாடகையைக்கூட அவர்தான் எடுத்துக்கொண்டிருந்தார். அவரோட வங்கிக் கணக்குல நாங்க மாசாமாசம் பணம் போட்டுடுவோம். என் பெற்றோரிடத்தில் மேலும் வரதட்சணை கேட்பது எனக்குத் தெரிய வந்ததும், `இப்படியெல்லாம் கேட்காதீங்க'ன்னு சொன்னேன்.

வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம்.. போலீஸ் தடியடி.. திடீர் பரபரப்பு! #NowAtVikatan

அதுல இருந்து எங்கிட்ட அவர் ஒழுங்காப் பேசுறதேயில்லை. எனக்கு மனரீதியாகப் பலவிதமான டார்ச்சர் கொடுத்தார். `நீ வீட்டைவிட்டு போனாத்தான் நான் வீட்டுக்குள்ளேயே வருவேன்’னு சொல்லிட்டார். கண்ணூர்ல இருந்து விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து என்னை சென்னைக்கு அனுப்பிவிட்டார். எனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, மனநிலை பாதிக்கப்பட்டவள் என்றெல்லாம் சித்திரித்து, எனக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார். என் மீது எந்தக்குற்றமும் கிடையாது. அவங்க சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவை. இதையெல்லாம் சட்டப்படி எதிர்கொள்வேன். அதனால, மீச்சுவலான விவாகரத்துக்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனந்த் மீது புகார் எடுக்கவில்லை என்றால், கமிஷனர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருப்பேன்!’’ என்று உறுதிபடக் கூறினார்.

அருணாவின் பெற்றோர் திருவள்ளுவர் சாலையில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பலருக்கும் தெரிந்த குடும்பமாக இவர்களின் குடும்பம் இருக்கிறது. அருணாவின் தாயாரிடத்தில் பேசியபோது, ``நாங்க அவங்களுக்கு வரதட்சணை கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். எங்கள் வீட்டில் நடந்த ரெய்டில் நகைகளை வருமானவரித்துறையினர் எடுத்துச்சென்று விட்டதாகச் சொல்கின்றனர். ஆனால், எங்கள் வீட்டில் 2007-ம் ஆண்டு வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. 700 பவுன் நகைகளை எடுத்துச் சென்றனர். 2013-ம் ஆண்டு நாங்கள் கணக்குக்காட்டி நகைகளை மீட்டோம். வெறும் 1.35 கிராம் நகைதான் வருமான வரித்துறையிடத்தில் இருக்கிறது. வருமான வரித்துறை திருப்பித்தந்த நகைகளைத்தான் வரதட்சணையாகக் கொடுத்தோம். மேயர் ராமநாதன் கல்யாண மண்டபத்தில்தான் திருமணம் நடத்த வேண்டுமென்று கூறியதால் அங்கேதான் திருமணம் நடத்தினோம். ஸ்விட்சர்லாந்து நாட்டுக்குத்தான் தேனிலவு போகவேண்டுமென்று மாப்பிள்ளை சொன்னதால் 8 லட்ச ரூபாய் செலவழித்து அனுப்பிவைத்தோம். ஆனால் இப்படிச் செய்வாரென்று எதிர்பார்க்கவேயில்லை!’’ என்று குமுறினார்.

அருணாவின் குற்றச்சாட்டு குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனந்திடம் கேட்டதற்கு, ``நாங்க பிரிஞ்சு பத்து மாசமாச்சு. குடும்ப நலக்கோர்ட்டில் கேஸ் நடந்துகிட்டு இருக்கு. மூன்று முறை கவுன்சலிங் நடந்து தோல்வியடைந்துவிட்டது. மீடியேசன் வேணும்னு அவங்கதான் கேட்டாங்க. இரண்டாவது முறையாக மீடியேசன் வரச்சொன்னப்போ, அந்த தேதியில வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த இடைவெளில இவங்க திடீர்னு போய் புகார் கொடுத்துருக்காங்க. நாங்க வரதட்சணையாக எதையும் வாங்கவில்லை. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

ஐ.பி.எஸ் அதிகாரி ஆனந்த்
ஐ.பி.எஸ் அதிகாரி ஆனந்த்

பயிற்சிக் காலத்துல வேற வேற இடத்துல இருந்தோம். சென்னை, ஹைதராபாத், அப்புறம் கண்ணூர்ல நாலு மாசம் இருந்தோம். கல்யாணத்துக்கு எந்த நகையும் வாங்கவில்லை. பணமும் வாங்கவில்லை. இதற்கெல்லாம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆதாரம் கொடுத்துவிட்டோம். வருமான வரித்துறையிடம் இருக்கும் நகைகளை வேண்டாமென்றும் கூறி விட்டோம். `பொண்ணு இருக்கிறதைப் போட்டுகிட்டு எங்க வீட்டுக்கு வரட்டும்'னு எங்க அப்பா சொல்லிட்டாங்க. எல்லாமே பொய்யான குற்றச்சாட்டு. எனது நல்லபெயரைக் கெடுக்கும்விதத்தில் அவர்கள் செயல்படுகின்றனர்!’’ என்றார்.

உண்மை என்றைக்காவது ஒருநாள் வெளிவந்தே தீரும்!

அடுத்த கட்டுரைக்கு