Published:Updated:

அன்றாடக் கூலிகளுக்கான வீடுகள் `அபகரிப்பு'... `பல கோடிகளைத் தொடும் ஊழல்?'

அடுக்குமாடிக் குடியிருப்புகள்
அடுக்குமாடிக் குடியிருப்புகள்

கரையோரத்தில் வசித்துவந்த மக்கள் தங்களது வாழ்விடங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று கடுமையாகப் போராடினார்கள். அன்றாடக் கூலிகளான அவர்களுக்கு அந்தக் கரையோரங்களில்தான் வாழ்வாதாரங்களும் இருந்தன

கூவம் மற்றும் அடையாற்றின் கரையோரங்களில் வாழ்விடம் பறிக்கப்பட்ட மக்களுக்காக, பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் சுமார் பத்தாயிரம் வீடுகளைப் போலி ஆவணங்களைத் தயார்செய்து அபகரித்திருக்கிறது அரசியல் கட்சியினர், அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று. `இந்த ஊழலில் புரளும் பணம் மட்டுமே சுமார் நூறு கோடிகளைத் தொடும்' என்று `பகீர்' கிளப்புகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழக அரசின் நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, 2014-15-ம் ஆண்டில் ஒரு திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆகிய நீர்நிலைகளின் கரையோரங்களில் வசித்துவந்த மக்களுக்கு மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மாற்று வீடுகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவை இணைந்து 2017-ம் ஆண்டு பணிகளைத் தொடங்கின.

அடுக்குமாடிக் குடியிருப்புகள்
அடுக்குமாடிக் குடியிருப்புகள்

இதற்கிடையே கரையோரத்தில் வசித்துவந்த மக்கள் தங்களது வாழ்விடங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று கடுமையாகப் போராடினார்கள். அன்றாடக் கூலிகளான அவர்களுக்கு அந்தக் கரையோரங்களில்தான் வாழ்வாதாரங்களும் இருந்தன.

மீன் மார்க்கெட், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூலித் தொழிலாளிகளாகவும், பெண்கள் சாலையோரங்களில் இட்லி சுட்டு விற்பது எனத் தங்களது வயிற்றுப்பாட்டைச் சமாளித்து வந்தனர். அவர்களின் பிள்ளைகளும் அருகிலிருந்த அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றார்கள். நகருக்கு வெளியே மாற்று வீடுகளைக் கொடுத்தாலும், அங்கு தங்களுக்கான வாழ்வாதாரங்கள் கிடைக்காது; பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் அச்சமாக இருந்தது.

ஆனால், எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் 'சென்னையை அழகுபடுத்தியே தீருவேன்' என்று, விடாப்பிடியாக அவர்களை வெளியே இழுத்துப்போட்டு ஆயிரக்கணக்கான வீடுகளுடன் அவர்களின் கனவுகளையும் தரைமட்டமாக்கியது அரசு 'இயந்திரம்.' இப்படியாக 54 குடிசைப் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அவர்களுக்காக நகரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தள்ளி, பழைய மாமல்லபுரம் சாலையில், சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் எட்டு மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளாக 21,000 வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 450 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் தோராயமாக 14 லட்சம் ரூபாயைத் தாண்டும்.

இந்தத் திட்டத்தில்தான் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உண்மையான பயனாளிகளுடன், போலி பயனாளிகளுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்து, கோடிகளில் கொழிப்பதாக அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சியினர்மீதும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக போலி ஆதார் ஆவணம் ஒன்று நமக்குக் கிடைத்தது.

அதுகுறித்த நமது விசாரணையுடன், முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2G8h7yy > அபேஸ் ஆகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் - ஊழல் கறையான்களின் அட்டகாசம்! https://bit.ly/2G8h7yy

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு