Published:Updated:

`என்னை யாரும் கடத்தல..!'- போலீஸாரிடம் கூறிய திருத்தணி அ.தி.மு.க பெண் கவுன்சிலர் எங்கே?

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பூங்கொடி
அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பூங்கொடி

திருப்பதியிலிருந்து அழைத்துவரப்பட்ட அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பூங்கொடி, என்னை யாரும் கடத்தல, உறவினர் வீட்டுக்குத்தான் சென்றிருந்தோம் என்று போலீஸாரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதற்குமுன் 2 வது வார்டு அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பூங்கொடியைக் காணவில்லை. அவரைக் கடத்திவிட்டதாக பூங்கொடியின் கணவர் கோட்டி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே திருச்சானூரில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர மாநில போலீஸாரின் உதவியோடு கவுன்சிலர் பூங்கொடி மற்றும் அவரின் 4 மாத ஆண் குழந்தை மற்றும் பூங்கொடியின் அம்மா வசந்தி ஆகியோரை போலீஸார் மீட்டனர்.

காவல் நிலையத்தில் கவுன்சிலர் பூங்கொடி
காவல் நிலையத்தில் கவுன்சிலர் பூங்கொடி

கவுன்சிலர் பூங்கொடி மற்றும் அவரின் அம்மா வசந்தி ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தபோது, எங்களை யாரும் கடத்தவில்லை. உறவினர் வீட்டுக்குத்தான் சென்றிருந்தோம் என்று கூறினர். இதையடுத்து கடத்தல் புகார் வாபஸ் பெறப்பட்டது. திருத்தணியில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பூங்கொடிக்கு என்ன நடந்தது என்று அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவியிடம் பேசினோம்.

``திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 12 வார்டுகளில் அ.தி.மு.க 4 இடங்களிலும் தி.மு.க 3 இடங்களிலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் அ.தி.மு.க-வின் கூட்டணி கட்சியான பா.ம.க ஒரு இடத்திலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட முடிவு செய்திருந்தோம். எங்களுக்கு சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தெரிவித்தால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

காவல் நிலையத்தில் கவுன்சிலர் பூங்கொடி
காவல் நிலையத்தில் கவுன்சிலர் பூங்கொடி

இந்தச் சமயத்தில் 2-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பூங்கொடியைத் தி.மு.க-வினர் கடத்தியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக பூங்கொடியின் கணவர் கோட்டி, காவல் நிலையத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். பூங்கொடி, அவரின் 4 மாத குழந்தை, அம்மா வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டனர். அவர்களின் போன் நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தீவிர தேடுதலுக்குப் பிறகு திருப்பதியிலிருந்து பூங்கொடி மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் பூங்கொடி தரப்பினர் மனம்மாறி வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார். இருப்பினும் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க வெற்றி பெறும்" என்றார்.

போலீஸார் கூறுகையில், ``ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலையொட்டி அ.தி.மு.க கவுன்சிலர் பூங்கொடி, குடும்பத்தினரோடு கடத்தப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி பூங்கொடி மற்றும் அவரின் குடும்பத்தினரை திருப்பதியிலிருந்து திருத்தணிக்கு அழைத்து வந்தோம். விசாரித்தபோது பூங்கொடி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிவிட்டார். அதனால் இந்த வழக்கில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றனர்.

திருத்தணி காவல் நிலையம்
திருத்தணி காவல் நிலையம்

இதுகுறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``திருத்தணி ஒன்றியத்தில் உள்ள வார்டுகளில் போட்டியிட சீட் கிடைக்காத அ.தி.மு.க-வினர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தற்போது தலைவர் பதவிக்கு வர அவர்கள் அ.தி.மு.க-வில் உள்ள சிலர் மூலம் காயை நகர்த்திவருகின்றனர். தி.மு.க-வைச் சேர்ந்த சிலரும் அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக உதவி வருகின்றனர். இந்தச் சமயத்தில் தேர்தலை நிறுத்த அ.தி.மு.க பெண் கவுன்சிலர் பூங்கொடியைத் தி.மு.க-வினர் கடத்தியதாகக் காவல் நிலையம் வரை புகார் கொடுக்கப்பட்டது. அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

பூங்கொடி, அவரின் குழந்தை மற்றும் அம்மா ஆகிய 3 பேரை போலீஸார் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தி.மு.க-வினர் சிலர் பூங்கொடி தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனால்தான் பூங்கொடி, தன்னையாரும் கடத்தவில்லை என்று கூறினார். பூங்கொடியின் கணவரும் மனைவியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன காரணத்தால் அவரைக் கடத்திவிட்டதாகப் புகார் கொடுத்ததாகக் கூறினார். அ.தி.மு.க பெண் கவுன்சிலரை தி.மு.க-வினர் கடத்திய சம்பவத்தில் சமரசம் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தற்போது பூங்கொடி குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்சித் தலைமை தலையிட்டு விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்" என்றனர்.

புகார் மனு
புகார் மனு
`இது இருந்தால்தானே..?' - தி.மு.க வேட்பாளர் வாக்குச்சீட்டுகளை விழுங்கி ஏப்பம்விட்ட பா.ம.க கவுன்சிலர்

திருத்தணி ஒன்றிய தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``திருத்தணி ஒன்றிய தி.மு.க-வில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் உறவினர்தான் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் பூங்கொடி. அ.தி.மு.க-வின் உட்கட்சி பூசல் காரணமாகப் பெண் கவுன்சிலர் பூங்கொடி கடத்தப்பட்டதாகத் தகவல் உள்ளது. அ.தி.மு.க கவுன்சிலர் கடத்தப்பட்டதற்கும் தி.மு.க-வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றனர்.

கவுன்சிலர் பூங்கொடி அவரின் கணவர் கோட்டி ஆகியோரை தொடர்புகொள்ள பலதடவை முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு