Published:Updated:

கள்ளக்குறிச்சி: `நானும் அவகூடவே எரிஞ்சு போறேன்!’ - தகன மேடையிலேயே உயிரை மாய்த்த காதலன்?

தற்கொலை
தற்கொலை

இடுகாட்டில் மாணவியின் உடல் எரிந்துகொண்டிருந்தபோதே, அந்த நெருப்பில் குதித்து காதலன் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் நித்யஸ்ரீ செவிலியர் படிப்பு படித்துவந்தார். ஆன்லைன் கல்விக்கு செல்போன் பயன்படுத்துவதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக விஷமருந்திய நித்யஸ்ரீ, கடந்த மாதம் 31-ம் தேதி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவி நித்யஸ்ரீ
உயிரிழந்த மாணவி நித்யஸ்ரீ

உடற்கூறாய்வுக்குப் பிறகு நித்யஸ்ரீயின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினமே மேட்டுநன்னாவரம் கிராமத்திலுள்ள இடுகாட்டில் நித்யஸ்ரீயின் உடல் தகனமும் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், 31-ம் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தனது மகன் ராமுவைக் (20) காணவில்லை என்று திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அத்துடன் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட அன்று இரவு இடுகாட்டுக்குச் சென்றதாக தனது மகனின் நண்பர்கள் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜிகுமார், மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜி, திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜி உள்ளிட்ட போலீஸார் நேற்று மாலை நித்யஸ்ரீயின் சடலம் எரிக்கப்பட்ட சுடுகாட்டுக்குச் சென்றனர்.

இடுகாட்டில் கைப்பற்ற தடயங்கள்
இடுகாட்டில் கைப்பற்ற தடயங்கள்

அங்கு எரிந்துகிடந்த சாம்பலுக்குள், கருகியநிலையில் கிடந்த ஒரு வாட்ச், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் எலும்புகளைக் கைப்பற்றிய போலீஸார், அவற்றை ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். டி.எஸ்.பி விஜிகுமாரிடம் பேசினோம். ``நித்யஸ்ரீயின் பெற்றோர், `செல்போனுக்காக எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்’ என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால், எங்கள் முதற்கட்ட விசாரணையில் நித்யஸ்ரீயிடமிருந்து அவரின் தந்தை செல்போனைப் பறித்ததற்காகத்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்திருக்கிறது. உயிரிழந்த நித்யஸ்ரீயும் ராமுவும் ஒருவரையொருவர் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இடுகாட்டில் ஆய்வு செய்யும் காவல் துறையினர்
இடுகாட்டில் ஆய்வு செய்யும் காவல் துறையினர்

31-ம் தேதி மாலை சென்னையிலிருந்து வந்த நித்யஸ்ரீயின் உடலை இரவு 8:30 மணிக்கு இடுகாட்டில் தகனம் செய்தார்கள். அந்த நேரத்தில் நண்பர்களுடன் இருந்த ராமு, `நித்யஸ்ரீயுடன் நானும் இறந்துவிடுகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

உடனே ராமுவின் நண்பர்கள், அவரின் அப்பாவிடம் இந்தத் தகவலை தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து இரவு சுமார் 10 மணிக்கு இடுகாட்டுக்குச் சென்ற அவர்கள், அங்கிருந்த எட்டு ஊழியர்களிடமும் ராமு குறித்து விசாரித்திருக்கின்றனர். அப்படி யாரும் வரவில்லை என்று கூறிய அவர்கள் 11 மணிக்கு அங்கே அமர்ந்து சாப்பிட்டிருக்கின்றனர்.

டி.எஸ்.பி விஜிகுமார்
டி.எஸ்.பி விஜிகுமார்

அந்த நேரத்தில்தான் ராமு நித்யஸ்ரீயின் சடலம் எரிந்துகொண்டிருந்த தீயில் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்போது `ஐயோ... ஐயோ வலிக்குது’ என்று அலறியிருக்கிறார். இறந்து எரிந்துகொண்டிருக்கும் உடலிலிருந்து சத்தம் வந்ததால், அங்கிருந்த எட்டு பணியாளர்களும் பயத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக விசாரணையில் எங்களிடம் கூறினார்கள்.

இடுகாட்டுச் சாம்பலில் எடுக்கப்பட்ட வாட்ச் தனது மகனுடையதுதான் என்று ராமுவின் தந்தை உறுதிப்படுத்தியிருக்கிறார். தீவிர விசாரணையை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

Vikatan

ராமுவின் உறவினர்களிடம் பேசியபோது, ``நித்யஸ்ரீ உயிரிழந்த தகவல் கிடைத்த அன்று மனமுடைந்து போயிருக்கிறார் ராமு. அப்போது அவரைச் சமாதானப்படுத்திய நண்பர்களிடம், `நித்யாவை புதைப்பாங்களா இல்லை எரிப்பாங்களா?’ என்று கேட்டிருக்கிறார். `ஏன் கேக்குறே?’ என்று கேட்ட நண்பர்களிடம், `என் ஆளு இல்லாத உலகத்துல நான் ஏன் இருக்கணும்... புதைச்சா அவகூடவே நானும் புதைஞ்சுக்கறேன். எரிச்சா நானும் அவகூடவே எரிஞ்சி போயடுறேன்’ என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் அந்த முடிவை எடுத்திருக்கலாம்’ என்றனர் சோகமாக.

அடுத்த கட்டுரைக்கு