Published:Updated:

சென்னைக்கு ஆந்திராதான் கஞ்சா குடோன்; `சப்ளை பாய்ஸ்’ டெலிவரி - `போதை ஹப்’ ஆகிறதா தலைநகரம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்ட்ரல் ரயில் நிலையம் - சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் - சென்னை

இந்தியாவில் `ஐடி ஹப்’ என பெங்களூரையும், `மெடிக்கல் ஹப்’ எனச் சென்னையையும் சொல்வார்கள். மருத்துவத்துறைக்கே தலைமையிடம்போல விளங்கிய சென்னை, இன்று போதை ஹப் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை போரூரில், இரு தினங்களுக்கு முன்பு காரில் கடத்திச் செல்லப்பட்ட 300 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஒரே நாளில், ஒரே இடத்தில் மட்டுமே 300 கிலோ பறிமுதல் என்றால்... சென்னை முழுக்க எத்தனை கிலோ கஞ்சா புழக்கத்தில் இருக்கும் என யோசித்தால் தலைசுற்றும்.

இது பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``ஒருகாலத்தில் சென்னையில் கஞ்சா ஒருவருக்குத் தேவைப்பட்டால் பல நாள்களுக்கு முன்பே முன்பணம் கொடுத்து காத்திருப்பார்கள். ஆனால், இப்போதோ வீதிக்கு வீதி கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது. 10 கிராம்கொண்ட சிறிய கஞ்சா பொட்டலம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தான் லோக்கல் போதை ஆசாமிகள் வாங்கிப் புகைக்கிறார்கள். சென்னைத் தெருக்களில் ஆங்காங்கே ஏஜென்ட்டுகளின் ஆட்கள் கஞ்சா பொட்டலங்களோடு அமர்ந்திருப்பார்கள். பார்த்தால் சந்தேகம் வராதவண்ணம் நடந்துகொள்வார்கள்.

மதுரை டு தூத்துக்குடி; பைக்கில் கஞ்சா கடத்தல்! - சிக்க வைத்த சிசிடிவி

இவர்களிடமிருந்து டூ வீலரில் வரும் நவநாகரிக இளைஞர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கிக்கொள்கிறார்கள். இவர்கள்தான் சப்ளை பாய்ஸ். புதிதாக வரும் ஒரு வாடிக்கையாளர் கஞ்சா வேண்டுமென்று அணுகினால், அவரை ஒரு சாலையில் நிறுத்திவிட்டு, இந்த சப்ளை பாய்ஸ்தான் டெலிவரி செய்கிறார்கள். ஒருவேளை, வந்த வாடிக்கையாளர் ஸ்பெஷல் போலீஸ் டீம் என்றால் தப்பித்துக்கொள்ளவே இந்த ஏற்பாடு. பழகிய வாடிக்கையாளர் என்றால் ஏஜென்ட்டுகளிடமிருந்தே நேரடியாக கஞ்சாவை வாங்கிக்கொள்ளலாம். போன் செய்தால் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் வேலையையும் இந்த சப்ளை பாய்ஸ் குரூப் செய்துவருகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது 2,000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்பதால், இளைஞர்கள் அதிகம் பேர் கஞ்சா சப்ளை பிசினஸில் ஈடுபட்டுவருகின்றனர்.

கஞ்சா
கஞ்சா

பெரியவர்கள் கஞ்சா இழுப்பதைப் பார்த்து, இளைஞர்கள் கெட்டுப்போனார்கள். இளைஞர்களைப் பார்த்து தற்போது 18 வயதுக்குட்பட்ட சிறியவர்களே கஞ்சாவைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். கடைகளில் சிறியவர்கள் வந்து பீடி, சிகரெட் கேட்டால் கடைக்காரர்கள் கொடுக்காமல் இருந்தாலே சிறியவர்களின் கஞ்சா பழக்கம் வெகுவாகக் குறையும் வாய்ப்பிருக்கிறது. காரணம், பெரும்பாலும் அதில்தான் கஞ்சாவை வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், காசுக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளும் மறைமுகமாக கஞ்சா விற்பனைக்கு ஒத்துப்போகிறார்கள்” என்றார்.

`இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை

சென்னையில் கஞ்சா புகைக்கும் இடங்கள் என அறியப்பட்ட சில இடங்களில் சுற்றிவந்தோம். தி.நகரில் ஒரு தனியார் நகைக்கடை பின்புறமிருக்கும் சோமசுந்தரம் விளையாட்டுத்திடலில் கஞ்சா புழக்கம் இருப்பதாக நமக்குத் தகவல் கிடைக்கவே, அங்கு சென்றோம். பகல் வெயிலிலும் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க, திடலின் நான்கு மூலைகளிலும் மரத்தின் நிழலில் சிறு சிறு குழுக்கள் அமர்ந்துகொண்டிருந்தன. நண்பருடன் நாமும் அவர்கள் அருகில் சென்று அமர்ந்து பேசுவதுபோல நோட்டமிட்டோம்.

போலீஸ் பறிமுதல் செய்த காரும் கஞ்சா பார்சல்களும்...
போலீஸ் பறிமுதல் செய்த காரும் கஞ்சா பார்சல்களும்...
ஃபைல் படம்

சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தனர், அந்தப் பகுதி முழுக்கவே கஞ்சா வாசனையைத் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது. திடல் அருகில்தான் பாண்டி பஜார் காவல் பூத் இருக்கிறது. ஆனால் அது, யாருமில்லாமல் பூட்டிக்கிடக்கிறது. இதேபோல், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், ராயப்பேட்டை மருத்துவமனை மேம்பாலம் கீழ், கோடம்பாக்கம் டிரஸ்டுபுரம் விளையாட்டுத்திடலில், வடபழனி, அரும்பாக்கம் நூறடி சாலை ஆகிய இடங்களில் கஞ்சா புழக்கம் அதிகமிருக்கிறது. இதுமட்டுமின்றி, நந்தனம், கிண்டி, ராமாபுரம், கே.கே.நகர், அசோக் நகர், கோயம்பேடு, பாடி, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அமைந்தகரை, சூளைமேடு பகுதிகளிலும் கஞ்சா புழக்கம் சமீபகாலமாக அதிகரித்துக் காணப்படுகிறது. தென் சென்னையின் பல இடங்களில் கஞ்சா புழக்கம் சக்கைபோடு போடுகிறது. வடசென்னைப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆந்திரா டு தஞ்சாவூர்; காரில் 120 கிலோ கஞ்சா! - பிரபல கஞ்சா வியாபாரி உட்பட 9 பேர் கைது

சென்னைக்கு எங்கிருந்து கஞ்சா வருகிறது? என்று விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம்.

``சென்னைக்கு எப்போதுமே ஆந்திராதான் கஞ்சா குடோன். ஆந்திராவிலிருந்து சென்னைக்கு எந்தெந்த வழிகளில் வரலாமோ அத்தனை வழிகளிலும் கஞ்சா எடுத்துவரப்படுகிறது. டூ வீலர், காய்கரி வேன், ஆட்டோ எனப் பலதரப்பட்ட வாகனங்களிலும் கஞ்சா அள்ளிவரப்படுகிறது. கஞ்சா வரும் வழியும், வாகனம் குறித்த தகவலும் காவல்துறைக்குத் தெரிந்தும், பெரும்பாலும் ஆக்‌ஷன் எடுப்பதில்லையாம். அந்த அளவுக்குச் சென்னையிலுள்ள காவல் நிலையங்களுக்கு கஞ்சா வியாபாரிகளிடமிருந்து மாத கமிஷன் செல்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. காவல்துறை மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அவ்வப்போது சில கிலோ கஞ்சாக்களைப் பறிமுதல் செய்வார்கள்” என்றனர்.

கஞ்சா இலை
கஞ்சா இலை

இந்தியாவில் `ஐடி ஹப்’ என பெங்களூரையும், `மெடிக்கல் ஹப்’ என சென்னையையும் சொல்வார்கள். மருத்துவத்துறைக்கே தலைமையிடம்போல விளங்கிய சென்னை, இன்று போதை ஹப் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது என வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள். பெரியவர்களுக்கு மட்டுமிருந்த கஞ்சா பழக்கம் சிறியவர்கள் வரை தொற்றிக்கொண்டுவிட்டதால், காவல்துறையோ, அரசோ இப்போது தடுக்காவிட்டால் அடுத்த தலைமுறை மிகக் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டும் நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு