மருத்துவமனையின் 4-வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்! - வேலூர் சர்ச்சை

வேலூரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மாடியிலிருந்து கீழே குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி `சந்தியா' மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சந்தியா பாபு என்பவர் மருத்துவமனையின் இயக்குநராக இருக்கிறார். இந்த மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரைச் சேர்ந்த விஷ்வா என்பவரின் மனைவி சோனு (28), பிரசவத்திற்காக சந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் குழந்தை பிரசவித்த நிலையில் வீடு திரும்பியிருக்கிறார் சோனு. நேற்று திடீரென உடல்வலி ஏற்பட்டதால் மாலை 4 மணியளவில் சந்தியா மருத்துவமனைக்கு கணவருடன் வந்திருக்கிறார் சோனு.
கணவர் டோக்கன் போடச் சென்றுவிட, சோனு திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடிக்குச் சென்று கீழே குதித்திருக்கிறார். இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது ஏன் என்பதை அறிய சந்தியா மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.
``சோனு என்ற பேஷன்ட்டுக்கு லாஸ்ட் வீக்தான் டெலிவரி ஆச்சு. நேற்று மாலை உடல்வலியோடு மருத்துவமனைக்கு வந்தவர் திடீரென மேலேயிருந்து குதிச்சுட்டாங்க. என்ன காரணம்னு தெரியலை. அவர் கீழ குதிச்சப்போ நடுவுல தொங்கிட்டிருந்த ஒயர்ல சிக்கி ஸ்கூட்டர் மேல விழுந்துட்டாங்க. ஷோல்டர்ல மட்டும் காயம் ஏற்பட்டிருக்கு. உயிருக்கு ஆபத்து இல்லை. போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டோம்" என்றனர்.

இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ``சந்தியா மருத்துவமனையில் அப்படியொரு சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை. எந்தப் புகாரும் வரவில்லை’’ என்றனர்.