Published:Updated:

`முதல் ஊசியில் மயங்கினாள்; அடுத்த ஊசியில்..!'- தவறான சிகிச்சையால் உயிரிழந்தாரா சென்னை இளம்பெண்?

சென்னையில் சிகிச்சைக்குச் சென்ற இளம்பெண் நித்யாவுக்கு, மருத்துவமனையில் ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்தப் பெண் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இளம்பெண் நித்யா
இளம்பெண் நித்யா

சென்னை குன்றத்தூர் தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரின் மனைவி அற்புதமேரி. இந்தத் தம்பதியின் ஒரே மகள் நித்யா (23). இவர் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். வேலை தேடிக்கொண்டிருந்த நித்யா, டைப்ரைட்டிங் வகுப்புக்குச் சென்று வந்தார். இந்தச் சமயத்தில் நித்யாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அனகாபுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரின் அம்மா அற்புதமேரி நேற்று அழைத்துச் சென்றார். அப்போது நித்யாவைப் பரிசோதித்த டாக்டர் ஊசி போட்டுள்ளார். அதன்பிறகும் நித்யாவின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் நித்யாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர் தெரிவித்துள்ளார்.

நித்யா
நித்யா

இதையடுத்து அவரின் அம்மா அற்புதமேரி, நித்யாவை அழைத்துக்கொண்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டுசெல்லும்படி கூறியுள்ளனர். இதனால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நித்யாவை அற்புதமேரி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நித்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதனால் அற்புதமேரி கதறி துடித்தார். இந்தத் தகவல் நித்யாவின் உறவினர்களுக்குத் தெரிந்ததும் அவர்களும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

நித்யாவின் மாமா சிவராஜிடம் பேசினோம். ``நித்யாவுக்கு இருமல் தொல்லை இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற முதல் தடவையாக அனகாபுத்தூரில் உள்ள அந்த மருத்துவமனைக்கு அற்புதமேரி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர், நரம்பு ஊசியை நித்யாவுக்குப் போட்டுள்ளார். உடனே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அற்புதமேரி டாக்டரிடம் தகவலைக் கூறியுள்ளார். உடனே இன்னொரு ஊசி மருத்துவமனையில் நித்யாவுக்கு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நித்யாவின் உடலில் எந்தவித அசைவும் இல்லை" என்று கூறியவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. சிறிது நேர அமைதிக்குப்பிறகு பேசத் தொடங்கினார்

ஊசி
ஊசி

``நித்யாவின் அப்பா சிவா, மாற்றுத்திறனாளி. அவர், எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைபார்த்து குடும்பத்தை நடத்திவந்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்தக் குடும்பத்தில் கஷ்டப்பட்டு நித்யாவை படிக்க வைத்தனர். நித்யாவும் கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலை தேடியபடி டைப்ரைட்டிங் கிளாஸுக்கும் செல்வார். இருமலுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏதோ ஒரு நரம்பு ஊசியைப் போட்டு நித்யாவைக் கொலை செய்துவிட்டார்கள்.

நித்யாவுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீதும் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கக்கூறி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். மேலும், நித்யாவின் பிரேதப் பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறினோம். இதனால் நித்யாவின் சடலத்தை நேற்று மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நேரமானதால் இன்று காலை பிரேதப் பரிசோதனை செய்வதாகக் கூறினார்கள். ஆனால், இன்று காலை வீடியோ பதிவு செய்யாமல் பிரேதப் பரிசோதனை செய்வதாக ஊழியர்கள் கூறினர்.

ஊசி
ஊசி

அதைக் கண்டித்து அனகாபுத்தூர் சாலையில் இன்று காலை நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். தகவலறிந்து வந்த போலீஸார் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நித்யாவின் பிரேதப் பரிசோதனை வீடியோ மூலம் பதிவு செய்யப்படும் என போலீஸார் உறுதியளித்துள்ளனர். நித்யாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார் கண்ணீர்மல்க

கல்லூரி படித்த நித்யாவின் தம்பி, வறுமை காரணமாக அதை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். நித்யாவைதான் அந்த ஒட்டுமொத்த குடும்பமும் நம்பியிருந்த சமயத்தில் இப்படியொரு மரணம் நித்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. இது, நித்யா குடும்பத்தை மட்டுமல்ல, அவரின் உறவினர்களையும் அவர் குடியிருக்கும் பகுதியில் இருப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கர் நகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``நித்யா மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் நித்யாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.