Election bannerElection banner
Published:Updated:

வெடி பொருள்களுடன் அம்பானி வீடு அருகே நின்ற காரின் உரிமையாளர் கொலை! -போலீஸ் அதிகாரிக்குத் தொடர்பா?!

போலீஸ் அதிகாரி சச்சின்
போலீஸ் அதிகாரி சச்சின்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டுகளுடன் நின்ற கார் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டதில் போலீஸ் அதிகாரி சச்சின் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக வந்த புகாரையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று அரசு அறிவித்துள்ளது.

மும்பையின் தென்பகுதியிலுள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வெளியில் சமீபத்தில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கார் கிரண் என்பவருக்குச் சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் கிரணிடம் விசாரித்தபோது அம்பானியின் வீட்டுக்கு அருகில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட கார் தன்னிடமிருந்து திருடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்த ஓரிரு நாள்களில் மும்பை அருகிலுள்ள கல்வா கழிமுகப்பகுதியில் இறந்துகிடந்தார். ஆரம்பத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று கருதப்பட்ட நிலையில் உடலை மீட்டு பரிசோதனை செய்ததில், அவர் கடலில் விழுவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அனில் தேஷ்முக்
அனில் தேஷ்முக்

போலீஸாரின் விசாரணையில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாக், கொலை செய்யப்பட்ட கிரணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கிறது. அதோடு சில மாதங்களாகக் காணாமல்போன காரையும் சச்சின்தான் பயன்படுத்திவந்திருக்கிறார். சச்சின் வாக்-தான், தனது கணவரைக் கொலை செய்து கடலில் வீசியதாக கிரணின் மனைவி குற்றம்சாட்டியிருக்கிறார். இதையடுத்து சச்சினைக் கைதுசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை மத்திய அரசு திடீரென தேசியப் புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும் என்று தெரிவித்தது. ஆனால், மும்பை போலீஸார்தான் இதை விசாரிப்பார்கள் என்று மாநில அரசு தெரிவித்தது. அதோடு சமீபத்தில் மும்பையில் எம்.பி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு விசாரணையையும் மும்பை போலீஸார் தீவிரப்படுத்தப்போவதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தற்கொலையில் பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தற்கொலை செய்துகொண்ட எம்.பிமோகன் தனது கடிதத்தில் எழுதிவைத்திருக்கிறார். மும்பை போலீஸார் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன், அம்பானி வீட்டுக்கு அருகே நின்ற கார் உரிமையாளர் கொலை வழக்கு விசாரணையிலிருந்து தேசிய புலனாய்வு ஏஜென்சி பின்வாங்கியது. இந்தப் பிரச்னை மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் எழுப்பப்பட்டது. பா.ஜ.க-வின் பிரவீன் எழுந்து ``போலீஸ் அதிகாரி சச்சின் விஷயத்தில் அரசு என்ன முடிவு செய்திருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ``விசாரணை பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக சச்சின் குற்றப்பிரிவிலிருந்து வேறு ஒரு துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவார்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து குறுக்கிட்ட பிரவீன், `மாநில அரசின் முடிவில் எங்களுக்கு திருப்தியில்லை. அரசு சச்சினைப் பாதுகாக்க நினைக்கிறது.

அம்பானி வீட்டின் நுழைவு வாயில்
அம்பானி வீட்டின் நுழைவு வாயில்

சச்சினை இடமாற்றம் செய்தால் மட்டும் போதாது. அவரை சஸ்பெண்ட் செய்து கைதுசெய்ய வேண்டும். கொலைக் குற்றத்துக்கு ஆளாகும் போலீஸ் அதிகாரியை இடமாற்றம் செய்வது தீர்வாகாது. அப்படிச் செய்தால் போலீஸாரின் மதிப்பு பாதிக்கப்படும். எனவே, சச்சின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சச்சின் ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். இதற்கு முன்பு மும்பையில் மாஃபியாக்கள் அதிகமாக இருந்த போது 60-க்கும் மேற்பட்ட கிரிமினல்களை என்கவுன்ட்டர் செய்திருக்கிறார். போலீஸ் காவலில் கைதி ஒருவர் இறந்தது தொடர்பாக 2004-ம் ஆண்டு பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அதோடு 2008-ம் ஆண்டு தன்னை சிவசேனாவிலும் இணைத்துக்கொண்டார். எனவேதான் மாநில அரசு அவரைக் காப்பாற்ற முயல்வதாக பா.ஜ.க குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு