Published:Updated:

`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?

டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!

டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன.

`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?

டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன.

Published:Updated:
டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!

`பொது இடங்களில் மது அருந்துதல் சட்டப்படி குற்றம். ஆனால், அந்தக் குற்றம் சென்னை மாநகராட்சின் பல்வேறு இடங்களில் மிகவும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன. மேலும், இதைக் கண்டும் காணாதபோல காவல்துறையினர் கடந்து செல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன'

டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!
டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!

`பஸ் ஸ்டாப்பா... பார்-ஆ?'

தி.மு.க இளைஞரணி தலைவரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில்தான் நாள்தோறும் இந்த அவலம் நடந்து வருகிறது. திருவல்லிக்கேணி முக்கியச் சாலையைப் பொறுத்தவரையில் வணிக வளாகங்கள், உணவகங்கள், பள்ளிகள், சர்ச், மசூதி, கோவில்கள் என பகுதி முழுவதும் முக்கிய இடங்களால் நிறைந்திருக்கும். இதனால், பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும். பரபரப்பான இந்த திருவல்லிக்கேணி முக்கிய சாலையில்தான் `கெல்லட் ஸ்கூல்' பேருந்து நிலையம் இருக்கிறது. அதன் அருகிலேயே அமைந்திருக்கிறது ஒரு டாஸ்மாக் (கடை எண்: 812) கடை! இங்கிருந்துதான் பிரச்னையே தொடங்குகிறது.

காலை 11.59 மணி வரைக்கும் இயல்பாக இருக்கும் இந்த வீதி, சரியாக மதியம் 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை ஷட்டர் திறக்கப்பட்டதும் அதன் இயல்பை மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு, போக்குவரத்து என எல்லா விதிமுறைகளையும் மீறிவிடுகிறது. ஆம், அதுவரை பாதசாரிகள்போல சாலையின் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருக்கும் `குடிமகன்கள்'(!) டாஸ்மாக் கதவு திறக்கப்பட்டதும் அடித்துபிடித்துக்கொண்டு ஈக்களாக மொய்த்துவிடுகின்றனர். அதன்பிறகு நடக்கும் அவலங்களை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரித்துவிட முடியாது.

டாஸ்மாக், திருவல்லிக்கேணி
டாஸ்மாக், திருவல்லிக்கேணி

டாஸ்மாக்கிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வரும் கூட்டம் கும்பல் கும்பலாக பேருந்து நிலைய இருக்கைகளை அடைத்துக்கொண்டு அமந்துகொள்கின்றனர். அருகிலிருக்கும் பெட்டிக் கடைகளில் பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் புட்டிகள், சைடிஷ்களை வாங்கிவந்து அப்படியே அமர்ந்தபடி சாவகசமாக மது அருந்துகின்றனர். அங்கேயே மது அருந்தும்போது ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும், ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்துக்கொள்வதும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. மேலும், மது போதையில் பலர் அங்கேயே வாந்தி எடுப்பதும், அதிலேயே அரைநிர்வாணமாக படுத்துருள்வதும் காண்போரை அருவறுக்கச் செய்கிறது.

கெல்லட் ஸ்கூல் பேருந்து நிலையத்தில் மது அருந்தும் காட்சி
கெல்லட் ஸ்கூல் பேருந்து நிலையத்தில் மது அருந்தும் காட்சி

உச்சபட்சமாக போதை தலைக்கேறியவர்கள் `மக்கள் பயணிக்கும் பொது இடம்' என்றுகூட பாராமல் சிறுநீர் கழிக்கின்றனர். அந்த இடமே மதுவும், வாந்தியும், சிறுநீரும் கலந்து நாற்றம் குடலைப் பிரட்டுகிறது. குடித்து முடித்த பின்னர் காலி பாட்டில்கள், குப்பைகளை அந்த இடத்திலேயே போட்டுச் செல்கின்றனர். இந்தக மோசமானக் காட்சிகளைப் பார்க்கும் மக்கள் தலையில் அடித்துக்கொண்டும், மூக்கைப் பொத்திக்கொண்டும் வேகமாக இடத்தை கடந்து செல்கின்றனர். இதில் இன்னும் கொடுமையாக, இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் இடத்தை விட்டு நகர்ந்து தொலைதூரத்தில் தள்ளி நிற்கின்றனர். இன்னும் சிலரோ அடுத்த பஸ் ஸ்டாப்பை நோக்கியே நகர்ந்து சென்றுவிடுகின்றனர்.

`கமிஷன் வாங்கிக்கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை!'

இத்தனைக்கும் இந்த பேருந்து நிலையத்தில், ``D3 காவல்துறை அறிவிப்பு - இங்கு மது அருந்தக்கூடாது. பொது இடத்தில் மது அருந்தினால் தண்டணைக்குரிய குற்றம்...இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என D3 காவல்நிலைய அதிகாரிகளால் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. ``வெறும் கண் துடைப்புக்காக வைக்கப்பட்ட போர்டுகள்தான் இவை. உண்மையில், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை!'' என்கிறார்கள் அருகாமை வாசிகள்.

கெல்லட் ஸ்கூல் பேருந்து நிலையத்தில் மது அருந்தும் காட்சி
கெல்லட் ஸ்கூல் பேருந்து நிலையத்தில் மது அருந்தும் காட்சி

நாள்தோறும் நடந்துவரும் இந்த சம்பவங்கள் குறித்து அருகிலிருக்கும் குடியிருப்புவாசி ஒருவரிடம் பேசியபோது, ``நீங்க உங்க கண்முன்னாடி பாக்குற இந்த அவலம் எங்களுக்கொன்னும் புதுசு இல்ல! ரொம்ப வருஷமா இதே நிலைமையிலதான் வாழ்ந்துட்டு வரோம். இது சம்மந்தமா போலீஸ் ஸ்டேஷன்ல பலதடவை கம்ளைண்ட் பண்ணியும் பார்த்துட்டோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கல! காரணம், டாஸ்மாக் கடையிலருந்து போலீஸ்க்கு மாசம் கமிஷன் போகுது! அதனாலதான், அந்த டாஸ்மாக் கடையில காலைல 6:00 மணிக்கே `பிளாக்'ல சரக்கு விக்கிறது தெரிஞ்சும் காவல்துறை அதிகாரிகள் கண்டுக்காம இருக்காங்க!" என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

D3 காவல்நிலைய அதிகாரிகளால் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
D3 காவல்நிலைய அதிகாரிகளால் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி?

பல ஆண்டுகளாக தாங்கள் சந்தித்தும், சகித்தும் வரும் இந்த டாஸ்மாக் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே திருவல்லிக்கேணி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த தொகுதி மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

உதயநிதி!
உதயநிதி!
சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரையில், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று பகுதிகளையும் சேர்த்து மொத்தமாக 460 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில், சுமார் 400 டாஸ்மாக் கடைகளில் பார் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக் அமைந்திருக்கும் சென்னையின் பெரும்பாலான இடங்களிலும் இதே நிலைதான் என்கின்றனர் பொதுமக்கள்!