Published:Updated:

`ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்; வில்சன் கொலையாளிக்கு உதவி?!’- தேவிபட்டினத்தில் சிக்கிய மூவரால் பரபரப்பு

தேவிபட்டினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.
தேவிபட்டினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள். ( உ.பாண்டி )

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட முயன்றதாக கைதான இவர்கள் மூவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஆட்களை திரட்ட திட்டமிட்ட 3 பேர் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் போலீஸாரிடம் சிக்கினர். தப்பியோடிய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் பிச்சைக்கனி
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் பிச்சைக்கனி
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் என்.ஐ.ஏ வழக்கில் தொடர்புடையவர்கள் 4 பேர் குழுவாகப் பேசிக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு தேவிப்பட்டினம் சார்பு ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போலீஸார் சென்றனர். போலீஸாரைப் பார்த்தவுடன் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேரும் தப்ப முயன்றனர். இவர்களைச் சுற்றிவளைத்த போலீஸார், கீழக்கரை அருகே உள்ள கும்புடுமதுரை என்ற பகுதியைச் சேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனியைச் சேர்ந்த முகமது அலி என்ற மணிகண்டன், விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முகம்மது அமீர் என்ற அருண்குமார் ஆகிய மூவரை பிடித்தனர். போலீஸார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பிச் சென்ற மற்றொரு நபர் சேக் தாவுது எனவும் தெரியவந்தது.

இவர்கள், களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி அப்துல் அமீமிற்கு பணப் பரிவர்த்தனை செய்தது குறித்தும், மேலும் தங்கள் இயக்கத்துக்கு தேவிப்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடச் செய்யவும், அப்படி சேர்பவர்களுக்கு தேவிப்பட்டினம் மற்றும் கீழதில்லையேந்தல் பகுதிகளில் உள்ள மதரசாக்களில் பயிற்சி அளிப்பதுடன், பயிற்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் குறித்தும் விவாதித்துக்கொண்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகம்மது அலி
முகம்மது அலி
உ.பாண்டி

மேலும், இவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில் தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்து இது தொடர்பாக பேசியதும், மதங்களையும் அரசியல் தலைவர்களையும் அவதூறாகப் பேசிய ஆடியோ மூலம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கத் திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து மதரீதியான பிரசார புத்தகங்களையும் போலீஸார் கைப்பற்றினர்.

முகம்மது அமீர்
முகம்மது அமீர்
உ.பாண்டி

இதையடுத்து, தேவிப்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையிலான போலீஸார், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்து மக்களின் மனதில் பயத்தையும், பீதியையும் உருவாக்குவதுடன், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட முயன்ற இவர்கள் மூவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் போலீஸாரிடம் சிக்கிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு