Published:Updated:

செல்போன் சுவிட்ச் ஆஃப்... பதறிய மனைவி... கடைசி போன் கால்!- இஸ்ரோ ஊழியர் கொலையில் சிக்கிய நண்பர்

இஸ்ரோ ஊழியர் கொலை வழக்கில் சமீபகாலமாக அவரது நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

Suresh
Suresh ( Twitter )

கேரளாவைச் சேர்ந்த 56 வயதான சுரேஷ் என்பவர் இஸ்ரோவில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையத்தின் போட்டோகிராபர் பிரிவில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ் கடந்த 20 வருடங்களாக ஹைதராபாத்தில் உள்ள அமர்பேட்டில் இருக்கும் அன்னபூர்ணா குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். வங்கி ஊழியரான அவரின் மனைவி சென்னையிலும், இவர்களின் பிள்ளைகள் அமெரிக்கா மற்றும் டெல்லியில் வசித்துவருகின்றனர்.

ISRO
ISRO

இந்த நிலையில் சுரேஷ், நேற்று முன்தினம் பணிக்குச் செல்லவில்லை. அவரின் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த அவரின் மனைவி, ஹைதராபாத்தில் உள்ள நண்பர்களைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, சுரேஷ் தங்கியிருக்கும் குடியிருப்புக்குச் செல்லும்படி நண்பர்களிடம் கூறியுள்ளார். அதற்குள் சுரேஷ் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

`பணிக்கும் வரல; போனையும் எடுக்கல!’ - ஹைதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானிக்கு நேர்ந்ந சோகம்

காவலர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார் சுரேஷ். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சுரேஷின் தலையில் பலத்த அடிபட்டதே அவரது இறப்புக்கான காரணமாக இருக்கலாம் எனக் காவலர்கள் சந்தேகித்துள்ளனர். அவரின் இறப்பைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Murder
Murder

முதற்கட்ட விசாரணை பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள காவல் அதிகாரி, ``சம்பவம் நடந்த அன்று மாலை 5:30 மணிக்கு சுரேஷ் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் 7:30 மணிக்கு பிரபாகர் என்ற ஒருவருக்கு போன் செய்து வாஷிங்மெஷின் பற்றி விசாரித்துள்ளார். அதுதான் சுரேஷ் பேசிய கடைசி போன் கால். அதன் பிறகு அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மற்றும் சுரேஷின் போன் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.

மேலும், சமீபகாலமாக 27 வயது ஸ்ரீனிவாஸ் என்ற இளைஞர் தினமும் சுரேஷின் வீட்டுக்கு வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சுரேஷும் ஸ்ரீனிவாஸிடம் நிறைய முறை போனில் பேசியுள்ளார். சுரேஷ் இறந்த அன்றைய தினமும் ஸ்ரீனிவாஸ் கட்டாயம் சுரேஷ் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

Death
Death

சுரேஷுக்கு குடும்ப நிலை, பொருளாதார நிலை போன்ற அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. அதனால், பெரும்பாலும் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். பிரேதப் பரிசோதனையின் முடிவில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும். அதன் பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.