Published:Updated:

சென்னை: இசைப் பயிற்சிக்கு வந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - புல்லாங்குழல் ஆசிரியருக்குச் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சென்னை, மயிலாப்பூரில் இசைப் பயிற்சிக்காக வந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புல்லாங்குழல் ஆசிரியருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தென்சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சென்னை, மயிலாப்பூரிலுள்ள மார்வாடி தோட்டம் பகுதியிலுள்ள ராமானுஜம் (60) என்பவரிடம் புல்லாங்குழல் பயிற்சிக்காக 2016-ம் ஆண்டு வந்தார். அப்போது சிறுமிக்கு ராமானுஜம் பாலியல் தொல்லை கொடுத்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் எஸ்.ஐ சோபியா விசாரணை நடத்தி, ராமானுஜத்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அவர்மீது போக்சோ சட்டப்பிரிவு, 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு முதல் நடந்துவந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு விசாரணையில் ராமானுஜம் மீது குற்றம் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி முகமது பாரூக் தீர்ப்பளித்தார். அதில் சிறுமியைப் பாலியல் கொடுமைப்படுத்தியதற்காக ஐந்து ஆண்டுகளும், 25,000 ரூபாய் அபராதமும், கொலை மிரட்டல் பிரிவுக்காக இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் என மொத்தம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஐந்து மாதங்கள் கூடுதலாகச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கைதான ராமானுஜம், வானொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டே புல்லாங்குழல் கற்க வருபவர்களுக்கு வீட்டிலேயே டியூஷன் எடுத்தார். பட்டதாரியான ராமானுஜம், வானொலி நிலையத்திலும் மியூசிக் தொடர்பான வேலையைச் செய்துவந்தார். 2016-ம் ஆண்டு ராமானுஜத்திடம் தென்சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புல்லாங்குழல் பயிற்சிக்காக வந்தார். அந்தச் சிறுமி, குழந்தைத்தனமாக நடந்துகொள்வார். அதனால் அவரை அவரின் தந்தைதான் டியூஷனுக்கு அழைத்து வருவார். இந்தச் சமயத்தில் 2016-ம் ஆண்டு, ஜூன் மாதம் சிறுமியை அவரின் பாட்டி டியூஷனுக்கு அழைத்து வந்திருக்கிறார். டியூஷன் முடிந்து வீடு திரும்பியபோது சிறுமி மிகவும் சோர்வாகக் காணப்பட்டிருக்கிறார். அதை கவனித்த பாட்டி, சிறுமியிடம் விசாரித்தபோதுதான் டியூஷனில் ராமானுஜம் நடந்துகொண்ட செயலைக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு பாட்டியும் சிறுமியின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை - காதலன் போக்சோவில் கைது!
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

பின்னர் ராமானுஜத்திடம் சிறுமியின் குடும்பத்தினர் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டனர். அதற்கு ராமானுஜம், குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகே சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சிறுமியின் அப்பா, அம்மா, பாட்டி, சிறுமி அளித்த தகவலின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ராமானுஜத்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். ஆனால் சில மாதங்களிலேயே அவர் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது குற்றப்பத்திரிகை சாட்சிகள் ஆஜர்படுத்தினோம். இதையடுத்து ராமானுஜம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``இந்த வழக்கில் பல்வேறு சவால்களை நாங்கள் சந்தித்தோம். வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜரான சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை ஒன்று விடாமல் நீதிபதியிடம் கூறினார். அதோடு சாட்சிகளும் உறுதியாக இருந்ததால், ராமானுஜத்துக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்தது. தற்போது சிறுமி, கல்லூரியில் படித்து முடித்திருக்கிறார். வானொலி நிலையத்தில் வேலை பார்த்த ராமானுஜமும் ஓய்வுபெற்றுவிட்டார்" என்றார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் யுவராணி, எஸ்.ஐ சோபியா ஆகியோரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு