Published:Updated:

`ஒரு தடவை பார்ப்பார், மனப்பாடம் செய்துவிடுவார்!'- 1,300 பேரை அதிரவைத்த கிரெடிட் கார்டு மோசடி மன்னன்

Credit Card
Credit Card ( Pixabay )

ஜப்பானில் ஷாப்பிங் மால் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்கள் 1,300 பேரின் கிரெடிட் கார்டு தகவல்களை மனப்பாடம் செய்து அதன் மூலம் மோசடி செய்ததை போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள கோட்டோ நகரில் செயல்பட்டு வரும் மால் ஒன்றில் பணியாற்றி வருபவர் டனிகுச்சி (Taniguchi). 34 வயதான இவர் அந்த மாலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரின் கிரெடிட் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி 2,70,00 யென் (சுமார் 2,500 அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான இரண்டு பேக்குகளை ஆன்லைனில் வாங்கியிருக்கிறார். பின்னர், அந்த பேக்குகளைத் தனது வீட்டு முகவரிக்கு அனுப்பியிருக்கிறார். கிரெடிட் கார்டு உரிமையாளர், தன்னுடைய கணக்கில் இவ்வளவு பெரிய தொகை தனக்குத் தெரியாமலேயே செலவழிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

Vikatan
Credit Card
Credit Card
Pixabay

விசாரணையில், ஆன்லைனில் வாங்கப்பட்ட பொருள்கள் டனிகுச்சியின் வீட்டு முகவரிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோட்டோ மாலில் பணியாற்றும்போது அங்கு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களைக் குறிவைத்து டனிகுச்சி இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்.

தனிப்பட்ட தகவல்களுக்கு எல்லையற்ற இணையவெளியில் பாதுகாப்பில்லை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை கொடுத்துவரும் இந்தச் சூழலில் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருட டனிகுச்சி பயன்படுத்திய ஐடியா `அடடே' ரகம். வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த கிரெடிட் கார்டுகளை இவரிடம் கொடுக்கும் அந்தச் சில நிமிடங்களில் கார்டின் 16 இலக்க எண், அவர்களின் பெயர், ரகசிய குறியீட்டு எண், காலாவதியாகும் தேதி என ஆன்லைன் பயன்பாட்டுக்குத் தேவையான தகவல்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வாராம்.

Vikatan
E-Commerce
E-Commerce
Pixabay

இதேபோல், 1,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை மனப்பாடம் செய்துவைத்திருக்கும் டனிகுச்சி, அவற்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருள்கள் வாங்குவார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இதையடுத்து அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அப்போது, பல்வேறு நபர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் அடங்கிய நோட் புத்தகம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள். அதைக்கொண்டு கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களோடு ஒப்பிட்டு விசாரணையை போலீஸார் முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு