Published:Updated:

`அடித்துப் பணம் பறிக்கிறார்கள்!’ - போலீஸ், வனத்துறை மீது பாயும் ஜவ்வாது மலைவாழ் மக்கள்

போராட்டம் செய்த விவசாயிகள்
போராட்டம் செய்த விவசாயிகள்

வனத்துறையினரும் போலீஸாரும் சேர்ந்துகொண்டு விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாகவும், பணத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் ஜவ்வாது மலைவாசிகள்.

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில், 35-க்கும் அதிகமான மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவருமே காலம் காலமாக விவசாயத்தைச் சார்ந்துதான் வாழ்ந்துவருகிறார்கள். மலையை விட்டு நகரை நோக்கி வருவதிலும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. இந்த நிலையில், `விவசாயம் செய்யக்கூடாது. இதெல்லாம் வனத்துறைக்குச் சொந்தமான பூமி’ என்று வனத்துறையினர் மிரட்டிவருவதாக மலைவாழ் மக்கள் புகார் கூறுகிறார்கள். `மீறி விவசாயம் செய்தால் வழக்குப்பதிந்து சிறையில் தள்ளிடுவோம்’ என்று எச்சரிப்பதுடன் போலீஸாரை ஏவித் தாக்குதல் நடத்துவதாகவும் மக்கள் குமுறுகிறார்கள்.

ஜவ்வாது மலை
ஜவ்வாது மலை

சமீபத்தில், விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரை வனத்துறை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் வனத்துறையினர் மீது புகார் கொடுக்கத் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த மஞ்சுநாதன் என்கிற சப்-இன்ஸ்பெக்டர் வனத்துறையினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன் `கைது செய்வதற்குள் ஓடிவிடு’ என்று விவசாயியைத் துரத்தியதாகவும் கூறப்படுகிறது. தவிர, வனத்துறையினரும் போலீஸாரும் சேர்ந்து மலைவாழ் மக்களிடமிருந்து பணம் உடைமைகளை பறித்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்துக்கு அனுமதியளித்த கேரள அரசு... கொதித்தெழுந்த பழங்குடி மக்கள்!

இவற்றையெல்லாம் கண்டித்து மலைவாழ் மக்கள் திருப்பத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், கடந்த வாரம் மனு கொடுத்தனர். இதுவரை அந்த மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துரைத்து போராட்டம் செய்தனர். அவர்களை கைது செய்த போலீஸார் பின்னர் விடுவித்தனர். பல ஆண்டுகளாக தங்கள் மீது தொடுக்கப்படும் இந்த அதிகார வன்முறை குறித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் மலைவாழ் மக்களுடைய பிரதிநிதிகள்.

போராட்டம் செய்த விவசாயிகள்
போராட்டம் செய்த விவசாயிகள்

நம்மிடம் பேசிய ஜவ்வாது மலையின் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் லட்சுமணராஜா, ``திருப்பத்தூர் வனவர், சிங்காரப்பேட்டை வனவர் மற்றும் வன ஊழியர்கள் பெருமாள், சரவணன் ஆகியோர்தான் எங்களுக்குத் தினந்தோறும் தொல்லை கொடுக்கிறார்கள். இவர்களுடன் கூட்டு சேர்ந்து திருப்பத்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதனும் எங்களை மிரட்டுகிறார். இவரைப் போன்ற நபர்கள் காவல்துறைக்கே இழுக்கு.

மேற்குறிப்பிட்ட வனத்துறை மற்றும் போலீஸார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். விவசாயப் பணிகளை தடுக்கக் கூடாது. விவசாயிகளை மிரட்டுவதையும் தாக்குவதையும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண கலெக்டர் சிவன் அருள் அழைத்துப் பேசுவதாக கூறியிருக்கிறார்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு