Published:Updated:

`நாங்க போலீஸ்.. உங்க நகை பத்திரம்..!' -திருச்சி பெண்களைக் குறிவைக்கும் நூதன வழிப்பறிக் கும்பல்

நகை வழிப்பறி
நகை வழிப்பறி ( மாதிரி படம் )

திருச்சியில் மீண்டும் அதிகரித்துள்ள தங்கநகை வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை ரட்சகர்புரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரின் மனைவி லில்லி. நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நடந்து வந்துகொண்டிருந்தார். பொன்னையா மேல்நிலைப்பள்ளி எனும் இடத்தில் வந்துகொண்டிருக்கையில், அப்பகுதியில் மோட்டார்சைக்கிளில் நின்றுகொண்டிருந்த இருவர், தங்களை போலீஸ் என அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்துள்ளனர்.

அப்போது அவர்கள் லில்லியிடம், ``நேற்று இப்பகுதியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஒரு பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றுவிட்டார்கள். இந்த நிலையில், நீங்கள் பாதுகாப்பில்லாமல் இவ்வளவு நகைகளை அணிந்து செல்வது சரியல்ல” என எச்சரித்துள்ளனர்.

`ஆசையைத் தூண்டினோம்; பணமழை கொட்டியது!' - திருச்சி போலீஸை அதிரவைத்த பிட்காயின் மோசடிக் கும்பல்

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லில்லி, தான் அணிந்திருந்த தங்கநகைகளை கழட்டி அவரின் கைப்பைக்குள் வைக்க முயற்சி செய்தார். அப்போது அந்த நபர்கள் நகைகளைப் பேப்பரில் மடித்துத் தருகிறோம் எனக் கூறி லில்லிக்கு உதவியுள்ளனர். அவர்களை நம்பிய லில்லி, தான் அணிந்திருந்த 3 பவுன் நகைகளை அவர்களிடம் கொடுத்தார்.

நகை கொள்ளை
நகை கொள்ளை

அந்த நபர்களும் நகையை தாளில் மடித்து, லில்லியிடம் கொடுத்துள்ளனர். அவரும் அதைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். வீட்டுக்குச் சென்றபோது, அந்தத் தாளில் வெறும் கற்கள் மட்டுமே இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த லில்லி, திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூர் அடுத்த பெல் வளாகத்தில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் இதே பாணியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

தீபாவளி ஷாப்பிங்கா... கவனம்..! திருச்சி திகில் கும்பல்

மேலும் தங்கநகை பிசினஸ் செய்துவரும் திருச்சி உறையூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன் மதிவாணன் என்பவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் அடகு வைத்த தங்க நகையை மீட்டு அடகு வைக்க வேண்டும். அதற்குப் பண உதவி வேண்டும் எனக் கூறி தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் கூறியதை நம்பிய மதிவாணன், அந்த நபர் கூறிய திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடி பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது மர்மநபர் திடீரென மதிவாணனைத் தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து திருச்சி நவல்பட்டு போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு