Published:Updated:

தூத்துக்குடி: ஓடும் பேருந்தில் நகைகளைத் திருடிய பெண்கள்... சிக்கவைத்த சிசிடிவி!

கயத்தார் காவல் நிலையம்
கயத்தார் காவல் நிலையம்

தூத்துக்குடியில், ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 சவரன் தங்கநகைகளை திருடிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 35 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுஸிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுதா. கயத்தார் அரசுப் பள்ளியியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். இவர், கடந்த 23-ம் தேதி திருநெல்வேலியிருந்து கோவில்பட்டிக்கு அரசுப் பேருந்தில் பயணித்தார். அப்போது கயத்தார் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வந்தபோது, தனது கைப்பையில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடுபோயிருந்ததை கவனித்தார். இது குறித்து சுதா கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்கள்
கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்கள்

அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரின் உத்தரவின்படி கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கயத்தார் புதிய பஸ் நிலையப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டதில் இரண்டு பெண்கள் நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தநிலையில், கயத்தார் புதிய பேருந்து நிலையத்தில் போலீஸார் வாகனத் தணிக்கைப் பணியில் இருந்தபோது அங்கு சந்தேகிக்கும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த காளியம்மாள், முத்துமாரி என்ற தமிழரசி என்பதும், கடந்த 23-ம் தேதி பேருந்தில் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளைத் திருடியதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது தூத்துக்குடி வடபாகம், நாலாட்டின்புதூர், சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10 சவரன் நகைத் திருட்டில் ஈடுபட்டிருப்பதும், திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்கு ரதவீதியைச் சேர்ந்த அய்யப்பனிடம் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மீட்கப்பட்ட நகைகளைப் பார்வையிடும் எஸ்.பி ஜெயக்குமார்
மீட்கப்பட்ட நகைகளைப் பார்வையிடும் எஸ்.பி ஜெயக்குமார்

இதையடுத்து, தனிப்படையினர் மூன்று பேரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.ஜெயக்குமார், ``ஓடும் பேருந்தில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இர்ண்டு பேர், அந்த நகைகளை வாங்கி வைத்திருந்த ஒருவர் என மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேருந்தில் ஏறிச் செல்லும் வயதான பெண்கள், நடுத்தர வயது குடும்பப் பெண்களிடம் நைசாகப் பேசுவது, குழந்தையை அழவைத்து கவனத்தை திசைதிருப்பி நகைகளைத் திருடுவது, கோயில் திருவிழா கூட்டத்துக்குள் சென்று நகைகளைத் திருடுவது போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இரண்டு, மூன்று பெண்கள் சேர்ந்தே இது போன்ற திருட்டுகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகள்
மீட்கப்பட்ட தங்க நகைகள்

பேருந்துகளில் பயணம் செய்யும்போதோ, கோயில் திருவிழாவுக்குச் செல்லும்போதோ, பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்தக் கும்பல் நெல்லையிலிருந்து திருச்சி வரை பேருந்தில் பயணித்து திருட்டில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் சிசிடிவி கேமராக் காட்சிப் பதிவுகளின் அடிப்படையிலேயே குற்றவாளிகளை எளிதாகக் கண்டறிய முடிகிறது” என்றார்.

தஞ்சாவூர்: திருட்டு வழக்கு; காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை
அடுத்த கட்டுரைக்கு