Published:Updated:

`நீங்க இந்த அரிசியை எண்ணிக்கிட்டே இருங்க..!' - ஊரடங்கிலும் 10 பவுன் செயினைக் களவாடிய கும்பல்

பொன்னுசாமி
பொன்னுசாமி

கன்னிமார்பாளைத்துக்கு, 'ஜோசியம் பார்க்கிறோம்' என்று ஐந்து பேர் வந்திருக்கிறார்கள். அங்குள்ள மக்களுக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து, பொன்னுசாமி வீட்டுக்கும் ஜோதிடம் பார்க்க வந்திருக்கிறார்கள்.

`உங்களுக்கு நேரம் சரியில்ல. அதனால், உங்க வீட்டுக்குள்ள சாமிய பாக்கணும். அதுவரை இந்த அரிசியை எண்ணிகிட்டே இருங்க' என்று கூறி, 10 பவுன் தாலிச் செயினை அபகரித்துச் சென்ற ஐந்து மர்ம நபர்களால், கண்ணீர் வடிக்கின்றனர் நகையைப் பறிகொடுத்த குடும்பத்தினர்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, கன்னிமார்பாளையம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பொன்னுசாமி, பழனியாண்டி தம்பதி. கூலி வேலை பார்த்துவரும் இவர்கள், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கையொட்டி வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களுக்கு மகன், மகள் என பிள்ளைகள் இருக்கிறார்கள்.

`காசு இல்லன்னா வெளியே போ!' -கரூரில் வீட்டு உரிமையாளரால் கட்டடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

இந்த நிலையில், கன்னிமார்பாளைத்துக்கு, 'ஜோசியம் பார்க்கிறோம்' என்று ஐந்து பேர் வந்திருக்கிறார்கள். அங்குள்ள மக்களுக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து, பொன்னுசாமி வீட்டுக்கும் ஜோதிடம் பார்க்க வந்திருக்கிறார்கள். இதன் பிறகு நடந்த விஷயங்களை நம்மிடம் விவரித்தார் பொன்னுசாமி.

கன்னிமார்பாளையம்
கன்னிமார்பாளையம்

"என் மனைவி கழுத்தில் பத்து பவுன் தாலிச்செயின் போட்டிருந்தா. அதை அபகரிக்க அந்தக் கும்பல் திட்டம் போட்டிருக்கு. எங்ககிட்ட வந்து, 'உங்க குடும்பத்துக்கு நேரம் சரியில்லை. சர்ப்ப தோஷம் இருக்கு'னு சொன்னாங்க. அக்கம்பக்கத்து ஆள்களை வெளிய அனுப்பினாதான் அதற்குப் பரிகாரம் சொல்ல முடியும்னு சொன்னாங்க. அதனால், பக்கத்து வீட்டுக்காரங்களை அவங்கவங்க வீட்டுக்கு அனுப்பிட்டோம்.

அதன்பிறகு, தண்ணீரில் மஞ்சளைக் கரைத்து, அதைக் கொண்டு போய் வீட்டுக்குள் உள்ள சாமி படத்துக்கு முன்பு என் மனைவியை வைக்கச் சொன்னாங்க. அதன்பிறகு, அஞ்சு பேரும் 'உள்ளாரப் போய் சாமிய பாக்கணும்'னு சொல்லி, எங்களை வீட்டுக்கு உள்ளார கூப்பிட்டுப் போனாங்க. மாவு பிசைஞ்சு, அதுல கும்பம் அமைக்கச் சொன்னாங்க. அதன்பிறகு, என் மனைவி தாலிச் செயினை எடுத்து, அந்தக் கும்பத்தில் வைக்கச் சொன்னாங்க. என்கிட்டயும் என் பிள்ளைகள்கிட்டயும் அரிசியைக் கொடுத்து, 'இதை வெளியே போய் எண்ணிக்கிட்டு இருங்க. சாமி சரியா தெரியலை. உங்க மனைவி மட்டும் உள்ளார இருக்கட்டும். சாமிய பார்த்து, உங்க குடும்ப தோஷத்தைப் போக்கிடுறேன்'னு சொன்னாங்க. அதை நம்பி, நானும் என் பிள்ளைகளும் வெளியே போய் அவங்க சொன்னது மாதிரி, அரிசியை எண்ணிக்கிட்டு இருந்தோம்.

கொஞ்ச நேரத்துல வெளியே வந்த அந்த அஞ்சு பேரும், 'சாமிய பார்த்தாச்சு. உங்க தோஷத்தைப் போக்கியாச்சு. இனி, உங்க குடும்பத்துக்கு நல்ல நேரம்தான். இனிமேல் நீங்க தொட்டதெல்லாம் துலங்கும். 500 ரூபாய் கொடுங்க'னு சொல்லி, என்கிட்ட வாங்கிகிட்டாங்க.

அதோடு, 'இப்போதைக்கு கும்பத்துகிட்ட போக வேண்டாம். இப்போ அங்க சாமி இருக்கு. நீங்க இப்ப போனா, நாங்க செஞ்ச பரிகாரம் பலிக்காது. அரை மணிநேரம் கழிச்சுப் போய் பாருங்க'னு சொல்லிட்டு, எங்க குடும்ப உறுப்பினர்கள் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டுப் போனாங்க. அரை மணி நேரம் கழிச்சுப் போய் பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாயிட்டு. மாவு கும்பத்துல வச்சிருந்த என் மனைவியோட 10 பவுன் தாலிச்செயினைக் காணோம். அந்தக் கும்பல் அதை ஆட்டையைப் போட்டுட்டு போனது அப்போதுதான் புரிஞ்சது.

பொன்னுசாமி
பொன்னுசாமி

இதைப் பாத்து கத்திக்கிட்டே பக்கத்து ஊரு வரை ஓடிப்போய் பார்த்தேன். அந்த மர்மக் கும்பல் ஓடி மறைஞ்சு போயிருச்சு. விதியை நொந்துகிட்டு, காவல் நிலையத்துல வழக்கு கொடுத்திருக்கிறோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, ஆசை ஆசையாக என் மனைவிக்கு வாங்கிக்கொடுத்த தாலிச் செயின்.

அதைக் கண் இமைக்குற நேரத்துல கொள்ளு விரையாட்டம் அந்த மர்மக் கும்பல் அடிச்சுக்கிட்டு போயிட்டு. ஏற்கெனவே கொரோனா பிரச்னையால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கிறோம். இதுல, என் மனைவி செயினையும் அந்தக் கும்பல் அபகரிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க" என்றார், நொந்து போய்!.

அடுத்த கட்டுரைக்கு