Published:Updated:

தனியார் ரிசார்ட்.. நண்பர் பெயரில் அறை!- சுபஸ்ரீ வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயகோபால் சிக்கியது எப்படி?

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

SUBASREE
SUBASREE

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரவி தனியார் நிறுவன ஊழியர். இவரது ஒரே மகள் சுபஸ்ரீ பெருங்குடியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ம் தேதி மாலை பணிமுடிந்து டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழா பேனர் சரிந்து சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் விபத்தில் சிக்கினார். அவரை மீட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். உடனடியாக அங்கிருந்த பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

SUBASREE
SUBASREE

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி பேனர் வைத்ததாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.

இந்த வழக்கு செப்டம்பர் 25-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ``மாநகராட்சி தரப்பில், விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ``காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயகோபாலை விரைவில் கைது செய்வோம். அவரைப் பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிசார்ட்
ரிசார்ட்

இந்நிலையில் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் இருப்பதாக காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்த ஒரு டீம் கிருஷ்ணகிரி விரைந்தது. அதன்படி தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் குடும்பத்தோடு தங்கியிருந்த ஜெயகோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயகோபாலுடன் 5 பேர் அங்கு தங்கியிருந்தனர். இந்த ரிசார்ட் வனப்பகுதியையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது. ஆப்ரகாம் கான் என்பவர்தான் ஜெயகோபாலுக்கு உதவியுள்ளார். அவரது பெயரில்தான் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான டீம் ஜெயவேலை கைது செய்தது.

ஜெயகோபால் நேற்று மாலையே அந்த ரிசார்ட்டில் வந்து தங்கியுள்ளார். ஒகேனக்கல் பகுதியில் ஜெயகோபால் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதை மோப்பம் பிடித்த அதிகாரிகள் அந்தப்பகுதியைக் கண்காணித்து வந்துள்ளனர். செல்போன் டவர் சிக்னலை வைத்துதான் தேன்கனிக்கோட்டையில் அவர் பதுங்கி இருந்தது தெரியவந்ததுள்ளது.

தனியார் ரிசார்ட்.. நண்பர் பெயரில் அறை!- சுபஸ்ரீ வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயகோபால் சிக்கியது எப்படி?

இதையடுத்து சென்னையிலிருந்து வந்த டீம் ஜெயகோபாலை கைது செய்தது. தேன்கனிக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் ஜெயகோபால் கைது செய்யப்பட்ட விவரத்தைத் தெரிவித்துவிட்டு அவரை கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை அழைத்து வருகின்றனர்.