Published:Updated:

Operation Job Scam: முன்னாள் அமைச்சர் உதவியாளர், முன்னாள் எம்.எல்.ஏ-வின் மனைவி உட்பட 30 பேர் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆபரேஷன் ஜாப் ஸ்கேம் - சைலேந்திர பாபு
ஆபரேஷன் ஜாப் ஸ்கேம் - சைலேந்திர பாபு ( sylendrababu )

தமிழகம் முழுவதும் நடந்த `ஆபரேஷன் ஜாப் ஸ்கேம்’ என்ற நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ-வின் மூன்றாவது மனைவி உட்பட 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் `ஆபரேஷன் ஜாப் ஸ்கேம்’ (Operation Job Scam) தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக காவல்துறையினர் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்குகளை தூசி தட்டினர். அதன் அடிப்படையில் 58 வழக்குகளில் 30 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆபரேஷன், 1.11.2021-ம் தேதி முதல் 4.11.2021-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு
காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு

இது குறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ``அரசு வேலை, வங்கி வேலை, ரயில்வே வேலை என ஆசைவார்த்தைகளைக் கூறி சிலர் பணத்தை வாங்கி மோசடி செய்திருக்கின்றனர். அவர்களில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் உதவியாளராக இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரி, முன்னாள் எம்.எல்.ஏ பரிதி இளம் வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபத் (36), `முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தெரியும்’ எனக் கூறி கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 30 பேர் மீதும் இன்னும் பல புகார்கள் உள்ளன.

இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது. இது போன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவலைத் தெரிந்துக்கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044-28447701, 28447703 என்ற எண்ணிலும், 9498105411 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும், மாநில காவல் கட்டுப்பாட்டு அறை 044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவின் நம்பர் 044-23452380 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலதிபரிடம் முகநூலில் பழகி மோசடி! - அனுதாபம் மூலம் ரூ.1.1 கோடி பறித்த தாய், மகள்
 ராணி எலிசபத்
ராணி எலிசபத்

இது தவிர சென்னை போலீஸாரும் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான வழக்குகளில் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது குறித்த விவரங்கள்: கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் டேனியல்ராஜ், ராணி எலிசபெத் ஆகியோர் தங்களுக்கு அரசியல், அரசு அதிகாரிகள் செல்வாக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் ராதாகிருஷ்ணனின் ஒரு மகனுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் வாங்கியிருக்கின்றனர். மேலும் இரண்டு பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 90 லட்சத்தை டேனியல்ராஜ், ராணி எலிசபெத் ஆகியோர் வாங்கியிருக்கின்றனர். அதன்பேரில் 2018-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன், கமிஷனரிடம் புகாரளித்தார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் டேனியல்ராஜ், 2018-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். ராணி எலிசபெத் தலைமறைவாக இருந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3.11.2021-ம் ஆண்டு சென்னையில் கைதுசெய்தனர். இவர் சென்னை சாந்தோம். லீத் கேஸ்ட்லி வடக்கு தெருவில் குடியிருந்துவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை செய்துவரும் ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜெயசீலனிடமிருந்து 2,70,000 ரூபாயை ராஜேஷ் வாங்கியிருக்கிறார். அதன்பேரில் திருவிக நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கடந்த 2.11.2021-ம் தேதி சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜேஷை (26) கைதுசெய்தனர். கைதான ராஜேஷ், பஞ்சாப் நேஷனல் வங்கி பெரம்பூர் கிளையில் துப்பரவுப் பணியாளராக வேலை பார்த்துவருகிறார்.

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

ஆவடி மேற்கு காந்தி நகர், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரயில்வேயில் பணிபுரிந்துவரும் உறவினரான வெங்கடேசனிடம் 12 லட்சம் ரூபாயை ரயில்வே வேலைக்காக கொடுத்திருக்கிறார். வேலையும் கிடைக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காததால் சுரேஷ்குமார், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் கள்ளிக்குப்பம், பாலாஜிநகரைச் சேர்ந்த வெங்கடேசன் (54) என்பவரை 3.11.2021-ம் தேதி கைதுசெய்து அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். இவர் தென்னக ரயில்வேயில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார்.

மதுரை ஆணையூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (49). இவர், தலைமைச் செயலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த கண்ணன் என்பவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு அரசு வேலைக்காக 30 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார். வேலை வாங்கிக் கொடுக்காததால் ரங்கசாமி, கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சென்னை எம்.எம்..டிஏ காலனியைச் சேர்ந்த கண்ணனை 3.11.2021-ம் தேதி கைதுசெய்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சென்னை மண்ணடியிலுள்ள `சிட்டி டிரான்ஸ்போர்ட்’ என்ற நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருபவர் கார்த்திக். இவர் நிறுவனத்துக்கு வரவேண்டிய பணத்தை இவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி இதுவரை 11,04,317 ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் ஸ்டீபன் என்பவர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பவரை 3.11.2021-ம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தீபாவளியையொட்டி நடந்த இந்த ஆபரேஷனில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் சிக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு