Election bannerElection banner
Published:Updated:

மர்மங்களின் கதை: ஒரு வீடு ஒரு மனிதன் சில கொலைகள் - அமெரிக்காவை அலற வைத்த சம்பவம் | பகுதி - 16

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

பிறர் உடனே மரித்தது போல் ஜான் ஜூனியர் மரிக்கவில்லை. சுட்ட பிறகும் போராடினான். அவனை கொல்ல ஜானுக்கு ஒன்பது தோட்டாக்களை செலவு செய்ய வேண்டியிருந்தது.

நவம்பர் 9, 1971. நியூ ஜெர்சியில் வசிக்கும் ஜான் லிஸ்ட்டின் குடும்பத்துக்கு மற்றுமொரு காலை புலர்ந்தது.

13 வயதான ஃப்ரெடரிக், 15 வயதான ஜான் ஜூனியர் மற்றும் 16 வயதாகும் பெட்ரிஷியாவுடனும் வழக்கம் போல் காலை உணவு உட்கொண்டார்.

உணவுக்கு பின் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிச் சென்றனர். அதற்குப் பிறகுதான் மனைவி ஹெலன் கண்விழித்தார். காபி குடிப்பதற்காக படுக்கையறையிலிருந்து கீழே வந்தார். கொஞ்ச நேரம் ஜான் ஹெலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நாள் தனக்கான குரூரத்தை மெல்ல கட்டவிழ்க்கத் தொடங்கியது.

சில கொலைகள்

ஹெலனருகே வந்து நின்ற ஜானின் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. ஹெலனுக்கு ஏதும் தெரியவில்லை. சட்டென அவர் தலையில் வைத்து துப்பாக்கியின் விசையை அழுத்தினார் ஜான். ஒரு நொடி. தோட்டா ஹெலனின் உயிரைக் குடித்தது. 17 வருட குடும்ப வாழ்க்கை சரிந்தது.

ஜான் நிதானமாக அடுத்த வேலைகளை பார்த்தார். ஹெலனின் உடலை ஒரு பைக்குள் வைத்து சுற்றினார். அதை இழுத்து வந்து இன்னொரு அறையில் ஒளித்து வைத்தார். பிறகு அவர் படியேறி மாடிக்கு சென்றார். அங்கு அவரின் தாய் அல்மா இருந்தார்.

84 வயதான அல்மா தனக்கென காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார். அவரருகே வந்த ஜான் அன்புடன் முத்தமிட்டார். மகனை பார்த்ததும், கீழே என்ன சத்தம் என வினவினார் தாய். ஜான் தன் துப்பாக்கியை தாயின் நெற்றியில் வைத்து விசையை அழுத்தினான்.

மர்மங்களின் கதை: ஒரு வீடு ஒரு மனிதன் சில கொலைகள் - அமெரிக்காவை அலற வைத்த சம்பவம் | பகுதி - 16

தாயின் சடலத்தை தூக்க ஜானால் முடியவில்லை. எடை அதிகம். ஒரு துண்டை தாயின் முகத்தில் போட்டுவிட்டு தரையிலேயே சடலத்தை விட்டுவிட்டான்.

மீண்டும் கீழே வந்தான். தேங்கியிருந்த் ரத்தத்தை துடைத்து சுத்தப்படுத்தினான்.

சில கடிதங்களை எழுதினான். பிறகு தொலைபேசியில் பலரை தொடர்பு கொண்டான். குழந்தைகளின் டீச்சர்கள், அவனுடைய மேலதிகாரி, குடும்ப நண்பர்கள் என பலரை தொடர்பு கொண்டு உடல்நலம் குன்றியிருக்கும் ஒரு உறவினரை பார்ப்பதற்கு குடும்பத்தோடு கிளம்பப் போவதாக கூறினான். அழைப்புகளை முடித்துவிட்டு தபால் அலுவலகத்துக்கு சென்று எழுதிய கடிதங்களை அனுப்பினான். தபால் சில நாட்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டான். வீட்டுக்கு வரும் பால், செய்தித்தாள் போன்ற அனைத்தையும் நிறுத்தச் சொல்லிவிட்டான். கடைசியாக வங்கிக்கு சென்றான். அவனது அம்மா வைத்திருந்த 2000 டாலருக்கான கடன் பத்திரத்தை கொடுத்து பணத்தை எடுத்தான்.

வீடு திரும்பி ஒரு நல்ல சேண்ட்விச் செய்து சாப்பிட்டான் ஜான். பிறகு குழந்தைகளுக்கு காத்திருந்தான். பட்ரிஷியா ஜானை தொலைபேசியில் அழைத்து `உடல் சரியாக இல்லை’ எனவும் அழைத்துச் செல்லும்படியும் கூறியிருக்கிறாள். நிலவரம் எதுவும் தெரிந்திருக்கவில்லை, பாவம். ஜான் பள்ளிக்கு சென்று பேட்ரிஷியாவை வீட்டுக்கு அழைத்து வந்தான். பேட்ரிஷியாவின் தாடையில் துப்பாக்கியை வைத்து சுட்டு உயிர் குடித்தான் ஜான். பிறகு அவளின் உடலையும் கொண்டு சென்று அவளுடைய தாயின் உடலருகேயே வைத்தான்.

அடுத்து வந்த மகன் ஃப்ரெட்டுக்கும் அதே நிலைதான். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் அதே இடத்தில் கொண்டு சென்று வைக்கப்பட்டது. மிஞ்சியிருந்தவன் ஜான் ஜூனியர் மட்டும்தான்.

பள்ளியில் கால்பந்து போட்டி இருந்தது. ஆகவே ஜான் பள்ளிக்கு சென்றான். மகன் கால்பந்து விளையாடுவதை நின்று பார்த்தான். விளையாட்டு முடிந்த பிறகு பின் வீட்டுக்கு அழைத்து வந்தான். சமையலறையில் வைத்து ஜான் ஜூனியரின் பின்னந்தலையில் ஜான் சுட்டான். ஆனால் ஒரு சிக்கல். பிறர் உடனே மரித்தது போல் ஜான் ஜூனியர் மரிக்கவில்லை. சுட்ட பிறகும் போராடினான். அவனை கொல்ல ஜானுக்கு ஒன்பது தோட்டாக்களை செலவு செய்ய வேண்டியிருந்தது. அவனையும் கொன்ற பிறகு பிற உடல்களுக்கு அருகே கொண்டு சென்று போட்டான் ஜான்.

பிறகு உயிர் போன சடலங்களுக்கு முன்னாலிருந்து கடவுளை பிரார்த்திக்கிறான்.

வீடு முழுக்க ரத்தம். பொறுமையாய் முடிந்த மட்டிலும் ரத்தத்தை சுத்தப்படுத்தினான். பிறகு அமர்ந்து இரவுணவை நிதானமாக உண்டான். பாத்திரங்களைக் கழுவி காய வைத்தான். எவரும் போற்றும் ஒரு நல்ல குடும்பத் தலைவன் அவன். கொலைகள் செய்த பிறகும் கூட தன் கடமையை பொறுப்புடன் செய்து முடித்தான். பிறகு தன் படுக்கைக்கு சென்றான். அதுவரை தூங்காத அளவுக்கான நிம்மதியுடன் அந்த இரவில் ஜான் தூங்கினான்.

மறுநாள் காலை.

உடல், இசை, குளிர்

உடல்கள் கெடாமல் இருக்க குளிர்சாதனத்தின் குளிரை அதிகப்படுத்தினான். வீட்டிலிருந்து எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டான். அவனுக்கு பிடித்த இசையை ரேடியோவில் போட்டுவிட்டான். வெளியே இருப்பவருக்கு வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லா விஷயங்களையும் செய்தான்.

எல்லாம் முடிந்தது. பின் அமர்ந்து ஒரு கடிதத்தை எழுதினான். அவன் எழுதிய அக்கடிதம் அவனுடைய பாதிரியாருக்காக. ஐந்து பக்கம் கொண்ட கடிதம். வீட்டிலிருக்கும் எல்லா புகைப்படங்களையும் தேடி எடுத்தான். அவற்றில் அவனுடைய முகத்தை மட்டும் வெட்டி எடுத்தான். பிறகு வீட்டுக்கு வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு கிளம்பினான்.

பல வாரங்கள் கழிந்தன. சாலையிலிருந்து உள்ளே தள்ளியிருந்த ஜான் லிஸ்ட்டின் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என அறிந்துகொள்ள எவருக்கும் தேவை எழவில்லை. பல நாட்களாக எரிந்த விளக்குகள் ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின. மெல்ல வீடு இருளுக்குள் மூழ்கத் தொடங்கியது. இசை மட்டும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

மர்மங்களின் கதை: ஒரு வீடு ஒரு மனிதன் சில கொலைகள் - அமெரிக்காவை அலற வைத்த சம்பவம் | பகுதி - 16

ஒரு மாதம் முழுமையாக கழிந்தது. முதல் சந்தேகம் பெட்ரிஷியாவின் நாடக ஆசிரியரிடமிருந்து தொடங்கியது. பல காலமாக பெட்ரிஷியா வராமல் இருந்தது சந்தேகத்தை கொடுத்தது. ஏற்கனவே பெட்ரிஷியா தந்தையை பற்றி ஒருமுறை ஆசிரியரிடம் சொல்லியிருந்தாள். அது நினைவுக்கு வந்த பிறகும் ஆசிரியரால் இருப்புக் கொள்ள முடியவில்லை. இன்னொரு ஆசிரியரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

முன்னர் ஒருமுறை, தன் தந்தை மொத்த குடும்பத்தையும் கொன்று விடுவாரோ என பயமாக இருப்பதாக பெட்ரிஷியா ஆசிரியரிடம் சொல்லியிருந்தாள்.

இரண்டு ஆசிரியர்களும் வீட்டைச் சுற்றி சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடுவதை கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவலர்களும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். ஆசிரியர்கள் தங்களுக்கு இருந்த சந்தேகத்தை கூறினர்.

அதிகாரிகள் கதவை தட்டிப் பார்த்தார்கள். திறக்கவில்லை. ஜன்னல்களின் வழியே எட்டிப் பார்த்தார்கள். சந்தேகத்துக்கிடமாகவும் எதுவும் தென்படவில்லை. அண்டைவீட்டாரின் வற்புறுத்தலுக்கு பிறகு ஒரு ஜன்னல் வழியாக வீட்டுக்குள் இறங்கினர் அதிகாரிகள்.

படிக்கட்டு அருகே இருந்த ஒரே ஒரு விளக்கு மட்டும்தான் எரிந்தது, மற்ற இடமெல்லாம் இருள். அதிகாரிகளின் நிழல்கள், விளக்கு வெளிச்சத்தில் நீண்டு கொண்டிருந்தன. யாரும் இல்லாமல் அடர் இருட்டு இருந்த சூழலுக்குள் பேய்த்தனமாக இசை மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த டார்ச் லைட்டுகளின் உதவியைக் கொண்டு காவலர்கள் வீட்டுக்குள் சுற்றினர். சடலங்கள் இருக்கும் அறைக்குள் காவலர்கள் நுழைந்ததும் துர்நாற்றம் நாசியை துளைத்தது.

டார்ச் லைட்டுகளின் வெளிச்சக் கற்றைகள் பெரும் கோரத்துக்கு வெளிச்சத்தை பாய்ச்சின. தூங்கும் பைகளில் சடலங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் பரபரப்படைந்தனர். எதார்த்தமாக வந்த புகார் ஒரு பெரும் வழக்கை வெளிப்படுத்துவதை புரிந்து கொண்டனர்.

வீடு மொத்தத்தையும் அலசி ஆராய்ந்தனர். ஜானின் ஒப்புதல் வாக்குமூலக் கடிதம் கிடைத்தது. குடும்பத்தைல் கொல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. கடிதம் கொடுத்த தகவலில் மாடியிலிருந்த அல்மாவின் சடலமும் கைப்பற்றப்பட்டது.

விசித்திரமான வாழ்க்கை

வாழ்க்கை விசித்திரமானது. மனம் கொள்ளும் கோணங்கள் சூட்சுமமானவை. மனிதன் கொண்டிருக்கும் ஒழுங்கு எந்த கணத்திலும் கட்டவிழ்ந்து விடுமளவு மெல்லியத் தன்மை வாய்ந்தது. இலகுவான அந்த ஒழுங்கின் மேல் ஒரு பெரும் சமூகமே ஏறி மேலும் கீழுமாக குதித்து ஆடுகையில் இழப்பது ஒழுங்கை மட்டுமல்ல; பல உயிர்களையும்தான்.

1971ம் ஆண்டில் ஜான் லிஸ்ட்டின் வேலை பறிபோய் விட்டது. என்ன செய்வதென அவனுக்கு தெரியவில்லை. பெரிய வீடு, குடும்பம், வாழ்க்கை எல்லாம் தொலைந்துவிடும் என்கிற பயம். முக்கியமாக சமூகம் தனக்கு என்ன பெயர் சூட்டும் என்கிற பதைபதைப்பு. வேலை பறிபோன விஷயத்தை வீட்டுக்கு சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தான். தொடர்ந்து பல வேலைகளுக்கும் முயற்சி செய்தான். ஒன்றும் பலனளிக்கவில்லை.

மர்மங்களின் கதை: ஒரு வீடு ஒரு மனிதன் சில கொலைகள் - அமெரிக்காவை அலற வைத்த சம்பவம் | பகுதி - 16

ஒவ்வொரு காலையும் வேலைக்கு கிளம்புவது போலவே ஜான் லிஸ்ட் கிளம்பினான். ரயில்வே நிலையத்துக்கு சென்று முழு நாளையும் அமர்ந்து கழித்துவிட்டு வீடு திரும்புவான். அவ்வப்போது பணத்துக்கு தாயின் வங்கிக் கணக்கிலிருந்து சொல்லாமல் பணம் எடுத்துக் கொள்வான். வீடு, கார் என வாங்கிய கடன்கள் யாவும் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தன. தவணை கட்டவில்லை எனில் அரசே வந்து அனைத்தையும் பறித்துக் கொள்ளும். தாயின் வங்கிக் கணக்கிலும் பணம் குறைந்து கொண்டே வந்தது. வறுமையிலும் வீடில்லாமலும் இருப்போருக்கு அமெரிக்காவில் அரசு நல்வாழ்வு மையங்கள் உண்டு. கிட்டத்தட்ட சத்திரங்கள் மாதிரியான மையங்கள். அதிலும் இடம்பிடிக்க ஒவ்வொரு நாளும் வரிசையில் நிற்க வேண்டும்.

ஜான் லிஸ்ட்டின் பொருளாதார நிலை தரை தட்டியது. அரசு நல்வாழ்வு மையம்தான் ஒரே வழி என்ற நிலையை வாழ்க்கை எட்டியது. அரசு நல்வாழ்வு மையம் என்பது அவருக்கு மட்டுமல்ல; மொத்த குடும்பத்துக்கே அதுதான் கதி என்கிற நிலை. இருந்த ஒரே வழியை ஏற்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. சமூகம் என்ன நினைக்கும் என்கிற அழுத்தமும் அவமானமும் ஒருங்கே போட்டு அவனை நொறுக்கியது.

சாத்தியப்படாத இரண்டாம் வழியை யோசித்து மனதை கல்லாக்கிக் கொண்டு அவ்வழியை சாத்தியப்படுத்தினான்.

மொத்த குடும்பத்தினரையும் கொன்றான்.

ஜான் லிஸ்ட்டின் திட்டம் பலித்தது.

1989ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி.

ஜான் லிஸ்ட் வழக்கு பற்றிய நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இரண்டே கால் கோடி மக்கள் பார்த்தனர். அவர்களுள் வான்டா ஃப்ளானரியும் அவரின் மகள் ஈவா மிட்சல்லும் அடக்கம். இருவரும் டென்வரில் வசிப்பவர்கள்.

ஜான் லிஸ்ட்டின் தோற்றம் காண்பிக்கப்பட்டதும் அவர்களுக்கு பொறி தட்டியது. அது போன்றதொரு உருவத்தை எங்கோ பார்த்ததாக நினைவு. யோசித்ததில் பட்டென உறைத்தது. அவர்களின் வீட்டருகே முன்பு இருந்த நபரின் முகம். அவரின் பெயர் பாப் க்ளார்க். நிகழ்ச்சியில் விவரிக்கப்பட்டதை போலவே அமைதியானவர். எப்போதும் கோட் சூட் அணிந்திருப்பார். அக்கவுன்டன்ட்டாக வேலை பார்த்தார். கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். உடனே வான்டா ஃப்ளானரி தொலைபேசியை எடுத்தார்.

11 நாட்கள் கழிந்தன. விர்ஜினியாவின் ரிச்மண்ட் பகுதியிலிருக்கும் ஒரு வீட்டுக்கு புலனாய்வு அதிகாரிகள் சென்றனர். அது பாப் க்ளார்க்கின் வீடு. வீட்டிலிருந்த டெலோரஸ் என்கிற பெண், பாப் க்ளார்க் வேலைக்கு சென்றிருப்பதாக சொன்னார். டெலோரஸ் பாப் க்ளார்க்கின் மனைவி. அதிகாரிகள் அலுவலகத்துக்கு சென்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட தோற்றத்தை பிரதிபலித்த நபரை கண்டார்கள். பாப் க்ளார்க் எனப்பட்ட ஜான் லிஸ்ட்!

மர்மங்களின் கதை: ஒரு வீடு ஒரு மனிதன் சில கொலைகள் - அமெரிக்காவை அலற வைத்த சம்பவம் | பகுதி - 16

1989ம் ஆண்டின் ஜுன் மாதம் 1-ம் தேதி ஜான் லிஸ்ட் கைது செய்யப்பட்டான். அவன் நிகழ்த்திய கொலைக்கு பிறகு பதினெட்டரை ஆண்டுகள் கழிந்திருந்தன. ஐந்து ஆயுள் தண்டனைகள் அவருக்கு விதிக்கப்பட்டது.

நான்கு கொலைகளுக்கு காரணமானவன் நல்ல குடும்பத் தலைவனாக அறியப்பட்டவன். சமூகம் போற்றும் சிறந்த குடும்பத் தலைவனுக்கான குடும்பம், வசதி, கடவுள் பக்தி, பணிவு என எல்லாமும் ஜான் லிஸ்ட்டிடம் இருந்தது. வேலை பறிபோனதும் மொத்தமும் போனது.

சிறைத்தண்டனை பெற்ற பிறகு ஜான் லிஸ்ட்டை நேர்கண்ட ஒரு பேட்டி வெளியானது. அதில் அவன், ``என் தாய், மனைவி, மூன்று குழந்தைகள் எல்லாரையும் வீடு இல்லாமல் போகும் அவமானத்திலிருந்து காப்பாற்ற விரும்பினேன். அதனால் அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தேன்” எனக் கூறியிருந்தான்.

பணம், மனிதத்தை அழிக்க உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த கொலைவாள்!

- ஆர்.எஸ்.ஜெ.

பகுதி 15க்கு செல்ல....

மர்மங்களின் கதை: ஹிட்லருக்கு மரியாதை கொடுக்க மறுத்த ஒரு வரலாற்று நாயகன் - பகுதி 15
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு