Published:Updated:

`அவளா இப்படிச் செய்தாள், என்னால் நம்பவே முடியவில்லை'- கேரள ஜோலியின் உண்மை முகத்தை விவரிக்கும் தோழி

ஜோலி
ஜோலி ( Mathrubhumi )

தன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைத் தொடர்ச்சியாகக் கொலை செய்த ஜோலி மேலும் சில பெண் பிள்ளைகளைக் கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜோலி ஜோசப் என்ற 47 வயதுப் பெண் கடந்த 14 வருடங்களாகத் தன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைத் தொடர்ந்து விஷம் வைத்துக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் மொத்த கேரளாவையும் உலுக்கி வருகிறது. குற்றவாளி ஜோலி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

koodathai murder
koodathai murder
Mathrubhumi

இந்த வழக்கு தொடர்பாக ஜோலியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜோலி பற்றி அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் அதிர்ச்சிகரமாக உள்ளது. தன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மட்டுமல்லாது இன்னும் சில பெண்களை ஜோலி கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாகத் தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.

பெண் குழந்தைகளைப் பிடிக்காது!

ஜோலிக்கு பெண் குழந்தைகள் என்றாலே பிடிக்காதாம். அவருக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர். தான் கர்ப்பமடையும் ஒவ்வொரு முறையும், தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என அவர் முன்கூட்டியே அறிந்துகொண்டு, அது பெண் குழந்தையாக இருந்தால் உடனே கர்ப்பத்தைக் கலைத்து விடுவாராம். இதுவரை 2-க்கும் அதிகமான முறை ஜோலி தன் கர்ப்பத்தைக் கலைத்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

koodathai murder
koodathai murder
Mathrubhumi

ஜோலியின் இந்தச் செயலால் அவர் மட்டுமல்லாது அவருக்கு என்னக் குழந்தை பிறக்கப்போகிறது என முன்கூட்டியே கூறிய கிளினிக்கும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. குழந்தை பிறக்கும் முன் அது எந்தப் பாலினம் என அறிந்துகொள்ளக் கூடாது என்று சட்டம் இருக்கும்போது அதை மீறி ஜோலிக்கு உதவிய அந்த கிளினிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குடும்பத்தில் திடீர் மரணங்கள்!- 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவை பதறவைத்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

பெண் குழந்தைகளைக் கொல்ல திட்டம்!

ஜோலிக்கு பெண் குழந்தைகள் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால் தன் குடும்பத்திலிருந்த பிறரின் பெண் குழந்தைகளையும் கொல்ல முயன்றுள்ளார். ``சிலியின் பெண் குழந்தை மட்டுமல்லாது மேலும் சில பெண் குழந்தைகளைக் கொல்ல முயன்றுள்ளார் ஜோலி. சில வருடங்களுக்கு முன்பு ராய்யின் தங்கை குழந்தை வாயில் நுரைதள்ளி மிகவும் முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தக் குழந்தை சாப்பிட்ட உணவில்தான் பிரச்னை இருப்பதாக அப்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Roy - Jolly
Roy - Jolly
Mathrubhumi

குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்னதாக ஜோலி அங்கு இருந்துள்ளார். தற்போது ஜோலியைப் பற்றித் தெரிந்த பிறகு, அந்தப் பெண் குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டதும் இவரால்தான் என ஜோலியின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்தப் பெண் மட்டுமல்லாது அவரின் உறவினர் பெண்கள் இரண்டு, மூன்று பேரையும் கொலை செய்ய முயன்றுள்ளார் ஜோலி என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அதன் உண்மைத் தன்மை இன்னும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கோழிக்கோடு எஸ்.பி சைமன் கூறியுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

ஜோலியின் மற்றொரு முகம்!

“ஜோலி மிகவும் அமைதியானவர். வாரம் தவறாமல் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்வார். மாலை நேரங்களில் தன் வீட்டிலேயே பிரார்த்தனை செய்வார். எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். தினமும் காலையில் கச்சிதமாகத் தயாராகி கல்லூரி செல்வதாகக் கூறிவிட்டு தன் காரில் புறப்பட்டுவிடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.

Jolly
Jolly
Mathrubhumi

அவரது பேச்சுகளில் ஒரு தெளிவு இருக்கும். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள்கூட நானும் அவரும் ஒரு தியான மையத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது, ஜோலியின் முதல் கணவர், ராய் மரணம் தொடர்பான விசாரணை பற்றி அவரிடம் கேட்டேன். எந்தவித பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக என்னிடம் பதில் கூறினார். அந்த நொடி வரை `ஜோலி இத்தனை கொலைகளைச் செய்திருப்பார்' என்று நினைக்கவில்லை.

`அபார நினைவுத் திறன்; 93 கொலைகள்; 50 ஆண்டுகள்!' - அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய சீரியல் கில்லர்

அவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் ஜோலியின் உண்மையான முகம் பற்றித் தெரிகிறது. அவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினேன் என எங்கள் அனைவரிடமும் கூறி வந்தார். ஆனால், அதுவும் பொய்யாக இருந்துள்ளது. ஜோலி இப்படிச் செய்துள்ளார் என்று இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை. அனைத்துப் பெண்களைப் போலத்தான் அவரும் இருப்பார்” என்று ஜோலியின் தோழி லில்லி கூறியுள்ளார்.

Arrest
Arrest

கடந்த 17 வருடங்களாகத் தன் உண்மையான முகத்தை மறைத்து சமூகத்துக்குத் தன்னை நல்ல பெண்ணாகக் காட்டி நடித்துள்ளார் ஜோலி. எந்தவித பதற்றமும் இல்லாமல்தான் இத்தனை கொலைகளையும் செய்துவிட்டு இத்தனை ஆண்டுகளாக அதை மறைத்துள்ளார். ஜோலி பற்றிய உண்மையான முகத்தை அறிந்து இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளனர் கூடத்தைப் பகுதி மக்கள்.

News Credits : Mathrubhumi

அடுத்த கட்டுரைக்கு