Published:Updated:

`ஜோலிக்குப் பெண் குழந்தைகளை பிடிக்காது!'- கேரள சீரியல் கொலை வழக்கில் பெண் அதிர்ச்சி தகவல்

என் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு, எங்கள் தந்தையை ஜோலி நன்றாகப் பார்த்துக்கொண்டார். தன் மருமகளை எல்லாரிடமும் முன்மாதிரியாகத்தான் கூறுவார்.

ஜோலி
ஜோலி

கேரளாவில் நடந்த சீரியல் கொலையில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. ஜோலி என்ற 47 வயதுப் பெண் சொத்துக்காகத் தன் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என 2002-ல் மாமியார் அன்னமாவை விஷம் வைத்து கொலை செய்கிறார். அடுத்து சொத்துக்காக மாமனாரை கொலை செய்கிறார். சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்த கணவரை கொன்றிருக்கிறார். இந்த மரணங்களில் சந்தேகம் எழுப்பிய உறவினர் மேத்தீவை கொன்றுவிட்டார். உறவினர் சாஜூ மீது கொண்ட காதலால் அவரின் மனைவி மற்றும் 2 வயது மகளைக் கொலை செய்தார். 17 வருட இடைவெளியில் 6 கொலைகளை நிகழ்த்தியுள்ளார். இதன் பின்னர் ஜோலி மற்றும் சாஜூ இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஜோலியின் கணவரின் சகோதரர் ரோஜோ கொடுத்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஜோலி, சாஜூ மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோலி, சாஜூ
ஜோலி, சாஜூ

ஜோலியின் குடும்பத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கல்லறைகளில்தான் புதைக்கப்பட்டனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமைதான் கல்லறையில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுக்க உத்தரவு கிடைத்தது. அதன்படி அங்கு புதைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்களையும் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். நகையைப் பிரிக்க பயன்படும் சைனைடு கொடுத்துதான் இந்தக் கொலைகளைச் செய்ததாக ஜோலி காவல்துறையினரிடம் தெரிவித்தார். இறந்தவர்களின் உடலில் சைனைடு கலந்துள்ளதா என்பது குறித்து சோதனை செய்துவருகின்றனர்.

`கொலை நடந்தது எனக்கு தெரியும்.. ஆனால்?!'- கேரள சீரியல் கொலையில் சாஜு அதிர்ச்சி வாக்குமூலம்

தடயவியல் சோதனையில் சிக்கல்

இந்தச் சம்பவத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் 3 வருடத்திலிருந்து 17 வருடங்களாக மண்ணில் இருந்துள்ளது. இதில் சாஜூ என்பவரின் மனைவி மற்றும் குழந்தை இறந்து 5 வருடத்துக்குள்ளாகத்தான் இருக்கும். மற்றவர்களின் உடலில் சைனைடு கண்டெடுக்கப்படுவது மிகவும் சிக்கலானது எனக் கூறப்படுகிறது. இறந்தவர்களுக்கு அதிகப்படியான சைனைடு கொடுக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுத்துள்ளார். இதனால் தடயவியல் சோதனையை விரைவாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கல்லறை
கல்லறை

இந்நிலையில் ஜோலிக்கு பெண் குழந்தைகளைப் பிடிக்காது என அவரின் உறவினரான ரென்ஜி தாமஸ் தற்போது கூறியுள்ளார். தன்னையும் விஷம் வைத்து கொல்ல முயன்றாக ரென்ஜி பேசியுள்ளார். ரென்ஜி தாமஸ், ஜோலியின் முன்னாள் கணவர் ராய் தாமஸின் சகோதரி ஆவார். இதுகுறித்து பேசிய ரென்ஜி, “என் சகோதரர் ராய் தாமஸ், ஜோலி இருவரும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டனர். நான் அவரை என் மூத்த சகோதரி போல்தான் நினைத்தேன். ஜோலி அனைவரிடமும் அன்பாகத்தான் இருந்தார். என் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு, என் தந்தையை ஜோலி நன்றாகப் பார்த்துக்கொண்டார். தன் மருமகளை எல்லாரிடமும் முன்மாதிரியாகத்தான் என் அப்பா கூறுவார். ஆனால், அவர் இப்படிச் செய்வார் என நினைக்கவில்லை. என் அண்ணணுக்கு குடிப்பழக்கம் இல்லை. ஜோலி என்னையும் அவர் கொலை செய்ய முயன்றது இப்போதுதான் தெரிய வருகிறது.

ஒருமுறை வீட்டில் உணவு அருந்தியபோது எனக்குக் கடுமையாக வாந்தி ஏற்பட்டது. நான் உடனடியாக அதிகமாகத் தண்ணீர் குடித்த பிறகுதான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். ஜோலிக்கு பெண் குழந்தைகள் என்றால் பிடிக்காது. இதன்காரணமாக அவர் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார். சாஜூவின் மனைவி சிலி இறந்தபோது ஜோலி முகத்தில் ஒரு மர்மமான புன்னகையைக் கண்டேன். இதுகுறித்து என் சகோதரர் ரோஜோவிடம் கூறினேன். மனைவி இறந்த அடுத்த வருடமே சாஜூ, ஜோலி திருமணம் செய்துகொண்டனர்.

`ஜோலிக்குப் பெண் குழந்தைகளை பிடிக்காது!'- கேரள சீரியல் கொலை வழக்கில் பெண் அதிர்ச்சி தகவல்

அந்த வீட்டில் ரோஜோ தங்கியிருந்தபோது வீட்டில் தண்ணீர் மற்றும் உணவு அருந்துவதைத் தவிர்த்து வந்தார். கடந்த வாரம் நாங்கள் ஜோலி வீட்டிக்குச் சென்றோம். அவர் எனக்கு ஜூஸ் கொடுத்தார். நான் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். என் சகோதரர் ரோஜோ தண்ணீர் குடித்தார். அதில் விஷம் கலந்திருக்குமோ என்ற பயத்துடன்தான் இருந்தார். எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது” எனக் கூறினார்.

கைதான சாஜூ நேற்று காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நானும் ஜோலியும் திருமணம் செய்துகொள்ள என் மனைவி மற்றும் குழந்தைகள் தடையாக இருப்பதாக ஜோலி கூறினார். இதனால் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தோம். ஜோலி என் மூத்த மகனையும் கொலை செய்ய வேண்டும் என்றார். நான்தான் வேண்டாம் என்று தடுத்தேன். என் குடும்பத்தினர் மகனைப் பார்த்துக்கொள்வார்கள் எனக் கூறி ஜோலியை சமாதானம் செய்ததாகத் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தையும் ரென்ஜி கூறியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண்கள், குழந்தைகள் மீது ஜோலிக்கு இருந்த வெறுப்பு குறித்து தெரியவரும்.

கைது
கைது

காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், “ஒவ்வொரு மரணமும் ஜோலிக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது. அதுதான் அவரை அடுத்தடுத்த கொலைகளை நிகழ்த்துவதற்கு அதிகப்படியான தைரியத்தைக் கொடுத்திருக்கிறது” என்றனர். கைதானவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.