டெல்லியில், சாகேத் நீதிமன்ற நீதிபதி கடந்த சனிக்கிழமை அன்று, `காலை 11:30 மணியளவில் மாளவியா நகர் சந்தைக்குச் சென்ற 42 வயதான என் மனைவி இன்னும் இல்லம் திரும்பவில்லை’ என காவல்துறைக்கு இரவு 10 மணியளவில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறை தீவிர தேடுதலில் ஈடுபட்டது. இந்த நிலையில், சந்தையில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்ததில் நீதிபதியின் மனைவி ஒரு ஆட்டோவில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி தெற்கு காவல்துறை துணை ஆணையர் பெனிடா மேரி ஜெய்கர், "நீதிபதியின் மனைவியைத் தேடும்போது அவர் ஒரு ஆட்டோவில் ஏறியதைக் கண்டுபிடித்தோம். அதைத் தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுநரைத் தேடிக் கண்டுபிடித்து விசாரித்ததில், அவர் நீதிபதியின் மனைவியை ராஜ்பூர் குர்த் என்ற இடத்தில் இறக்கிவிட்டதாகக் கூறினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தகவலை நீதிபதியிடம் கூறி விசாரித்தபோது அவர்களுக்கு அங்கு உறவினர் வீடு இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ராஜ்பூர் குர்த் பகுதிக்கு நீதிபதியுடன் சென்றோம். இரண்டு அடுக்குகள்கொண்ட அந்தக் குடியிருப்பில் முதல் தளம வீடு காலியாக இருந்தது, இரண்டாவது தளத்தில்தான் அவர்களின் உறவினர்கள் குடியிருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முதல் தள வீட்டைச் சோதனையிட்ட போது அது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது நீதிபதியின் மனைவி மின் விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். உடனே பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் `எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தையும் மீட்டு தற்போது விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்தார்.