Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

சண்டையில் கிழிந்த காக்கிச்சட்டை!

ஜூனியர் வாக்கி டாக்கி

அறந்தாங்கி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவருக்கு சம்மன்களைச் சேர்ப்பதுதான் பணி. இவருக்கு முன்கோபம் அதிகம் என்பதால் அடிக்கடி ஏதாவது கலாட்டாவில் ஈடுபட்டு ஏழரையைக் கூட்டிவிடுவாராம். இப்படித்தான் சமீபத்தில் மீன் மார்க்கெட்டில் ஒருவருக்கு சம்மனைக் கொடுக்கப் போயிருக்கிறார். அப்போது அங்கிருந்த துரைராஜ் என்பவர், “இது என்ன சம்மன்?” என்று கேட்டதற்கு அவரைத் திட்டி, கன்னத்தில் அறைந்துவிட்டாராம் காவலர். பதிலுக்கு துரைராஜும் காவலரைத் தாக்க... சுற்றியிருந்தவர்கள் வந்து வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இதில் அனைவரையும் வசைபாடியிருக்கிறார் காவலர். கோபமடைந்த மக்கள் காவலருக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள். இதில் சட்டையெல்லாம் கிழிந்து தொங்கியபடி ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்திருக்கிறார் காவலர். ‘வாரம் ஒரு ஏழரையைக் கூட்டிவிடுகிறாரே...’ என்று காவலரை இடமாற்றம் செய்திருக்கிறார்கள் மேலதிகாரிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

பாட்டியிடம் கெஞ்சும் போலீஸ்!

நாகர்கோவில் எஸ்.பி அலுவலகம் அருகில், சேது பார்வதிபாய் என்கிற மூதாட்டிக்குச் சொந்தமான கடையை ராஜ்குமார் என்பவர் ஓராண்டு குத்தகைக்கு எடுத்திருக்கிறார். பிறகு அந்தக் குத்தகையை பத்தாண்டுகளாக மாற்றி போலி ஒப்பந்தப் பத்திரம் தயாரித்திருக்கிறார். இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த சேது பார்வதிபாயை மூன்று மாதங்களாக அலைக்கழித்திருக்கிறது போலீஸ். ராஜ்குமார் போலீஸாரைச் சிறப்பாக ‘கவனித்து’விட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் ராஜ்குமார், கூலிப்படையினருடன் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று, 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் கடையை காலி செய்வதாக மிரட்டி, பணத்தை வாங்கியிருக்கிறார். ஆனால், கூலிப்படையினருக்குப் பேசிய தொகையை ராஜ்குமார் கொடுக்கவில்லையாம். இதனால் கூலிப்படையினர், ராஜ்குமாரை காரில் வைத்து கடத்திவிட்டனர். இது பற்றி ராஜ்குமாரின் நண்பர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவே... போலீஸார் காரை மடக்கி, கூலிப்படையினரைப் பிடித்துவிட்டார்கள். தப்பியோடிய ராஜ்குமார் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து கூலிப்படையினர் மீது புகார் அளிக்கும்படி மூதாட்டியிடம் போலீஸார் கேட்டிருக்கிறார்கள். மூதாட்டியோ, “நான் புகார் கொடுக்க அலைஞ்சப்ப யாரும் கண்டுக்கலை... உங்க தேவைக்கு மட்டும் நான் புகார் கொடுக்கணுமா?” என்று கேட்டு புகார் கொடுக்க மறுத்துவிட்டாராம். இப்போது தினமும் பாட்டியிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது போலீஸ்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘வர்றாரு நம்ம பிளம்பரு!’’

முதல்வரின் தேர்தல் பிரசாரத்தின்போது பத்திரிகையாளரைத் தாக்கியது, ஹோட்டலில் புகுந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களைத் தாக்கியது என்று கோவையில் போலீஸாரின் அத்துமீறல்கள் அரங்கேறிய நிலையில், ராமநாதபுரம் காவல் நிலைய சரகப் பகுதியில் கையில் கெட்டியான பிளாஸ்டிக் பைப்புடன் தடாலடியாக வலம்வருகிறார் எஸ்.ஐ ஜெய்சிஸ் உதயராஜ். குறிப்பாக, புலியகுளம் பகுதி இளைஞர்களைக் கண்டால் விசாரணை என்கிற பெயரில் வெளுத்துவாங்கிவிடுகிறாராம். கையில் பைப்புடன் இவர் சுற்றுவதால், அந்தப் பகுதி இளைஞர்கள் இவரைக் கண்டாலே ‘வர்றாரு நம்ம பிளம்பரு’ என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம். சமீபத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது எஸ்.ஐ ஸ்ட்ரிக்ட்டாக வலம்வர, அதை வீடியோ எடுத்து, ‘நம்ம பிளம்பரு’ என்று அந்தப் பகுதி இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism