Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ’இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ’இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

“திருப்பதிக்கு மொட்டை போடுறேன்!”

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் பணியாற்றும் ‘பாடகர்’ அதிகாரி ஒருவர் வசூல் கொழிக்கும் பதவியைக் குறிவைத்து சித்தரஞ்சன் சாலையிலேயே காத்திருந்தாராம். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஒருவர் மூலம் வீட்டுக்குள் சென்று பூங்கொத்தையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். ‘‘எப்படியும் கேட்ட போஸ்ட்டிங் கிடைச்சுடும். அப்படிக் கிடைச்சா, திருப்பதிக்குப் போய் மொட்டை போடுறதா வேண்டியிருக்கேன்’’ என்று தனது பேட்ச் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல... கொரோனா நேரத்திலும் தெரிந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வசப்படுத்தி, சக அதிகாரிகளுக்கு பார்ட்டியும் வைத்து அமர்க்களப்படுத்திவிட்டார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

``ஹலோ... பார் ஓனருங்களா?’’

கடந்த ஆண்டு, கொரோனா முதல் அலையில் நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது. இதில் பிடிபட்ட சரக்கை காக்கிகளே காலி செய்த கூத்தும் நடந்தது. இந்த முறை ஊரடங்கில் சுதாரித்துக்கொண்ட குடிமகன்கள் யாரும் ஊறல் போடவில்லை. மாறாக, டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிப் பதுக்கிக்கொண்டனர். பல இடங்களில் ரெய்டு அடித்தும் கள்ளச்சாராயம் எதுவும் சிக்காததால் காய்ந்துபோயிருக்கும் சில காவலர்கள், பார் ஓனர்களுக்கு போன் அடித்து “குளிர் ரொம்ப வாட்டுது. ரெண்டு ரவுண்டாவது கொடுங்க’’ என்று கெஞ்சியும் மிஞ்சியும் போதை ஏற்றிக்கொள்கிறார்களாம்!

அமைச்சருக்குத் தூதுவிட்ட காக்கி!

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அதே புகாருக்குள்ளான மற்றொரு காவல் அதிகாரி, நிலுவையிலிருக்கும் தன் மீதான வழக்கைத் தூசுதட்டி எடுத்துவிடுவார்களோ என்று பயந்து, மூத்த அமைச்சர் ஒருவரிடம் தூதுவிட்டிருக்கிறாராம். அமைச்சர் தரப்பிலிருந்து இன்னும் பதில் இல்லை. அதற்குள் இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த அந்த அதிகாரியின் எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள், அறிவாலயத்துக்கு பெட்டிஷன் தட்டிவிட்டனர்.

“எழுதுங்க இம்போசிஷன்..!”

நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசனைக் கண்டாலே வாகனங்களில் செல்பவர்கள் நடுங்குகிறார்கள். ஊரடங்கு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் அவசியம் இல்லாமல் ஊர் சுற்றுபவர்கள் சிக்கினால், அதே இடத்தில் மணிக்கணக்கில் நிறுத்திவைப்பதுடன், ‘இனி அவசியமில்லாமல் ஊர் சுற்ற மாட்டேன்’ என்று நூறு அல்லது இருநூறு முறை இம்போசிஷன் எழுதவைக்கிறார். சில நாள்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை விசாரித்தபோது, மருந்து வாங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்தால், அது 2015-ம் ஆண்டில் எழுதப்பட்டது. அப்புறம் என்ன? ‘இனி பொய்யான மருந்துச் சீட்டைக் காட்டி போலீஸாரை ஏமாற்ற மாட்டேன்’ என்று இம்போசிஷன் எழுதினார் அவர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

ரூட் க்ளியர் ஓவர்... ஓவர்!

தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யான திரிபாதி வரும் ஜூன் மாதத்தில் ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து அடுத்த டி.ஜி.பி பதவிக்கான ரேஸ் மூன்று பேர் இடையே நிலவியது. அவர்களில் இருவருக்கு பவர்ஃபுல் பதவி கிடைத்துவிட்டது. இதையடுத்து தனக்கு ரூட் க்ளியர் என்று நாஞ்சில் நாட்டு அதிகாரி முன்பைவிட வேகமாக சைக்கிள் மிதித்துவருகிறாராம். மற்ற இருவருக்கும் ஓரளவு பவர்ஃபுல் பதவியைக் கொடுத்து, அவர்கள் மனம் கோணாமல் இவருக்கு ரூட் க்ளியர் செய்ததே இவருக்கு வேண்டப்பட்ட உச்ச அதிகாரிகள் இருவர்தானாம். “உச்ச பதவியில் இருக்கும் நாங்கள் மூவருமே ஓரணியில் நேர்மையாகச் செயல்பட்டால்தான் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும்” என்று ஆட்சி மேலிடத்தில் இதற்குக் காரணமும் சொல்லப்பட்டிருக்கிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism