Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

Published:Updated:
ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
ஜூனியர் வாக்கி டாக்கி

செல்லம் கொஞ்சும் 10 ரூபாய் எஸ்.ஐ!

ஜூனியர் வாக்கி டாக்கி

சாலையோரக் கடைகளில் ‘மாமூல்’ வாங்குவது சகஜமாகிவிட்ட நிலையில், கோவை மாநகரிலிருக்கும் இரண்டெழுத்து இனிஷியல் காவல் நிலையத்தின் எஸ்.ஐ ஒருவரின் செயல், கிச்சுகிச்சு மூட்டுகிறது. ஏரியாவிலிருக்கும் கையேந்தி பவன்களில் அடிக்கடி சாப்பிடும் பழக்கமுடையவர் அந்த எஸ்.ஐ. தினமும் இரவு கடையிலிருக்கும் அத்தனை அயிட்டங்களையும் பெரிய பார்சலாக பேக் செய்பவர், தானும் வயிறார 300, 400 ரூபாய்க்கு உண்டுவிட்டு கடைக்காரர் கையில் பத்து ரூபாயைத் திணிப்பாராம். அவர்கள் நாசூக்காக மறுத்தாலும், ‘செல்ல’மாக அவர்கள் தோளில் தட்டி, ``சும்மா சாப்ட்டா உடம்புல ஒட்டாதுப்பா... வாங்கிக்க’’ என்பாராம். ‘‘கையேந்துவதில் இது வேற லெவலா இருக்கே!’’ என்று புலம்புகிறார்கள் கையேந்தி பவன் கடைக்காரர்கள்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் கட்... அதிகாரிகளுக்கு துட்டு!

ஜூனியர் வாக்கி டாக்கி

பொதுப்பணித்துறையில் உயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற, முன்னாள் முதல்வர் பெயர்கொண்ட ஒருவரின் மகன் சென்னையில் சில கிளைகளுடன் செயல்படும் ஹோட்டல் நடத்திவருகிறார். இவரது ஹோட்டல்களில் வேலை பார்க்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், சென்னையிலுள்ள சில காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள். இதைச் சமாளிக்க அந்த ஹோட்டல் அதிபர், எங்கெல்லாம் புகார்கள் கொடுக்கப்பட்டனவோ அந்த காவல் நிலையங்களுக்கெல்லாம் இரவு அசைவ விருந்துடன் ‘கவர்’ கவனிப்பும் நடத்தியிருக்கிறார். இது போதாதென்று சிலபல ஐ.பி.எஸ் அதிகாரிகள் ‘பப்’-க்குச் செல்ல ‘ஏற்பாடு’ செய்துகொடுக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன், பெரிய பதவியிலிருக்கும் அதிகாரியையும் சந்தித்திருக்கிறார். அந்த அதிகாரியும் ‘ஸ்வீட்’டாகப் பேசியதைத் தொடர்ந்து போராட்டம், தற்கொலை முயற்சி எனத் தொழிலாளர்கள் மாதக்கணக்கில் போராடினாலும், “ ‘தம்பி’, ‘விலாசம்’ மாறி வந்துட்ட... கிளம்பு கிளம்பு” என்று போலீஸார் அனுப்பிவிடுகிறார்களாம்.

எண்ணெய்க் குளியல், மசாஜ்! - அதிகாரிகள் டார்ச்சர்...

ஜூனியர் வாக்கி டாக்கி

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வீரமான காவல்துறை உயரதிகாரி ஒருவர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆர்டர்லியாக வீட்டில்வைத்திருக்கிறாராம். வாரத்தில் ஒரு நாள் தனக்கு மசாஜ் செய்து, எண்ணெய்க் குளியல் செய்ய வைக்கிறாராம் அந்த அதிகாரி. இந்த டார்ச்சரால் அந்தப் பெண் ஆர்டர்லி பொறியில் சிக்கிய எலியாகத் தவித்துக் கொண்டிருக்கிறாராம். இவர் மட்டுமன்றி, புதுச்சேரி மற்றும் தமிழகத்திலிருக்கும் உயரதிகாரிகள் பலரும் இதே வேலையைச் செய்துவருவதால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்கிற தவிப்பில் இருக்கிறார்கள் கடைநிலை மகளிர் காவலர்கள்!

‘‘போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்தா மட்டும் போதுமா?’’

ஜூனியர் வாக்கி டாக்கி

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையிலுள்ள விளையாட்டு வீரர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டிய காவலர்களுக்கு நைட் டூட்டி வழங்கப்படுவதால், அவர்களால் சரியாகப் பயிற்சியெடுக்க முடிவதில்லை. அதனால், போட்டிகளில் கலந்துகொள்ளும் காவலர்கள் வெற்றிபெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். அதேசமயம், யாராவது வெற்றிபெற்றால் மட்டும் வீரர், வீராங்கனைகளுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, மறக்காமல் ஆஜராகிவிடுகிறார்கள் அதிகாரிகள். ‘‘போட்டோவுக்கு போஸ் கொடுக்குறதுல இருக்கிற ஆர்வத்தை, பயிற்சியெடுக்கத் தேவையான வசதிகளை செஞ்சு கொடுக்குறதுலேயும் காட்டணும்’’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட காவலர்கள்.

கேரட் லஞ்சம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஊட்டியின் கேத்தி பாலாடா பகுதி, கேரட்டுக்குப் பிரசித்தி பெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டை, இங்கு கொண்டுவந்து சுத்தம் செய்த பிறகே விற்பனைக்கு அனுப்புகிறார்கள் விவசாயிகள். அதற்காகவே 10-க்கும் மேற்பட்ட கேரட் சுத்திகரிப்பு நிலையங்கள் இங்கு செயல்படுகின்றன. கொலக்கொம்பை, கேத்தி ஆகிய இரண்டு காவல் நிலைய எல்லைகளையும் உள்ளடக்கிய இந்தப் பகுதியில், கேரட் லோடுகளை ஏற்றிவரும் விவசாயிகளை மிரட்டி லஞ்சம் கேட்கிறார்கள் காவலர்கள். “அய்யா கேரட் வித்தாதான் காசு...” என்று பலரும் சொல்வதால், “அப்படியா, நாங்க வித்துக்குறோம். கேரட்டைக் கொடு” என்பவர்கள், ஐந்து கிலோ, பத்து கிலோ என்று கேரட்டைப் பிடுங்கிவிடுகிறார்கள். போலீஸாரிடமிருந்து கேரட்டை விலை கொடுத்து வாங்கிச் செல்லவே... தனியாக புரோக்கர்கள் இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருளுக்குச் சரியான விலை கிடைக்காத நிலையில், போலீஸாரின் கொட்டம் எப்போது ஒழியும் என்று புலம்புகிறார்கள் கேரட் விவசாயிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism