Published:Updated:

“கதவைத் தொறந்தா காண்டம் பாக்கெட்!” - சரக்கு பாட்டில்... சல்லாபக் கூச்சல்....

அலறிய மக்கள்... ஆக்‌ஷனில் ஜூ.வி

பிரீமியம் ஸ்டோரி

‘‘நைட் ஆனா போதும், போதையில ஒரே கூச்சல்... பால்கனியில் நின்னுக்கிட்டு கட்டிப்பிடிக்கிறதும், முத்தம் கொடுக்கிறதும்னு என்னென்னமோ பண்ணுதுக. அமைதியா இருந்த எங்க குடியிருப்புப் பகுதியில, போன வருஷம் ஆரம்பிச்ச ஒரு கெஸ்ட் ஹவுஸால எங்க நிம்மதியே போச்சு. கல்யாணமாகாத சின்ன வயசுப் பசங்க, பொண்ணுங்கதான் இங்கே அதிகம் வர்றாங்க. காலையில வீட்டுக் கதவைத் தொறந்தா சரக்கு பாட்டிலோட காண்டம் பாக்கெட்டெல்லாம் கிடக்குது. நடக்குறதெல்லாம் ரொம்பா தப்பா இருக்கு. நீங்கதான் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டணும்...’’ - கோவை சரவணம்பட்டி பகுதியிலிருந்து, இன்ஜினீயர்கள் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் இப்படியொரு புகாரை நமக்கு அனுப்பியிருந்தனர்.

புகார் குறித்து விசாரிப்பதற்காக இன்ஜினீயர்கள் காலனி சென்றபோது, சாலையோரமாகக் குவிக்கப் பட்டிருந்த மதுபாட்டில்களையும் ஆணுறைகளையும் காட்டிய குடியிருப்புவாசிகள், ‘‘பார்த்தீங்களா சார் இந்தக் கொடுமையை...’’ என்று ஆத்திரப்பட்டார்கள்.

‘‘இங்கே 600 வீடுகள் இருக்கு. அருமையான காத்து, சுவையான தண்ணி, நல்ல மக்கள்னு நிம்மதியா இருந்தோம். போன வருஷம் இங்க கெஸ்ட் ஹவுஸ் ஆரம்பிச்சதுலருந்து காணக் கூடாத காட்சியை யெல்லாம் பார்க்குறோம். பசங்களும் பொண்ணுங்களும் சரக்கடிச்சு லூட்டியடிக்கிறதோட, ரோட்டுலயே பைக்குல கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. பார்க்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு. வயசுப் பசங்களை வீட்டுலவெச்சுக்கிட்டு பதைபதைச்சுப் போயிருக்கோம். இதைப் பத்தி கெஸ்ட் ஹவுஸ் நடத்துறவர்கிட்ட கேட்டா, ‘திருமணமாகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்குறது தப்பில்லைனு கோர்ட்டே சொல்லிடுச்சு’னு அலட்டிக்காம சொல்றார். கமர்ஷியல் பகுதியில பண்ணினா நாங்க கேள்வி கேட்கப்போறதில்லை. குடியிருப்புப் பகுதியில இப்படியெல்லாம் பண்றது அராஜகம்’’ என்று கோபத்தோடு பேசினார் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வடிவேல்.

வடிவேல் - கு.இராசாமணி - ஆறுக்குட்டி
வடிவேல் - கு.இராசாமணி - ஆறுக்குட்டி

குடியிருப்புவாசிகளால் குற்றம்சாட்டப்படும் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்றோம். கெஸ்ட் ஹவுஸ் இயங்குவது தொடர்பாக ஒரு போர்டுகூட அங்கு இல்லை. தரைத்தளம் மற்றும் முதல்தளம் அந்த பில்டிங் ஓனரின் மருத்துவத் தொழில் பயன்பாட்டுக்கு. மீதமுள்ள இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களில்தான் ரூம்கள் இருக்கின்றன. ரிசப்ஷனில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘இந்த வீக் எண்ட் பசங்க, பொண்ணுங்க சேர்ந்து ஒரு பார்ட்டி பிளான் பண்ணியிருக்கோம். ரூம்ஸ் இருக்கா... சேஃப்டியா இருக்குமா’’ என்று கேட்டோம். ‘‘ஆதார் கார்டோட வாங்க. சேஃப்டிதான். வெள்ளி, சனி, ஞாயிறு டிமாண்ட் அதிகம். போன வாரமெலாம் ரூம் கிடைக்காம நிறைய பேர் திரும்பிப் போயிட்டாங்க’’ என்றார்.

‘‘பொண்ணுங்களைக் கூட்டிட்டு வந்தா பிரச்னையாகுமா?’’ என்றதற்கு, “இது அரசாங்கத்தால அங்கீகரிக்கப்பட்டது. ஒரிஜினல் புரூஃப்போட வாங்க. 21 வயசுக்குக் கீழ இருக்கக் கூடாது” என்றார். ‘‘ஒரு பொண்ணுக்கு மட்டும் வயசு கம்மி. ஏதாவது பண்ண முடியுமா?’’ என்று கேட்டோம். ‘‘மைனர்னா கொஞ்சம் செலவாகும். இப்பக்கூட ஒரு ஜோடி மேல போயிருக்காங்க. ரெகுலரா வர்றவங்கதான். அந்தப் பொண்ணுக்குப் பிரச்னை இல்லாட்டி எங்களுக்கும் பிரச்னையில்லை’’ என்றார்.

ரூம்களைப் பார்த்தோம். டபுள் காட் பெட், ஒரு ஃபேன், அட்டாச்டு பாத்ரூம்... இவ்வளவுதான் ரூம். மொத்தம் 18 ரூம்கள். எல்லா ரூம்களிலும் பால்கனிகள் இருந்தன. நாம் வெளியில் வந்தபோது, 21 வயது மதிக்கத்தக்க ஓர் இளம்பெண்ணும் ஆணும் ரூமுக்காக நின்று கொண்டிருந்தனர்.

கெஸ்ட் ஹவுஸ் இயங்கிவரும் பில்டிங் ஓனர் குருபரனிடம் பேசினோம். ‘‘கெஸ்ட் ஹவுஸுக்கு நேர் எதிர்லதான் எங்க வீடு. அருண் என்பவருக்குத்தான் லீஸுக்குக் கொடுத்திருக்கோம். அவர் கொடுத்த ஐடியாபடிதான் இந்த பில்டிங்கையே கட்டினோம். குடியிருப்புவாசிகள் நிறைய புகார் சொல்லியிருக்கறதால, அடுத்த மே மாசம் அக்ரிமென்ட் முடிஞ்சதும் இதை ஹாஸ்டலா நடத்தப்போறேன்’’ என்றார்.

கெஸ்ட் ஹவுஸை நடத்திவரும் அருண், ‘‘இந்த பில்டிங் கட்டுறப்பவே கமர்ஷியல் அப்ரூவல் வாங்கிட்டோம். இதெல்லாம் தப்பில்லைனு கோர்ட்டே சொல்லிடுச்சு. உங்களுக்கும் ரூல்ஸ் தெரியும்னு நினைக்கிறேன்’’ என்றவரிடம், ‘‘மைனர் பெண்களை அனுமதிக்க அதிக பணம் வாங்கிவிட்டு அட்ஜஸ்ட் செய்வதுதான் ரூல்ஸா?” என்று கேட்டோம். ‘‘அப்படியெல்லாம் இல்லை’’ என்று அடித்துச் சொன்னவரிடம், ‘‘நாங்கள் ஏற்கெனவே அங்கு கள ஆய்வு செய்திருக்கிறோம். ஆடியோ ரெக்கார்டு இருக்கிறது” என்றதும், ‘‘ரிசப்ஷனிஸ்ட்தான் தவறு செய்திருப்பார். அவர்மீது நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று ஜகா வாங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கதவைத் தொறந்தா காண்டம் பாக்கெட்!” - சரக்கு பாட்டில்... சல்லாபக் கூச்சல்....

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வான ஆறுக்குட்டியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றபோது, ‘‘சரவணம்பட்டி கெஸ்ட் ஹவுஸா?’’ என்று கேட்டுவிட்டு அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவர்களை அர்ச்சனை செய்தார். ‘‘என் பையனும் அதைப் பத்திச் சொல்லியிருக்கான். நம்ம ஏரியால இப்படி இருக்கக் கூடாது. அதை இல்லாம பண்ணிடலாம்’’ என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, “ஏற்கெனவே இதேபோல ஒரு புகாரில்தான் நவ இந்தியா பகுதியில் சர்வீஸ் அபார்ட்மென்ட்டுக்கு சீல் வைத்தோம். விசாரித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோருடன் நாம் பேசிய பிறகு, கோவில்பாளையம் போலீஸார் கெஸ்ட் ஹவுஸில் ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் இராசாமணி, எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஆகியோருடன் போலீஸார் ஆலோசனை நடத்தினர். மறுதினம் போலீஸாருடன் இன்ஜினீயர்கள் காலனிக்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஏரியா மக்களிடம் பேசிவிட்டு, கெஸ்ட் ஹவுஸையும் ஆய்வு செய்தார். அதன் பிறகு, ‘குடியிருப்புப் பகுதியில இப்படியொரு விஷயத்தை அனுமதிக்க முடியாது. உடனடியா காலி செய்ங்க. இல்லைன்னா, குடியிருப்புவாசிகளோட புகாரின் பேர்ல கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதையடுத்து, இரவோட இரவாக அந்த கெஸ்ட் ஹவுஸ் மூடப்பட்டது.

‘‘ஜூ.வி-யோட உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டோம். இனி நாங்க நிம்மதியா தூங்குவோம்” என இன்ஜினீயர்கள் காலனி மக்கள் நெகிழ்ந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு