Published:Updated:

`நீங்க அரசியலுக்கு வரணுமானு கேட்டு தாக்குனாங்க!’-காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு

காடு வெட்டி குரு சமாதி
காடு வெட்டி குரு சமாதி

கனலரசனிடம், `உங்க அப்பா இருந்தப்பதான் ஊரில் பிரச்னை இருந்தது. இப்ப நீங்க அரசியலுக்கு வரணுமா?’ எனக் கேட்டதுடன், `நீங்க இருக்கக் கூடாது’ என சொல்லிக்கொண்டே சின்னபுள்ள என்பவர் கத்தியால் கனலரசனை வெட்ட வந்தார்.

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று இரவு தாக்கப்பட்டனர். அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக கனலரசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையில் மதன் உடன் கனலரசன்
சிகிச்சையில் மதன் உடன் கனலரசன்

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காடுவெட்டி குரு. இவர் வன்னியர் சங்கத் தலைவராக இருந்ததுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தவர். இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு மறைந்த காடுவெட்டி குருவின் நினைவு தினம் மே மாதம் 25-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்தது காவல் துறை. குரு சமாதி அமைந்துள்ள இடத்தில் அவரின் மகன் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் மட்டும் நினைவஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதுடன் மற்றவர்கள் அஞ்சலி செலுத்த தடைவிதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தலையில் காயத்துடன் மதன்
தலையில் காயத்துடன் மதன்

இந்த நிலையில், நேற்று இரவு மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை சிலர் கத்தியால் வெட்ட முயன்றனர். இதில் காடுவெட்டி குருவின் மருமகனான மனோஜின் அண்ணன் மதன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், கனலரசன் மற்றும் மனோஜுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது மூன்று பேருமே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அன்புமணி ராமதாஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக கனலரசன் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காடுவெட்டி குருவின் மருமகனான மனோஜிடம் பேசினோம். ``மாமா இறந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு அரசியல் பிரஷர் பயங்கரமாக இருக்கு. அத்துடன் ஏதவாது பிரச்னை நடந்து கொண்டே இருக்கு. கடந்த 25-ம் தேதி மாமாவோட நினைவு நாள். அன்றிலிருந்தும் பிரச்னை நடக்குது. எங்க வீட்டுக்கு வந்துட்டு சமாதிக்குப் போன மாற்றுத்திறனாளி பையன் ஒருவனை வழி மறித்துத் தாக்கினாங்க. உடனே, நாங்க போலீஸுக்கு போன் செய்தோம். பின்னர் ஏன் அவரை அடிச்சீங்க என கேட்க கனலரசன், நான், எங்க அண்ணன் மதன் ஆகிய மூன்று பேரும் போனோம்.

மருமகன் மனோஜ்
மருமகன் மனோஜ்

அங்கு சின்னபுள்ள, அவர் மகன் காமராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் கனலரசனிடம், `உங்க அப்பா இருந்தப்பதான் ஊரில் பிரச்னை இருந்தது. இப்ப நீங்க அரசியலுக்கு வரணுமா?’ எனக் கேட்டதுடன், `நீங்க இருக்கக் கூடாது’ எனச் சொல்லிக்கொண்டே சின்னபுள்ள என்பவர் கத்தியால் கனலரசனை வெட்ட வந்தார். அப்போது என் அண்ணன் மதன் தடுக்க முயன்றதால் மதனின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் வெட்டு விழுந்தது. பின்னர், மீண்டும் கனலரசனை வெட்ட முயன்றபோது நான் தடுத்து கத்தியைக் கையில் பிடித்துக்கொண்டேன் அப்போது எனக்கு கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. அதன் பிறகு கட்டையால் கனலரசனைத் தாக்கினர்.

பிறகு, கத்தியைப் பிடிங்கி மீண்டும் கனலரசனை வெட்ட முயன்றபோது கூட்டம் சேர்ந்து தடுத்துவிட்டனர். பின்னர் உடனே நாங்க அங்கிருந்து கிளம்பியதுடன், ஜெயம் கொண்டம் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அன்புமணியின் தூண்டுதலின் பேரில்தான் இவை நடக்குது. ரவி என்பவர்தான் இதற்கு முழுக் காரணம்.

சிகிச்சையில் மனோஜ்
சிகிச்சையில் மனோஜ்

மே 25-ம் தேதி குருவின் நினைவு தினம். அப்போதெல்லாம் எங்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ், ரவி, சின்னபுள்ள, காமராஜ் மற்றும் அவர்களின் மகன்களான சந்தோஷ், சதீஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு