Published:Updated:

`கந்துவட்டி பொய்ப் புகார்; கொலைமிரட்டல்!' - நெல்லை கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயன்ற பெண்கள் கைது

கந்துவட்டி புகார் தெரிவித்த பெண்கள்
கந்துவட்டி புகார் தெரிவித்த பெண்கள்

கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டுவதாகவும் அவர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகவும் புகார் கூறி கலெக்டர் அலுவலகத்தில் இரு பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். விசாரணையில் அவர்கள் தெரிவித்த புகார் பொய்யானது என்பது தெரியவந்தது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, அவரது உறவினர் பாமா ஆகியோர் கடந்த ஜனவரி 27-ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். 

கந்துவட்டி புகார் அளித்தவர்கள்
கந்துவட்டி புகார் அளித்தவர்கள்

சோடா கம்பெனி நடத்துவதற்காக உள்ளூர் நபர்களிடம் வாங்கிய ரூ.2,50,000 கடனுக்காக ஏழு லட்சம் ரூபாய் செலுத்திய பின்னரும் தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டுவதாகப் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தபோது, அவர்களும் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருப்பதாகப் புகார் கூறினர்.

அதனால் மனம் உடைந்த கிருஷ்ணவேணி, பாமா ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விசாரணை நடத்திய ஆட்சியர்
விசாரணை நடத்திய ஆட்சியர்

இது தொடர்பாக பணகுடி போலீஸார் விசாரித்தனர். அப்போது கிருஷ்ணவேணியும் பாமாவும் சிதம்பராபுரம் கிராமத்தில் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. அத்துடன் வசந்தா, ஜானகி ஆகியோரிடம் அவசரத் தேவை எனக்கூறி நகையை வாங்கி, அடகு வைத்து பணம் எடுத்துக் கொண்டதுடன் திருப்பிக்கொடுக்கவில்லை.

மேலும், யசோதா என்ற பெண்ணிடம் மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அதையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டால், அவர்கள் மீது கந்து வட்டி புகார் கொடுப்பதாக மிரட்டியுள்ளனர். சிலருக்குக் கொலை மிரட்டலும் விடுத்திருப்பதும் தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரை விசாரித்த களக்காடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, கிருஷ்ணவேணி மற்றும் பாமா ஆகிய இருவரையும் கைது செய்தார். இரு பெண்களும் போலியாகக் கந்துவட்டி புகார் கொடுத்ததுடன் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பின் செல்ல