கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீஸ் எஸ்எஸ்ஐ வில்சன், கடந்த 8-ம் தேதி இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய துருப்புச்சீட்டாக, கொலையாளிகள் தப்பி ஓடும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சிக்கின. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில், எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, தேடப்படும் குற்றவாளிகளான தெளஃபீக், அப்துல் சமீம் எனத் தெரியவந்தது.

தமிழக, கேரள போலீஸார் இணந்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் சிக்கிய சிசிடிவி கேமரா காட்சியில், அவர்கள் அங்கு ஒரு பேக்குடன் நீண்ட நேரம் நிற்பது தெரியவந்தது. அப்போது, அவர்களுக்கு உதவிய ஒருவரை போலீஸார் கைதுசெய்தனர். தொடர்ந்து, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி, கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் கர்நாடக போலீஸ் உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை கேரள மாநிலத்தின் கண்ணூர் திருவனந்தபுரம் வழியாக நேற்று காலை களியக்காவிளை காவல் நிலையத்திற்கு காலை 5.30 மணியளவில் அழைத்துவந்தனர்.
அங்கிருந்து தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டவர்களிடம் இரவு 9 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஸ்ரீநாத் ஐபிஎஸ், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 20-ம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்பி-யும் வழக்கு விசாரணை அதிகாரியுமான ஸ்ரீநாத் கூறுகையில், "தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரின் கூட்டாளிகளும் காவல்துறையினரிடம் பிடிபட்டதால், தங்களுடைய சதித்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்குப் பதிலாக, காவல்துறையினரைப் பழிதீர்க்க வேண்டும், போலீஸை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் களியக்காவிளையில் பணியில் இருந்த காவலரை சுட்டுக் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்குகுறித்து கூடுதல் விவரங்களைப் பெற அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்துல் சமீம் மீது குமரி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் 14 வழக்குகள் உள்ளன. அவர்களுக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதுபோன்ற விவரங்கள், போலீஸ் காவலில் எடுக்கும்போது விசாரணை நடத்தப்படும். கன்னியாகுமரி மாவட்ட செக்போஸ்ட்டுகள் அனைத்தும் இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.