Published:Updated:

`இன்டெர்நெட் கால்.. தொடர் இடமாற்றம்; உ.பியில் கைது!' -விமானத்தில் கொண்டுவரப்பட்ட காஞ்சி ரவுடிகள்

காஞ்சிபுரம் ரவுடி தணிகா
காஞ்சிபுரம் ரவுடி தணிகா

தினேஷ் ஆதரவாளர்கள் தணிகாவை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு தீர்த்துக் கட்டிவிட வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

காஞ்சிபுரம் ஸ்ரீதர் ஆதரவாளர்களுக்கிடையே நடைபெற்ற மோதலினால் நடந்த தொடர் கொலைகள் கடந்த சில மாதங்களாகவே காஞ்சிபுரத்தை நிலைகுலையச் செய்தன. ரவுடிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்த நிலையில், முக்கிய ரவுடியான தணிகா தலைமறைவாகவே இருந்தார். அவரை உத்தரப்பிரதேசத்தில் கைது செய்த காவல்துறையினர், நேற்று சிறையில் அடைத்தனர்.

தியாகு, தினேஷ்
தியாகு, தினேஷ்

காஞ்சிபுரத்தில் கோலோச்சி வந்த ரவுடி ஸ்ரீதர், 2017-ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவுக்குப் பின்னர் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் தினேஷ், தணிகா ஆகியோரிடையே `கேங் வார்’ தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள செய்யாறு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் பேருந்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.

இவர் மீது தணிகா ஆதரவாளர் வழக்கறிஞர் சிவக்குமாரை வெட்டிய வழக்கு உள்ளது. இதற்குப் பழி தீர்ப்பதற்காக தினேஷ் ஆதரவாளர்கள், தணிகாவின் ஆதரவாளர்களான காஞ்சிபுரம் பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை வெட்டினார்கள். இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

கொலை செய்யப்பட்ட சதீஷ்
கொலை செய்யப்பட்ட சதீஷ்

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷ், தியாகு உள்ளிட்ட முக்கிய ரவுடிகளை காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் எஸ்.பி. சாமுண்டீஸ்வரியின் தீவிர நடவடிக்கையால் அடுத்த சில தினங்களிலேயே சுமார் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் தணிகா உள்ளிட்ட முக்கிய ரவுடிகள் சிலரால் பதற்றம் நீடித்து வந்தது. இந்த நிலையில், காசியில் தலைமறைவாக இருந்த தணிகா மற்றும் அவரின் கூட்டாளிகளான வசா (எ) வசந்த், சந்துரு (எ) சந்திரசேகர் ஆகியோரை காஞ்சிபுரம் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

ஸ்ரீதர் பாணியில் தணிகா இன்டர்நெட் காலில் மட்டுமே பேசுவதால் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. கோவா, அஸ்ஸாம், நேபாளம் என தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதாலும், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்வதாலும் தணிகாவைப் பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. தினேஷ் ஆதரவாளர்கள் தணிகாவை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு தீர்த்துக் கட்டிவிட வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். தணிகா சரண் அடையாவிட்டால், என்கவுன்ட்டர் செய்யும் முடிவில் காவல்துறையினர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

இந்த நிலையில் தணிகா உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் தங்கி இருப்பதாக மனைவிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த போலீஸார், தணிகாவின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளைக் கொண்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்.

தணிகா இருக்கும் இடத்தை உறுதிப்படுத்திய காஞ்சிபுரம் காவல்துறையினர் உத்தரப்பிரதேசம் சென்று வாரணாசியில் கூட்டாளிகளோடு தங்கியிருந்த தணிகாவைக் கைது செய்தனர். பிறகு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட அவர்கள், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தணிகா
தணிகா

தணிகாவைக் குண்டர் சட்டத்தில் அடைக்க காஞ்சிபுரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறையில் இருக்கும் காஞ்சிபுரத்தின் முக்கிய ரவுடிகள், அங்கிருந்தபடியே தங்களின் நெட்வொர்க் மூலமாக அசைன்மெண்டை முடிப்பதில் வல்லவர்கள். இதையும் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு