Published:Updated:

` சிகரெட் சூடு... தோட்டத்தில் தூக்கு!' - காஞ்சிபுரம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ஒருகட்டத்தில், ரோஜா கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஷிடம் கூறியிருக்கிறார்.

ரோஜா
ரோஜா

திருமணம் செய்துகொள்வதாக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக் காதலி, ஒரு வாரத்திலேயே மர்மமான முறையில் இறந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்வர் ரோஜா. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர், காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், ரோஜா கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஷிடம் கூறியிருக்கிறார்.

``ஆணவக் கொலைகள் ஆரோக்கியமான சமூகத்துக்கு ஏற்றதல்ல!" - சகாயம் ஐ.ஏ.எஸ்

ராஜேஷும் அதற்கு உடன்பட்டு ரோஜாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. அது சசிகலா நடராசனுக்குச் சொந்தமான தோட்டம் என அப்பகுதியினர் தெரிவித்தனர். அங்கு, மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்த பெண் ரோஜா என்பது உறுதி செய்யப்பட்டது.

ரோஜாவின் உடலில் பல இடங்களில் சூடு வைக்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரோஜாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் ராஜேஷ் மற்றும் இதில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோஜா, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அப்பகுதியில் உள்ள வி.சி.க நிர்வாகிகள், மருத்துவமனை முன்பு குவிந்துவிட்டனர். ``ராஜேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ரோஜாவைக் காதலித்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகாட்டி கொடுமைப்படுத்திக் கொன்றுவிட்டார்" எனக் கொந்தளிக்கின்றனர் ரோஜாவின் உறவினர்கள்.

திருமணம் செய்ய அந்த நபர் மறுத்துவிட்டதால், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதுபோலத் தெரிகிறது.
ஆய்வாளர் பாஸ்கர்

தொடக்கத்தில் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், பின்னர் கொலை வழக்காகப் பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ராஜேஷைக் கைது செய்தனர்.

ரோஜா மரணம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்கரிடம் பேசினோம். ``ஏற்கெனவே திருமணமான நபரை ரோஜா காதலித்து வந்ததாகச் சொல்கின்றனர். தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அந்த நபரை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்ய அந்த நபர் மறுத்துவிட்டதால், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதுபோலத் தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முழுமையாக முடிந்த பிறகே மற்ற விவரங்களைத் தெரிவிக்க முடியும்” என்றார்.