Published:Updated:

கஞ்சா விற்பனை முன்விரோதத்தால் மோதல்! - ஒருவர் கொலை; 6 பேருக்கு அரிவாள் வெட்டு

JAYAVEL B

காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையை எதிர்த்த குடும்பத்தினரை முன்விரோதம் காரணமாக ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டியது.

ransacked house
ransacked house

காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியில் வசித்து வருபவர் தனஞ்செழியன். அந்த ஊரின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் கஞ்சா கடத்தி வந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். தொழில் பாதுகாப்புக்காகத் தன்னுடன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் பலரையும் உடன் வைத்துக் கொண்டுள்ளார். கஞ்சா விற்பனை ஒருபுறம் என்றால், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்களும் அதிக அளவில் புருஷோத்தமனின் கூட்டாளிகள் செய்து வந்தார்கள்.

ransacked house
ransacked house

கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது ரவுடிகளை வைத்து தகராறு செய்ததால் தனஞ்செழியன் புருஷோத்தமன் மீது பாலுசெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் கடந்த ஒருவருடமாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. தன்மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி பலமுறை புருஷோத்தமன் தனஞ்செழியனை மிரட்டி வந்தார். ஆனால், தனஞ்செழியன் புகாரை வாபஸ் வாங்க மாட்டேன் என மறுத்துவந்தார். இந்நிலையில், நேற்று இரவு புருஷோத்தமன் தன் கூட்டாளிகளுடன் தனஞ்செழியன் வீட்டுக்குள் நுழைந்தார். உடன் வந்தவர்கள் அனைவரின் கையிலும் பட்டாக் கத்திகள் இருந்தன. இதைக் கண்டதும் அக்கம்பக்கத்தினர் மிரண்டனர்.

‘என் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் உன்னைக் காலி செய்துவிடுவோம்’ எனப் புருஷோத்தமன் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாகத் தனஞ்செழியன் பாலுசெட்டி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். இதையடுத்து பாதுகாப்புக்கு நான்கு காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அதில் மூன்று பேர் நேற்று இரவே அங்கிருந்து சென்றுவிட்டனர். இதை நோட்டம் கண்ட புருஷோத்தமன் இன்று காலை சுமார் 20 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வந்து கோவிந்தவாடி அகரத்தில் உள்ள தனஞ்செழியனின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

Dhananchezhiyan
Dhananchezhiyan

தனஞ்செழியனின் குடும்பத்தில் உள்ளவர்களை ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் தனஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டுக் காயங்களுடன் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொலை செய்ய வந்தவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து, அதன் பதிவுகள் உள்ள ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

ransacked house
ransacked house

காஞ்சிபுரம் பகுதிகளில் மீண்டும் அரிவாள் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இந்தக் கொலையைத் தவிர்த்திருக்கலாம். ரவுடிகள் மீது காவல்துறையினர் கடுமை காட்ட வேண்டும்” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.