Published:Updated:

`பிரசவத்தில் மூத்த பெண்; பிணவறையில் ரோஜா!' - போராட்டத்தில் கதறிய தந்தை

ரோஜா கொலை செய்யப்பட்ட அந்தத் தோட்டத்துக்குப் பெண்கள் தனியாக செல்லமுடியாது. இதனால் அவர் அங்கு வரவழைக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மரணமடைந்த ரோஜா
மரணமடைந்த ரோஜா

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரோஜாவின் மரணம் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. ரோஜாவின் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக அவரின் குடும்பம் காத்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ரோஜா. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். பக்கத்தில் உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பரைக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ராஜேஷ் கூறியதால் அவருடன் சென்றுள்ளார். அடுத்த சில தினங்களிலேயே அப்பகுதியில் உள்ள தோப்பில் பிணமாகத் தொங்கினார் ரோஜா. அவரின் மரணம் தற்கொலை என வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து சந்தேக மரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய்தி தொடர்பாளர் மதி.ஆதவனிடம் பேசினோம். ``சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பூபதிக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள். நான்கைந்து ஆடுகளை வைத்து மேய்த்துக்கொண்டு குடும்பத்தையே கரைசேர்க்கிறார். சிறு குடிசையில் அவரின் ஒட்டுமொத்த குடும்பமே வசித்து வந்திருக்கிறது. ரோஜா குடும்பம் அந்தக் குடிசையில் எப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்களோ என்று பரிதாபப்படும் நிலையில் இருக்கிறது. ஒற்றை மின் விளக்கு திட்டத்தின் கீழ் ஒரே ஒரு மின்விளக்கு மட்டுமே அந்த வீட்டில் உள்ளது.

ராஜேஷ்
ராஜேஷ்

முதல் பெண்ணை செம்பரம்பாக்கத்தில் திருமணம் செய்துகொடுத்துள்ளார்கள். இரண்டாவது பெண்ணான ரோஜா பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். வறுமையின் காரணமாகவே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

குடும்ப பாரத்தை சுமந்துவந்த ரோஜாவின் வறுமையைப் பயன்படுத்தி ஆசைவார்த்தை காட்டி காதலிப்பதுபோல நடித்து ராஜேஷ் ஏமாற்றி இருக்கிறார். ரோஜாவைக் காதலிப்பதற்கு முன்பாகவே ராஜேஷ் காதல் திருமணம் செய்துள்ளார். பக்கத்து ஊரில் உள்ள அந்தப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ரோஜா இறந்த சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணிடம் நாங்கள் பேசினோம். `அவர் என்னையும் ஏமாற்றிவிட்டார். நான் என்னோட குழந்தைகளோட அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன்’ எனக் கதறினார்.

மதி.ஆதவன், காஞ்சிபுரம்
மதி.ஆதவன், காஞ்சிபுரம்

பிணவறைக்குச் சென்று ரோஜாவின் உடலைப் பார்த்தோம். உடல் முழுக்க கொப்பளங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்தே அவர் நிச்சயமாக பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கிறார் என முடிவுக்கு வந்தோம். ரோஜா கொலை செய்யப்பட்ட அந்தத் தோட்டத்துக்குப் பெண்கள் தனியாக செல்லமுடியாது. இதனால் அவர் அங்கு வரவழைக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

முதல் பெண் சுகன்யாவுக்கு பிரசவம் நடைபெற்று மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நாங்கள் ரோஜாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் செய்தபோது அந்தப் பெண்ணின் அப்பா பூபதி, `பெரிய பொண்ணு குழந்தை பெற்று ஹாஸ்பிட்டல்ல இருக்கா… சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்துடுறேன்’னு சொன்னார். அவருக்கு உதவக்கூட யாரும் இல்லாத நிலையைக் கண்டு நாங்கள் கண்கலங்கிவிட்டோம். ஒரு மருத்துவமனையில் முதல் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இன்னொரு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக இரண்டாவது பெண்ணின் உடல் கிடக்கிறது. அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்கிறார் அழுத்தமாக.

பூபதியின் ஆட்டுக் கொட்டகை
பூபதியின் ஆட்டுக் கொட்டகை

எங்கள் போராட்டத்தின் விளைவாக இரண்டு பெண் மருத்துவர் மற்றும் ஒரு ஆண் மருத்துவரை வைத்து உடற்கூறாய்வு செய்தார்கள். அதை வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த அறிக்கையின் முடிவை வைத்து கொலை வழக்காகப் பதிவு செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்திருக்கிறார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இறந்தவரின் குடும்பத்துக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் 25 சதவிகித தொகை வழக்கு பதிவு செய்த உடனே கொடுக்க வேண்டும். இதைப் பெற்றுத்தர காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.