Published:Updated:

`நான் காஞ்சி ஸ்ரீதரின் அடியாள்..!’ - மிரட்டல் விடுத்த ரௌடிக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்

கைது செய்யப்பட்ட 6 பேர்
கைது செய்யப்பட்ட 6 பேர்

காஞ்சி ஸ்ரீதரின் கும்பலைச் சேர்ந்த ரௌடியை மது போதையில் தீர்த்துக்கட்டிய நண்பர்கள் 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள படாளம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் புல்லட் பாரதி என்கிற பாரதிதாசன். காஞ்சியில் கோலோச்சிய தாதா ஸ்ரீதரின் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பாரதிதாசன் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் கடந்த 22-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு மனைவியுடன் புல்லட்டில் வந்தார் பாரதிதாசன்.

கொலை செய்யப்பட்ட பாரதிதாசன்
கொலை செய்யப்பட்ட பாரதிதாசன்

அன்றிரவு நண்பர்களைப் பார்க்கச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை அங்குள்ள ரைஸ் மில் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, நெமிலி போலீஸார் வழக்குப் பதிந்து பாரதிதாசனுடன் அன்றிரவு மது அருந்திய கீழ்வெங்கடாபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேதுபதி, ஆனந்தகுமார், லோகேஷ், தீனதயாளன், சதீஷ் ஆகிய 6 பேரை பிடித்து தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர்.

பாரதிதாசனை வெட்டிக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், ``சம்பவத்தன்று இரவு அனைவரும் மது அருந்திவிட்டு போதையில் இருந்தோம். அந்தச் சமயத்தில், பாரதிதாசனின் புல்லட்டை தீனதயாளன் எட்டி உதைத்தான். அதற்குப் பாரதிதாசன், `டே என்னோட புல்லட்டையே எட்டி உதைக்கிறீயா... நான் யார் தெரியுமா, காஞ்சி தாதா ஸ்ரீதரின் அடியாள்’ என்று கூறி ஓவராக ரவுசு காட்டினான். பதிலுக்கு, `நீ யாராக வேணாலும் இருடான்னு’ தீனதயாளன் கூறினான். ஆத்திரமடைந்த பாரதிதாசன் தீனதயாளனின் மூக்கில் குத்துவிட்டான்.

கைதுசெய்யப்பட்ட 6 பேர்
கைதுசெய்யப்பட்ட 6 பேர்

இதனால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றவர்களையும் பாரதிதாசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினான். முதலில் சொல்லிப் பார்த்தோம். அவன் கேட்பதாகத் தெரியவில்லை. அவனை விட்டால் எங்களுக்குத்தான் ஆபத்து என்று நினைத்து மொத்தமாகச் சேர்ந்து அதைத் தீர்த்துக் கட்டிவிட்டோம்’’ என்று கூறியதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இதையடுத்து, விசாரணை வளையத்துக்குள் இருந்த 6 பேரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு