Published:Updated:

` போலீஸே இன்ஃபார்மர்; எஸ்கேப் ஆகும் ஸ்ரீதரின் கூட்டாளிகள்!' - கதிகலங்கும் காஞ்சிபுரம்

உயர் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை மோப்பம் பிடித்து ரவுடிகளுக்கு சிக்னல் கொடுக்கிறார்கள். இதனால் ரவுடிகளைப் பிடிக்கமுடியவில்லை.

காஞ்சிபுரம் ரவுடிகள்
காஞ்சிபுரம் ரவுடிகள்

ஸ்ரீதரின் கூட்டாளிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் கடந்த சில நாள்களாகவே தொடர் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம் ரவுடி கொலை
காஞ்சிபுரம் ரவுடி கொலை

காஞ்சிபுரத்தில் கோலோச்சி வந்தவர் ரவுடி ஸ்ரீதர். காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொல்லி நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2017-ல் கம்போடியாவில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு அவரின் ஆதரவாளர்களுக்கிடையே ஸ்ரீதரின் இடத்தைப் பிடிப்பதற்காகக் கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து, ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. நாளடைவில் பெரும் பகையாக மாறியது. இரண்டு தரப்பினரும் மாறிமாறி வெட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். கடந்த சில மாதங்களாகவே நாட்டு வெடிகுண்டு, வீச்சரிவாள் சகிதமாக ரவுடிகள் காஞ்சிபுரத்தை வலம் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தணிகா
தணிகா

கடந்த 10 நாள்களுக்கு முன்பு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அடுத்த சில தினங்களிலேயே ஸ்ரீதரின் உறவினர் கருணாகரன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்றுவரும் தொடர் கொலைகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. காவல்துறையின் அலட்சியப்போக்கும் சில காவலர்கள் ரவுடிகளோடு நெருக்கமாக இருப்பதும்தான் கொலைகளுக்கு காரணம் என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில்.

தனிப்படையில் இருக்கும் சில போலீஸார், ரவுடிகளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை மோப்பம் பிடித்து ரவுடிகளுக்கு சிக்னல் கொடுக்கிறார்கள். இதனால் ரவுடிகளைப் பிடிக்கமுடியவில்லை என்ற தகவலும் பரவுகிறது.

தினேஷ்
தினேஷ்

``காஞ்சிபுரம் ஏ.எஸ்.பியாக ஸ்ரீநாதா பணியில் இருந்தபோது ரவுடிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் அடைத்துவந்தார்.

அதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே ரவுடிகளைக் கட்டுப்படுத்த முடியும்“ என்பது காஞ்சிபுரம் மக்களின் குரலாக இருந்துவருகிறது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தியாகு
தியாகு

அதில் பத்து ராஜா, புருஷோத், ஹரி, பிரபு, சரத், விஜயகுமார், டிராவிட் உட்பட 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், டாப் லெவல் ரவுடிகளான தினேஷ், தணிகாசலம் மற்றும் தியாகு உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருந்துவருகிறார்கள். அவர்களைக் காவல்துறையினர் தேடிவருகிறார்கள். ` சில போலீஸார் அவர்களிடம் வைத்துள்ள ஆழமான நட்பு காரணமாக அவர்கள் சிக்குவது கடினம்தான்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.