Published:Updated:

காஞ்சிபுரம் சரவண பவன் மேலாளர் தற்கொலை… நிர்வாகத்தின் மிரட்டலை எதிர்க்கும் ஊழியர்கள்!

காஞ்சிபுரம் சரவண பவன் ஊழியர்கள் போராட்டம்
காஞ்சிபுரம் சரவண பவன் ஊழியர்கள் போராட்டம்

வடபழனி தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் அழைத்திருக்கிறார்கள். முன்பணம் கொடுத்தது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியிருக்கிறார்கள். மனமுடைந்த பழனியப்பன், இரவு முழுவதும் தூங்காமல், செல்போன் மூலமாகத் தன் மனக்குமுறல்களை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் சரவண பவனின் காஞ்சிபுரம் மேலாளர், பழனியப்பன் என்பவர் வடபழனியில் உள்ள நிர்வாகத்தினர் மிரட்டியதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், காஞ்சிபுரத்தில் சரவணபவன் ஊழியர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்து, சரவணபவன் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜகோபால்
ராஜகோபால்

திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், 1981ல் சென்னையில் ஹோட்டல் சரவண பவன் என்னும் சைவ உணவகத்தைத் தொடங்கினார். இன்று அது, உலகெங்கிலும் பல்வேறு கிளைகளோடு இயங்கிவருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் சின்ன காஞ்சிபுரம் பேருந்து நிலையம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. உலகப் புகழ் வாய்ந்த காஞ்சிப் பட்டு மற்றும் கோயில்கள் உள்ள காஞ்சிபுரம் நகரத்திற்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதால், இந்த மூன்று கிளைகளிலும் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும். சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த உணவகங்களில் பணியாற்றிவருகின்றனர். மூன்று உணவகங்களுக்கும் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர், பழனியப்பன்

கடந்த சில மாதங்களாக, ஊழியர்களுக்கு சரவண பவன் நிர்வாகம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை. இதையடுத்து, பழனியப்பன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசி இருக்கிறார். தற்போது நிர்வாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், சம்பளம் கொடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என நிர்வாகத்தினர் பழனியப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதை ஊழியர்களிடம் பழனியப்பன் தெரிவித்திருக்கிறார். ஊழியர்கள், பழனியப்பன் சொல்வதை ஏற்காமல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். போராட்டத்தைத் தடுப்பதற்காக, நேற்று 600 ஊழியர்களுக்கும் கொடுக்கவேண்டிய சம்பளத் தொகையில் முன்பணமாக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

சரவணபவன் மேலாளர் பழனியப்பன்
சரவணபவன் மேலாளர் பழனியப்பன்

முன்பணம் கொடுத்ததையடுத்து, சென்னை வடபழனியில் இருக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் அழைத்திருக்கிறார்கள். முன்பணம் கொடுத்தது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் இருக்கிறார்கள். மனமுடைந்த பழனியப்பன், இரவு முழுவதும் தூங்காமல், செல்போன் மூலமாகத் தன் மனக்குமுறல்களை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாலையிலேயே பணிக்கு வரும் பழனியப்பன் வராததால், ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. சில ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று சரவண பவன் ஊழியர்களும் பணியை புறக்கணிப்பு செய்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சரவணபவன் ஊழியர்கள், “ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி, இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் சம்பளம் கொடுக்கிறார்கள். மற்ற மாவட்டங்களைவிட, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சரவண பவன் நல்ல லாபத்துடன் இயங்கிவருகிறது. ஒவ்வொரு ஹோட்டலிலும் தினமும் எட்டு லட்ச ரூபாய் வருமானம் வரும். அத்திவரதர் வைபவத்தின்போது 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார்கள். ஆனால், சம்பளத்தைக் கேட்டால் ஆட்குறைப்பு செய்துவிடுவோம் என நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். நேற்று திருமண நாள் என்பதால் வியாபாரம் நன்றாக இருந்தது. மூன்று கிளைகளிலும் 18 லட்சத்திற்கும் மேல் வசூல் ஆனதால், ஒவ்வொருவருக்கும் சம்பள பாக்கியில் ஒரு பகுதியாக தலா 5,000 ரூபாய் கொடுத்தார் பழனியப்பன்.

சரவணபவன் ஊழியர்கள் போராட்டம்
சரவணபவன் ஊழியர்கள் போராட்டம்

இதன் காரணமாக பழனியப்பனைத் தகாத வார்த்தைகளால் நிர்வாகத்தினர் மிரட்டி இருக்கிறார்கள். ‘உங்களால்தான் நான் திட்டு வாங்கினேன். என்னைத் தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என ஊழியர்களிடம் நேற்று பேசினார். மனஉளைச்சலொடு வீட்டுக்குச் சென்றவர், செல்போன் மூலமாகவும் ஊழியர்களைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்“ என்கிறார்கள்.

உயிரிழந்த பழனியப்பன் குடுப்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும். இரண்டு மாத சம்பள பாக்கியை உடனே கொடுக்க வேண்டும். சரவண பவன் உரிமையாளர், நேரடியாக இங்கே வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஆகஸ்ட் மாநாடு... டிஜிட்டல் பிரசாரம்... ரஜினி என்ட்ரி! - ரஜினியின் தேர்தல் ப்ளான்

சென்னை வடபழனி சரவண பவன் அலுவலக தொலைபேசி எண்ணிற்குப் போன் செய்து பேசினோம். எதிர் முனையில் பேசியவர், 'அலுவலகத்தில் இப்போது யாரும் இல்லை' என அழைப்பை உடனே துண்டித்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு