Published:Updated:

`ஓலைக் குடிசை டு யூடியூப்!’- பாம்பால் சிக்கிய காஞ்சிபுரம் பெண் சாமியாரின் பகீர் பின்னணி

பெண் சாமியார்
பெண் சாமியார்

நெற்றி நிறைய குங்குமம், எலுமிச்சை மாலை, சிறிய சூலம் சகிதமாக பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார்.

பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு தன்னை அம்மனாகவே பாவித்து அருள்வாக்கு சொன்ன காஞ்சிபுரம் பெண் சாமியார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதைப்போல, விளம்பரத்துக்காக யூடியூபில் பதிவேற்றம் செய்த வீடியோக்களே அவருக்கு வினையாகிப்போனது. ஓலைக் குடிசையில் தொடங்கிய அவரின் ஆன்மிகப் பயணம் யூடியூப் வரை வளர்ந்து நிற்கிறது.

பாம்புடன் பெண் சாமியார்
பாம்புடன் பெண் சாமியார்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள வெள்ளரி அம்மன் கோயிலில் அருள்வாக்கு சொல்லிவரும் பெண் சாமியார் கபிலா. எம்.ஏ பட்டதாரியான இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தபோது அந்த இடத்துக்குப் பட்டா வாங்கி, சிறிய குடிசை போட்டு குறிபார்க்க உட்கார்ந்திருக்கிறார். தென்னங்கீற்றால் வேய்ந்த குடிசை, வேப்பமரம், சிறிய அம்மன் சிலை இதுதான் அவரின் ஆரம்ப மூலதனம். தான் சொல்லும் வாக்கு, அம்மன் வாக்காகவே இருக்க வேண்டும் என்பதற்காக நெற்றி நிறைய குங்குமம், எலுமிச்சை மாலை, சிறிய சூலம் சகிதமாக பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கடந்த 2003-ம் ஆண்டு கோயில்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தச் சட்டம் அமலில் இருந்தபோதே பத்து, இருபது கோழிகளைக் கோயிலுக்குக் கொண்டுவந்து, கோழிகளின் கழுத்தைக் கடித்து துப்பி பரபரப்பு கிளப்புவார். அம்மனாக தன்னை உருவகப்படுத்திக்கொள்ள புதிதுபுதிதாக எதையாவது செய்துகாட்டுவார். பத்து வகையான வண்ணங்களில் முகத்தை காட்டுவேன் எனச் சொல்லி, கலர் சீரியல் பல்புகளை முகத்தில் அடிக்கவிட்டு சினிமாவில் வருவதைப் போல கலர்கலராக முகத்தைக் காட்டுவார். இதை உள்ளூர் கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பி விளம்பரப்படுத்திக் கொள்வார். உள்ளூர் விளம்பரங்கள் அவரை உச்சத்தில் கொண்டு செல்ல ஆரம்பித்தது. குடிசையும் மெல்ல மெல்ல கோயில் கோபுரமாக உயர்ந்தது.

வனத்துறையினர் விசாரணை
வனத்துறையினர் விசாரணை

இந்த நிலையில்தான் கடந்த 4.2.2018-ல் கோயில் கும்பாபிஷேகத்தின்போது இரண்டு பாம்புகளை வைத்து அம்மனாக அவதாரம் எடுத்து பக்தர்களை பரவசமாக்கி இருக்கிறார். பாலாபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் என பாம்புகளை கழுத்தில் போட்டுக்கொண்டு நடத்திய பூஜைகள் அனைத்தும் வீடியோவாக பதிவாக்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் குறையவே கழுத்தில் பாம்புடன் செய்த சித்து விளையாட்டுகளை யூடியூபில் பதிவேற்றம் செய்தார். இதைத் தொடர்ந்துதான் வனத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

``இதையெல்லாம் நானாகச் செய்யவில்லை. அம்மன் என்னிடம் சொன்னதால்தான் பாம்பை வைத்து பூஜை செய்தேன்“ என வனத்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் கபிலா.

`காதலை மறைக்கப் பேய் நாடகம்; பிரம்பு அடி கொடுத்த திருநங்கை சாமியார்'- சேலம் சர்ச்சை!

செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கன், ``சில பழங்குடியினரிடம் பாம்பை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு பூஜை செய்திருக்கிறார் கபிலா. ஆனால், இப்போது பாம்பாட்டி ஒருவர் பாம்பைக் கொண்டு வந்ததாகவும் அவர்கள் யாரென்று தெரியாது என்றும் கூறுகிறார். அம்மன்தான் செய்யச் சொன்னது என கற்பனையாக ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பெண்ணின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை செய்து பார்த்தோம். ஆனால், பாம்பு கிடைக்கவில்லை. பெண் சாமியாருக்கு மீடியாக்களில் வந்த செய்தி ஒரு பெரிய விளம்பரமாக போய்விட்டது. ஆனால், பாம்புகளை வீட்டில் வைத்திருப்பது குற்றம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. இந்தச் செய்திகளைப் படித்துவிட்டு வீட்டில் பாம்பு வைத்திருப்பது தவறு என்று உணர்ந்த இருவர் எங்கள் அலுவலகத்துக்கு வந்து, `வீட்டில் வைத்திருந்தது தவறு என்று இப்போதுதான் தெரியும்' என அவர்கள் வைத்திருந்த பாம்புகளை கொடுத்தார்கள்” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு