Published:Updated:

`உடனே வேணும்..!’- கஞ்சா விற்பனைப் பிரச்னையில் காஞ்சிபுரம் இளைஞருக்கு நேர்ந்த கதி

அஜித்
அஜித்

வெங்கடேசன் என்பவரின் செல்போனில் ‘காக்கா’ சுரேஷ் என்பவர் பேசியது தெரியவந்தது. காக்கா சுரேஷ் பிரபல ரவுடி தினேஷ் என்பவரின் ஆதரவாளர். இதையடுத்து வெங்கடேசன், ‘காக்கா’ சுரேஷ், ஸ்ரீதர், சூர்யா என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் பகுதியில் குறித்த நேரத்தில் கஞ்சா சப்ளை செய்யாத காரணத்தால் கஞ்சா வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இதையடுத்து நான்கு பேரைக் காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரபல ரவுடியின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதால் மீண்டும் பழிவாங்கும் கொலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் காஞ்சிபுரம் பகுதியினர் வேதனையடைந்துள்ளனர்.

கஞ்சா
கஞ்சா

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர், அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அஜித்தை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தனக்கு உடனடியாக கஞ்சா வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு இப்போது கொடுக்க முடியாது என அஜித் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மாலை முழுவதும் நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார் அஜித். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தலைமறைவானது. இன்று அதிகாலையில்தான் காவல்துறையினருக்குத் தகவல் தெரிந்தது. இதையடுத்து அஜித் உடலைக் கைப்பற்றிய காஞ்சிபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் பதிவுகளின் அடிப்படையில், கொலையில் தொடர்புடைய நான்கு பேரைக் காஞ்சிபுரம் காவல்துறையினர் செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. காஞ்சிபுரம் பகுதியில் காஞ்சா விற்பனை மறைமுகமாக அதிகரிக்கத் தொடங்கியது. டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு கட்டுக்குள் இருந்த க்ரைம் ரேட் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாசநாதர் கோயில் பகுதியில் போதையில் காய்கறி வியாபாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அரிவாள் வெட்டு, கொலை மிரட்டல் எனக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் பகுதியில் பல்லவமேடு, காவாங்கரை, ஏனாத்தூர், வெள்ளகுளம் சுடுகாடு, பஞ்சுப்பேட்டை, பருத்திக்குளம், பூக்கடைச் சத்திரம், சங்கரா யுனிவர்சிட்டி, தாயார்அம்மன்குளம் போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலை
கொலை

இன்று அதிகாலையில் தகவல் கிடைத்து அஜித் பிரேதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது வெங்கடேசன் என்பவரின் செல்போனில் `காக்கா’ சுரேஷ் என்பவர் பேசியது தெரியவந்தது. காக்கா சுரேஷ் பிரபல ரவுடி தினேஷ் என்பவரின் ஆதரவாளர். இதையடுத்து வெங்கடேசன், `காக்கா’ சுரேஷ், ஸ்ரீதர், சூர்யா என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு