Published:Updated:

சாத்தான்குளம் மரணம்: "காவல்துறை சித்ரவதை மரணங்கள் நிகழக் கூடாது” இணையவழிக் கருத்தரங்கில் கனிமொழி!

கனிமொழி
கனிமொழி

”காவல் சித்ரவதை மரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சாத்தான்குளத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இனி எங்குமே நிகழக் கூடாது. இதைத் தடுக்க பண்பாட்டு மாற்றம் தேவைப்படுகிறது. அதை நாம் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்” என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு ’காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (தமிழ்நாடு)’ சார்பாக இணையவழிக் கருத்தரங்கும், சாத்தான்குளம் பிரகடனம் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில், ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி தலைமை தாங்கினார். ”சாத்தான்குளம் படுகொலைக்கு எதிராகச் சாட்சி சொன்ன பெண் காவலர் ரேவதியை தமிழக அரசு கெளரவிக்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

உயிரிழந்த பென்னிக்ஸ் , ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ் , ஜெயராஜ்

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல் காயங்களை முறையாக ஆய்வு செய்யாமல், அவர்களைச் சிறைக்கு அனுப்பிய நீதிபதி சரவணன் மீதும், படுகொலையான இருவரையும் உரிய மருத்துவப் பரிசோதனை செய்யாமல் சிறைக்கு அனுப்பியதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கிய பெண் மருத்துவர் வினிலா மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனவும் இக்கூட்டியக்கத்தின் செயலாளர் பாண்டியன் குறிப்பிட்டார். மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன், ஒருவரைக் கைதுசெய்யும் போதிலிருந்து சிறையில் அடைப்பது வரையில் போலீஸார் பின்பற்றப்பட வேண்டிய 14 பரிந்துரைகள் குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், ’சாத்தான்குளம் பிரகடன’த்தை வெளியிட, தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், தி.மு.க மாநில மகளிரணித் தலைவருமான கனிமொழி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய நித்யா ராமகிருஷ்ணன், “ஐக்கிய நாடுகள் சபையின், சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டதுடன், அந்த உடன்படிக்கையை ஏற்பிசைவும் செய்ய வேண்டும். இந்தியாவில், சித்ரவதைக்கு எதிரானச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார். நிறைவாகப் பேசிய கனிமொழி, “காவல் நிலையங்களில் நடப்பவை நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர்

அது குறித்து எந்தப் பதிவும் இருப்பதில்லை. பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என யாராக இருந்தாலும் அதிகாரத்தை எதிர்த்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. அப்படி மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் சுமத்தி, அவர்களைக் கைதுசெய்யக்கூடிய நடவடிக்கை இன்று நிலவுகிறது. அத்துடன் அவர்கள்மீது வன்முறையும் ஏவப்படுகிறது.

அப்படி ஏவப்படும் வன்முறையை ஏற்கத்தக்க மனநிலைதான் மக்களிடையே நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால், அவர்கள் மீது வன்முறை ஏவப்படுவது இயல்பான ஒன்றாகிவிடுகிறது. இதை மக்கள் மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிடுகின்றனர். காவல் நிலையங்களிலும், சிறைகளிலும், விசாரணை இடங்களிலும் சித்ரவதை நிலவுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த நிலை மாற வேண்டும். திரைப்படங்களில் காவல்துறை குறித்துக் காட்டுகிறபோது, அவர்கள் சர்வ சாதாரணமாக மக்களை அடிப்பதுபோலக் காட்டுகிறார்கள். மக்களும் அதை அப்படியே அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். கொரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்ட தொடக்கத்தில், கடந்த காலத்தில் மக்கள்மீது காவல்துறை தாக்குதல் தொடுத்ததை வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து மக்கள் அதைக் கடந்து சென்றுவிட்டார்கள். இந்தநிலை மாற வேண்டும். காவல் சித்ரவதை மரணங்கள், சாத்தான்குளத்தில் மட்டுமல்ல... இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் தொடர்ந்து நடந்துவருவதைப் பார்க்கிறோம்.

இணையவழி கருத்தரங்கில் பேசிய கனிமொழி
இணையவழி கருத்தரங்கில் பேசிய கனிமொழி

குறிப்பாக, இந்தியாவில் இன்று அச்சம் நிலவும் சூழ்நிலையே இருக்கிறது. எனவே, இந்த தருணத்தில் சாத்தான்குளம் பிரகடனம் வெளியிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. காவல்துறை மரணங்கள் மற்றும் சித்ரவதைகளை ஒருக்காலும் ஏற்க முடியாது. மனித உரிமைகள் குறித்துக் காவல்துறையினருக்கும் நீதிபதிகளுக்கும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இன்று இருக்கும் நிலையை மாற்றும் வரை தொடர்ந்து போராட வேண்டும். அதற்காக ஒரு பண்பாட்டு மாற்றம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டு மாற்றம் உடனடியாக நடக்காது. நாம் எல்லோரும் இணைந்துதான் அதை உருவாக்க வேண்டும். காவல் சித்ரவதைகள் தடுக்கப்பட வேண்டும். இவை தொடர முடியாத சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு