Published:Updated:

`அதிகாலை வழிப்பறி; கத்திக்குத்து!' - பெங்களூருவில் கொள்ளையர்களை 2.5 கி.மீ தூரம் துரத்திய நடிகர்

கன்னட நடிகர் ரகு பட்
கன்னட நடிகர் ரகு பட் ( Facebook )

கன்னட நடிகர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவரை 2.5 கி.மீ தூரம் துரத்திச் சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது.

பெங்களூருவில் கார் ஓட்டுநரிடம் திருடிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை காரில் விரட்டிச் சென்று போலீஸார் பிடிக்க உதவியிருக்கிறார் கன்னட நடிகர் ரகு பட். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் யஷ்வந்த்பூர் பகுதியில் வசித்துவரும் மொஹீன் கான் மற்றும் அப்துல் பஹீம் என்பது தெரியவந்தது. அவர்களில் மொஹீன் கான் மீது 27 வழக்குகள் இருப்பதும், 24 மணி நேரத்தில் அவர்கள் ஈடுபட்ட இரண்டாவது வழிப்பறி அது என்பதும் தெரியவந்தது.

Representational Image
Representational Image

சாண்டல்வுட்டில் 12க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரகு பட். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ரகு பட், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் திரைப்படத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். கன்னிங்ஹாம் ரோடு சாலை வழியாக அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கார் டிரைவர் ஒருவரிடம் சிலர் தகராறு செய்ததைப் பார்த்திருக்கிறார்கள். முதலில், நண்பர்களுக்கு ஏற்பட்ட தகராறு என நினைத்து அவர்கள் கடந்துபோன நிலையில், கத்தியைப் பார்த்த ரகு பட்டின் மனைவி அது வழிப்பறியாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். பின்னர் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்த நிலையில், இருவர் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். அவர்களை சுமார் 2.5 கி.மீ தூரம் காரில் விரட்டிய நிலையில், போலீஸாருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பைக்கில் சென்றவர்கள் தடுமாறி விழவே, ஒருவருக்குக் கடுமையாகக் காயம்பட்டிருக்கிறது. லேசான காயமடைந்த மற்றொருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்த சூழலில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய ரகு பட், அப்படி ஒரு சூழலில் கார் டிரைவருக்கு உதவவோ அல்லது தப்பிச் செல்பவர்களைப் பிடிக்கவோ யாரும் முயற்சி செய்யாதது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மொஹீன் மற்றும் பாஹிம் ஆகியோர் உல்சூர் ஏரி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பைக்கில் சென்றிருக்கிறார்கள். அப்போது, அந்தச் சாலையில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அவரை கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்து ரூ.2,500 பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்பிலான தங்க நகை ஆகியவற்றைப் பிடுங்கிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்கள். அதேபோல், அந்த காரின் சாவியையும் அவர்கள் தங்களோடு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்'' என்றனர்.

மேலும், அதற்கு முந்தைய நாள் சாந்தி நகர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து ரூ.12,000 பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு அவர்கள் இருவரும் தப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து பேசிய வில்சன் கார்டன் போலீஸார், ``பெங்களூரு ஹோசபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வியாழக்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் சாந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் தனது இன்னோவா காரில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மொஹீன் மற்றும் பஹீம் இருவரும் அவரைக் கத்தியால் குத்திவிட்டு பணம் மற்றும் மொபைல் போனைத் திருடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றனர்.

`சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!'- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை

ரமேஷ் போலீஸாரிடம், ``கத்தியைக் காட்டி அவர்கள் என்னை மிரட்டினர். என்னிடம் இருந்த ரூ.12,000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை அவர்களிடம் கொடுத்தேன். பின்னர் அங்கு மேலும் இருவர் வந்து, அரிவாளைக் காட்டி மிரட்டி, எனது வண்டியை எடுத்துச் சென்றுவிட்டனர். பின்னர், ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து காரைத் தேடினேன். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை'' என்று தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு