Published:Updated:

`உன் முடிவு என் கையிலதான்!’- அ.தி.மு.க பெண் நிர்வாகிக்கு மிரட்டல்; தலைமறைவான அ.ம.மு.க பிரமுகர்

அ.தி.மு.க பேரூர் செயலாளர் லதா சந்திரன்
அ.தி.மு.க பேரூர் செயலாளர் லதா சந்திரன்

``போலீஸ் விசாரணையிலதான் அவர் அ.ம.மு.க-வுல இருக்கிறதே தெரியும். ஒருவேளை நான் வெளியே இறங்காம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கட்டும்ன்னு நினைச்சு மிரட்டல் கடிதம் போட்டிருப்பாருனு நினைக்கிறேன்’’ என்கிறார் அ.தி.மு.க பேரூர் செயலாளர் லதா சந்திரன்.

கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடைப் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்லின் பிரேமலதா என்ற லதா சந்திரன். ஆளூர் பேரூராட்சி முன்னாள் தலைவியான இவர், ஆளூர் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளராகவும், வீரநாராயண சேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவியையும் வகித்துவருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவு தபால் ஒன்று வந்திருக்கிறது. அனுப்புநர் முகவரியில் மணிகட்டிபொட்டல் பகுதியைச் சேர்ந்த ராகவன் என்பவர் அனுப்பியதாக அந்தத் தபாலில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தைப் பிரித்து படித்த லதா சந்திரன் அதிர்ச்சியடைந்தார். அந்தக் கடிதத்தில் அவரைப் பற்றி அவதூறாக எழுதியிருந்ததுடன், அவரைக் குடும்பத்துடன் லாரி ஏற்றிக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், `லதா சந்திரா நீ அ.தி.மு.க கட்சிய வச்சு எப்படி வளர்ந்தேனு எனக்குத் தெரியும். இதே கட்சியில இருந்து கெட்ட பெயரோட உன்னை வெளியேத்த என்ன செய்யணுமோ, அதைச் செய்யத் தொடங்கிட்டேன்.

மிரட்டல் கடிதம்
மிரட்டல் கடிதம்

உன்னை குடும்பத்தோடு பழிவாங்குவதே எனது ஒரே குறிக்கோள். நீ எங்கே போவ, எப்பல்லாம் போவே, எல்லாமே பாக்கிறதுக்கு எனக்குப் பல இடங்களில் ஆள் இருக்கு. அதுக்குன்னு ஒரு படையே நான் வச்சிருக்கேன். வரக்கூடிய தேர்தலுக்கு நீ இருக்கக் கூடாதுனு நான் முடிவு பண்ணிட்டேன். தேவைப்பட்டா உன்னை வண்டியவெச்சு ஏத்தி இறக்கி விபத்துன்னு போலீஸையே நம்பவைப்பேன். உன்னோட முடிவு என் கையிலதான்" என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

லதா சந்திரன் இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், ராகவன் அ.ம.மு.க நிர்வாகி என்பது தெரியவந்தது. மணிக்கட்டிபொட்டலிலுள்ள ராகவன் வீட்டில் போலீஸார் விசாரணைக்குச் சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த இரணியல் போலீஸார் தலைமறைவான ராகவனைத் தேடிவருகின்றனர்.

அ.ம.மு.க நிர்வாகி ராகவன்
அ.ம.மு.க நிர்வாகி ராகவன்

இது குறித்து லதா சந்திரன் கூறுகையில், ``ராகவன்கிறவர் யாருன்னே எனக்குத் தெரியாது. எதுக்கு மிரட்டல் கடிதம் போட்டாருன்னும் தெரியாது. போலீஸ் விசாரணையிலதான் அவர் அ.ம.மு.க-வில இருக்கிறதே தெரியும். ஒருவேளை நான் வெளிய இறங்காம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கட்டும்னு நினைச்சு மிரட்டல் கடிதம் போட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். இது பற்றி இரணியல் போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கேன். போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்காங்க. அவரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கணும்" என்றார். அ.தி.மு.க பிரமுகருக்கு அ.ம.மு.க நிர்வாகி மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு