குமரி: கடன் தொல்லையால் விஷம் குடித்த குடும்பம்! - தொழிலாளி, மகள் பரிதாப மரணம்

கடனில் இருந்து தப்பிக்க சொந்த ஊரான ஆரல்வாய்மொழியில் இருந்து அஞ்சுகிராமத்துக்கு இடம் மாறி வந்துள்ளார். ஆனாலும், அவரை கடன் துரத்தியது. ஒருகட்டத்தில் மரணம்தான் தீர்வு என குடுமத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் தவறான முடிவை எடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (41). இவரது மனைவி ஈஸ்வரி (38), மகள் ரவீனா (14). மணிகண்டன் ஓவியக் கலையை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்து வந்தார். இதுபோக ஆட்டோ ஓட்டும் தொழிலும் செய்து வந்தார். ஆரல்வாய்மொழி பகுதியில் சுய உதவிக்குழு உள்ளிட்டவற்றில் இருந்து மணிகண்டன் அதிகமாக கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடன் சுமை அதிகரித்ததால் குடும்பத்துடன் அஞ்சுகிராமம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் ஆட்டோ ஓட்டுவதுடன், துணிப் பைகள் செய்து விற்பனை செய்வது போன்ற பணிகளும் செய்து வந்துள்ளார். ஆனாலும் அவர் எதிர்பார்த்தபடி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

விஷம் அருந்திய பிறகு மணிகண்டன் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தான் விஷம் அருந்திய விஷயத்தை கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் சிலர் அங்கு சென்று மணிகண்டன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரை மீட்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மணிகண்டன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில் மணிகண்டனின் மகள் ரவீனாவும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக மரணமடைந்தார். மணிகண்டனின் மனைவி ஈஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மணிகண்டன் எதாவது தொழில் செய்து முன்னேறலாம் என முயற்சித்துள்ளார். அதற்காக கடன் வாங்கியிருக்கிறார். தொழிலில் ஜெயிக்க முடியவில்லை. இதனால், கடனில் இருந்து தப்பிக்க சொந்த ஊரான ஆரல்வாய்மொழியில் இருந்து அஞ்சுகிராமத்துக்கு இடம் மாறி வந்துள்ளார். ஆனாலும், அவரை கடன் துரத்தியது. ஒருகட்டத்தில் மரணம்தான் தீர்வு என குடுமத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் தவறான முடிவை எடுத்துள்ளார். அவரிடம் பணம் கேட்டு யாரும் டார்ச்சர் செய்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.