Published:Updated:

`7 ஆண்டுகளுக்கு முன் கத்தியால் தாக்கினார்கள்.. இன்று?!'- எஸ்.எஸ்.ஐ. வில்சன் வழக்கில் பி.ஜே.பி தலைவர்

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, என்னைக் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதிகள்தான் களியக்காவிளை செக்போஸ்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றார், பி.ஜே.பி மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி.

எஸ்.எஸ்.ஐ. வில்சன் உருவ படத்திற்கு மலரஞ்சலி
எஸ்.எஸ்.ஐ. வில்சன் உருவ படத்திற்கு மலரஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி செக்போஸ்ட்டில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். போலீஸாரால் தேடப்பட்டுவரும் தெளபீக் மற்றும் முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஷ்வரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடந்துவருகிறது. கேரள போலீஸாரும் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

பி.ஜே.பி. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமையில் மவுன ஊர்வலம்
பி.ஜே.பி. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமையில் மவுன ஊர்வலம்

இந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ. வில்சனை துப்பாக்கியால் சுட்டு படுகொலைசெய்த தீவிரவாதிகளை உடனடியாகக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி, பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது. படந்தாலுமூடு முதல் களியக்காவிளை வரை மௌன ஊர்வலமும், அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆர்ப்பாட்ட மேடையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் உருவப் படத்திற்கு இந்து இயக்கத்தினர் மலர் அஞ்சலிசெலுத்தினர்.

இதில் கலந்துகொண்ட பி.ஜே.பி மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி கூறுகையில், "தேசிய புலனாய்த்துறை இந்தியாவில் கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் தமிழகத்தின் மேலப்பாளையம், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவிதாங்கோடு பகுதிகளைச் சேர்ந்தர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், தீவிரவாதிகளைத் தேடுதல் நடத்திய காரணத்தால், தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளை மிரட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்னை கத்தியால் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதிகள்தான் களியக்காவிளை செக்போஸ்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

நான் வாக்கிங் செல்லும்போது, தாக்குதலுக்காக ஏழு ஆண்டுக்கு முன்பு கத்தியைப் பயன்படுத்தியவர்கள், தற்போது துப்பாக்கி பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்து ,தேசிய புலனாய்வுத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும். அவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்" என்றார்.