Published:Updated:

எஸ்.எஸ்.ஐ வில்சன் மீது அவதூறு; பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! - ஃபேஸ்புக் பதிவால் சிக்கிய நபர்

ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்ட நவாஸ் சாகுல்
ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்ட நவாஸ் சாகுல்

ஃபேஸ்புக் பதிவு மூலம் அவதூறு பரப்பிய நவாஸ் சாகுலுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீஸார் களியக்காவிளைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொலையாளிகள் அப்துல் சமீம், தெளஃபிக் ஆகிய பயங்கரவாதிகள் எனத் தெரியவந்தது. தமிழக, கேரள போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து அப்துல் சமீம், தெளஃபிக், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதி தௌஃபீக், சமீம்
தீவிரவாதி தௌஃபீக், சமீம்

கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளை கடந்த 16-ம் தேதி களியக்காவிளை மற்றும் தக்கலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், பாளையங்கோட்டை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். சமூக விரோத தடுப்புச் சட்டமான உபா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்குத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பெங்களூரைச் சேர்ந்த இஜாஸ் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தப் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், உதவி செய்தவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத கும்பலுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிக்கொடுத்ததாகச் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.வில்சன் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த நவாஸ் சாகுல் என்பவரை புதுக்கடை போலீஸார் கைது செய்தனர். நவாஸ் சாகுல் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ``எஸ்.எஸ்.ஐ.வில்சன் தக்கலையில் பணியாற்றியபோது திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த படிப்பில் படுசுட்டியான சமீம் மீது பொய் வழக்கு போட்டார். சமீம், தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றின் கரையில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த வில்சன் தலைமையிலான போலீஸார் சமீமையும் அவன் நண்பர்களையும் கைது செய்தனர். அவர் மீது, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவைத்து தகர்க்கத் தீவிரவாதத் திட்டம் தீட்டியதாகப் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தவர் வில்சன்.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

அத்தோடு பல ரகசிய இடங்களுக்குக் கொண்டுபோய் நையப்புடைத்துள்ளார் வில்சன். பொய் வழக்குபோட்டு தீவிரவாதி ஆக்கியவர் பின்னர் அவன் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் உண்மையான தீவிரவாதி ஆனான்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபேஸ்புக் பதிவு மூலம் அவதூறு பரப்பிய நவாஸ் சாகுலுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின் செல்ல