Published:Updated:

`வீடு பூட்டியிருந்தாலே விற்றுவிடுவார்..!'- கூலித் தொழிலாளிக்கு அதிர்ச்சி கொடுத்த தி.மு.க புள்ளி

கைதுசெய்யப்பட்ட முருகன்
கைதுசெய்யப்பட்ட முருகன்

அந்த ஆவணத்தில் ஒரு தனியார் அச்சகத்தின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. அரசு ஆவணங்களை தனியாரிடம் கொடுத்து அச்சடிப்பது இல்லை.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் இந்திரா நினைவு கூட்டுக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்குள்ள திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் சுபாஷ். தினக்கூலி தொழிலாளியான சுபாஷுக்கும் அவரது மனைவி வேலம்மாளுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவச வீடும் வீட்டுமனையும் வழங்கப்பட்டது. அதில் அவர்கள் குடியேறி உள்ளனர்.

இந்தநிலையில் சுபாஷுக்கு அந்தமானில் வேலை கிடைத்தது. சுபாஷ் அவரது மனைவி வேலம்மாளையும் அழைத்துக்கொண்டு அந்தமான் சென்றுவிட்டார். சுபாஷ் தனது மனைவியின் சகோதரனான சண்முகம் என்பவரிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த சண்முகம் அவ்வப்போது அஞ்சுகிராமம் சென்று வீட்டைப் பார்த்துச் செல்வது வழக்கம்.

முருகன் தயாரித்த போலி ஆவணம்
முருகன் தயாரித்த போலி ஆவணம்

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான முருகன் என்பவர் சுபாஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். மேலும் பழைய பூட்டுக்குப் பதிலாகப் புதிய பூட்டும் போட்டுள்ளார். சண்முகம் அங்குசென்று பார்த்தபோது பழைய பூட்டு மாற்றப்பட்டு புதிய பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அங்குள்ளவர்கள் முருகன் அந்தப் பூட்டை மாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டைப் பாதுகாக்கும் சண்முகம் இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் முருகனிடம் கேட்டுள்ளார். அதற்கு, `அந்த வீடு எனக்குச் சொந்தமானது' எனக் கூறியதுடன், அதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார். மேலும் இந்த வீட்டுக்கு யாராவது சொந்தம் கொண்டாடினால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அந்தமானில் இருக்கும் சுபாஷுக்குத் தகவல் கூறியிருக்கிறார் சண்முகம். அரசு தனக்கு ஒதுக்கிய வீட்டை இன்னொருவர் எப்படி உரிமை கொண்டாடமுடியும். எனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி சண்முகத்திடம் சுபாஷ் கூறியுள்ளார்.

`கொரோனா கத்துக்கொடுத்த பாடம்... இயற்கை விவசாயம் செய்யப்போறேன்!' - நடிகர் செந்தில்

இதையடுத்து சண்முகம் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் முருகன் போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வீட்டை அபகரிக்க முயன்றது வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் இதுபோன்று பல வீடுகளை முருகன் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "முன்னாள் கவுன்சிலர் முருகன் மீது வந்த புகாரை அடுத்து அவரிடம் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தோம். அந்த ஆவணத்தில் ஒரு தனியார் அச்சகத்தின் பெயர் அச்சிடப்படிருந்தது. அரசு ஆவணங்களை தனியார் பிரஸில் அச்சடிப்பது இல்லை.

கைது
கைது
மாதிரிப் படம்

அதுபோல ஆவணத்தின் மேல் பகுதியில் உள்ள தாசில்தார் கையெழுத்தில் 2005-ம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணத்தின் அடிப்பகுதியில் உள்ள கையெழுத்தில் 2010-ம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முருகன் போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.

அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பிரின்டிங் பிரஸில் சென்று விசாரணை நடத்தினோம். அந்த ஆவணத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அவர்கள் கூறினர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்தக் காலனியில் இரண்டு மாதத்துக்கு மேல் ஒரு வீடு பூட்டியிருந்தால் போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வீடுகளை விற்பனை செய்ததாகவும் அப்பகுதியினர் கூறுகிறார்கள். அதுகுறித்தும் அரசு ஆவணங்கள், சீல்களை போலியாக தயாரித்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு