Published:Updated:

மதம்மாறி 2 திருமணம் செய்த குமரி இன்ஜினீயர்! - ஃபேஸ்புக் பதிவால் கொதித்த மும்பை மனைவி

தனக்கும் ஷகிலாவுக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார் தங்க பென்சன். இதைக் கண்டு அதிர்ச்சியான முதல் மனைவி பாத்திமா மும்பையிலிருந்து கணவனைத் தேடி குமரி வந்தார்.

இரண்டாவது மனைவி ஷகிலாவுடன் தங்க பென்சன்
இரண்டாவது மனைவி ஷகிலாவுடன் தங்க பென்சன்

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்தவர் தங்க பென்சன் (36). இன்ஜினீயரான இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணிபுரிந்துவந்தார். அப்போது கணவனை இழந்த மும்பையைச் சேர்ந்த பாத்திமா (39) என்ற பெண்ணுக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தாயுடன் தனியாக வசித்துவந்த பாத்திமாவை திருமணம் செய்வதற்காக இஸ்லாமியராக மதம்மாறிய தங்க பென்சன் தனது பெயரையும் முகமது அலிஷேக் என மாற்றிக்கொண்டார்.

முதல் மனைவி பாத்திமாவுடன் தங்க பென்சன்
முதல் மனைவி பாத்திமாவுடன் தங்க பென்சன்

கடந்த 2010-ம் ஆண்டு பாத்திமாவுக்கும் முகமது அலிஷேக்கிற்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்கள் குழந்தைகளுடன் மெக்கா புனிதப் பயணமும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு மனைவி குழந்தைகளுடன் குமரி மாவட்டம் செண்பகராமன்புதூருக்கு வந்தார் தங்கபென்சன் என்ற முகமது அலிஷேக்.

அங்கு தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவந்தார். பின்னர், நாகர்கோவிலில் ஒரு கம்பெனியில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வெளியூரில் வேலை கிடைத்திருப்பதாக கூறியவர் மனைவி மற்றும் குழந்தைகளை மும்பையில் கொண்டு போய்விட்டார். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிய தங்கபென்சனுக்கும் செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஷகிலா என்ற கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஷகிலாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாறியிருக்கிறார் தங்க பென்சன். பின்னர் தனக்கும் ஷகிலாவுக்கும் திருமணம் ஆன புகைப்படத்தைக் கடந்த ஜூன் மாதம் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முதல் மனைவி பாத்திமா மும்பையிலிருந்து கணவனைத் தேடி குமரி வந்தார்.

இரண்டாவது மனைவி ஷகிலாவுடன் தங்கபென்சன்
இரண்டாவது மனைவி ஷகிலாவுடன் தங்கபென்சன்

அப்போது, தனது தாயைக் கவனிப்பதற்காக உள்ளூரில் ஒரு பெண்ணை திருமணம் செய்திருப்பதாக கூலாக பதில் சொல்லியிருக்கிறார் தங்க பென்சன். இதனால் அதிர்ச்சியான பாத்திமா, `என்னை அழைத்திருந்தால் நானே வந்து உன் அம்மாவை கவனித்திருப்பேனே' என வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரமான தங்கபென்சனும் அவரது தாய் தமிழ்செல்வி, இரண்டாவது மனைவி ஷகிலா ஆகியோர் ஒன்று சேர்ந்து பாத்திமாவை தாக்கியுள்ளனர்.

தமிழ் தெரியாததால் என்ன செய்வது எனத் தெரியாத பாத்திமா மும்பை சென்று தமிழ்ச் சங்கத்தினரை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். அங்குள்ள சில பெண்களின் உதவியுடன் மீண்டும் குமரி மாவட்டம் வந்த பாத்திமா, கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தங்கபென்சன் மீது புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார் தங்க பென்சனைக் கைது செய்தனர்.