Published:Updated:

`ஒரே மகன் இப்படிப் பண்ணிட்டானே?' - மணமாகி 20 நாளில் பெண்ணைக் கடத்திய இளைஞர்; தந்தையின் விபரீத முடிவு

`உன்னை எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். என்னை யாரும் தேடவேண்டாம்' என கணவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளர்.

வேல்முருகன் - ராஜ்ஸ்ரீ திருமணத்தின்போது
வேல்முருகன் - ராஜ்ஸ்ரீ திருமணத்தின்போது

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(26). இவர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மேல கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜஸ்ரீ (23) என்ற பெண்ணிற்கும் கடந்த நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வேல்முருகன், பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் மனைவியைக் காணவில்லை. அவர் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் ராஜஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை.

கட்டையால் தாக்கிவிட்டு 108-க்கும் தகவல் சொன்னார்!- குமரியில் கணவன் கொலையில் சிக்கிய மனைவி

அப்போது அவரது மொபைலுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதில் ராஜஸ்ரீயின் குரல் ஒலித்தது, ``உன்னை எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு விரும்பிய வாழ்வை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். என்னை யாரும் தேடவேண்டாம்" என பேசியிருந்தார். இதுகுறித்து வேல்முருகன் வெளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜஸ்ரீயின் வீட்டின் அருகில் வசித்து வந்த சந்தோஷ் என்ற இளைஞருடன் அவர் சென்றது தெரியவந்தது.

ஜெயஸ்ரீயும், சந்தோஷ் ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்று தகவல் கிடைக்காததால் போலீஸாரின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தநிலையில் சந்தோஷின் தந்தை ஜெகதீசன் நேற்று இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கருப்புக்கோடு பகுதியில் சடலமாக அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சந்தோஷ்
சந்தோஷ்

இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறுகையில், ``திருமணத்துக்கு முன்பே ஜெயஸ்ரீக்கும் சந்தோஷுக்கும் காதல் இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்ரீக்கு திருமணம் நடந்துள்ளது. ராஜஸ்ரீக்கு திருமணம் ஆகி சிலநாள்களுக்குப் பிறகு சந்தோஷுடன் போனில் பேசியிருக்கிறார். அப்போது, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ராஜஸ்ரீ நகைகள் மற்றும் பொருட்களுடன் தயாராக இருந்திருக்கிறார். சந்தோஷ் தன் நண்பர்களுடன் சென்று ஜெயஸ்ரீயை அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் பெங்களூரில் இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சந்தோஷின் தந்தை தற்கொலை செய்துள்ளார். ஒரே மகன் இப்படி செய்துவிட்டானே என்ற சோகத்தில் தந்தை தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.