கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆன்லைன் வகுப்புக்காக அவர் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த செல்போன் மூலம் மாணவி ஆன்லைன் வகுப்பில் படித்துவந்துள்ளார். வகுப்பு இல்லாத சமயங்களில் மாணவி, பெற்றோருக்குத் தெரியாமல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதில் சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கலையரசன் (24) என்பவருடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாணவியிடம் கலை அரசன் வாட்ஸ்அப் மூலம் பேசிவந்திருக்கிறார். கலை அரசன் மாணவியிடம் ஆசையைத் தூண்டும்விதமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மாணவியை நேரில் பார்க்க வேண்டும் எனத் தனது ஆசையை தெரிவித்துள்ளார் கலையரசன். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் வந்த கலையரசன் ஒரு தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். பின்னர் மாணவியை போனில் தொடர்புகொண்டு அந்த விடுதிக்கு வரும்படி அழைத்திருக்கிறார் கலையரசன். விடுதிக்குச் சென்ற மாணவியை கலையரசன் சிறார் வதை செய்ததாகக் கூறப்படுகிறது. அதை மாணவி தன் பெற்றோரிடம் கூறவில்லையாம். அதனால், கலையரசன் மார்த்தாண்டத்துக்கு அடிக்கடி வருவதும், மாணவியைச் சிறார் வதை செய்வதுமாக இருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்த கலையரசன் இரவு நேரத்தில் மாணவியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மாணவி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அவரை சிறார் வதை செய்துள்ளார் கலையரசன். பின்னர் மாணவியின் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்காக கலையரசன் சுவர் ஏறி குதித்திருக்கிறார். இதைக் கண்ட அந்தப் பகுதியினர், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டான் என நினைத்து கலையரசனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கலையரசனை ஒப்படைத்தனர். அங்கு போலீஸார் விசாரணை நடத்தியபோது மாணவியைச் சிறார் வதை செய்ததாக கலையரசன் கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் போக்சோ வழக்கு பதிவுசெய்து கலையரசனை சிறையில் அடைத்தனர்.